உத்தரபிரதேச மாநிலத்தின் ஷாஜகான்பூர் மாவட்ட நிர்வாகம் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் ஒவ்வொரு கிராம பஞ்சாயத்து தலைவர்களும் சாலையில் திரியும் 10 மாடுகளை பாதுகாப்பாக தொழுவத்தில் வைத்து பராமரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகளால் பெரும் பிரச்சனை உருவாகி உள்ளது. ஆயிரக்கணக்கான மாடுகள் மாநிலத்தின் சாலைகள், வீதிகள் என அனைத்து பகுதிகளிலும் உலா வருகின்றன. நகர்ப்புறங்களில் சாலைகளில் சுற்றும் மாடுகளால் கடுமையான போக்குவரத்து பாதிப்பும், சில சமயங்களில் விபத்துகளும் நடந்தேறுவது அதிகரித்துள்ளது. கிராமப்புறங்களில் கூட்டம், கூட்டமாக சென்று பயிர்களை தின்றும் நாசம் செய்கின்றன.
கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் கூட மாடுகள் பிரச்சனை பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில், ஷாஜகான்பூர் மாவட்டத்தில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண, ஒவ்வொரு கிராம பஞ்சாயத்து தலைவர்களும் சாலையில் சுற்றித் திரியும் 10 மாடுகளை பாதுகாப்பாக தொழுவத்தில் வைத்து பராமரிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தால் சாலைகளில் மாடுகளின் தொல்லை குறைந்து உள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட தலைமை வளர்ச்சி அதிகாரி ஷியம் பகதூர் சிங் கூறுகையில், “சாலையில் சுற்றி திரியும் மாடுகளின் தொல்லை குறித்து பொதுமக்களிடம் இருந்து ஏராளமான புகார்கள் வந்தன. இதனையடுத்து, கிராம பஞ்சாயத்து தலைவர்களை இதில் ஈடுபடுத்தும் திட்டம் கொண்டு வரப்பட்டது. மாவட்டத்தில் உள்ள 1069 கிராம பஞ்சாயத்துக்களில் மொத்தம் 6 ஆயிரம் மாடுகள் தொழுவத்தில் அடைக்கப்பட்டுள்ளன” என்றார். ராம்பூர் பர்கத் பஞ்சாயத்து தலைவர் கூறுகையில், “மாவட்ட நிர்வாகத்தின் நூதன திட்டத்தால் சாலைகளில் மாடுகள் முன்பினை விட சுற்று திரிவது குறைந்துள்ளது” என்றார். உத்தர பிரதேசத்தைப் போன்று தமிழகம் மற்றும் இன்ன பிற மாநிலங்களிலும் இதை பிரச்சினை நீண்ட நாட்களாக நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிந்தால், அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பதுடன் சில சமயங்களில் கால்நடைகளை பறிமுதல் செய்யும் வழக்கமும் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. பறிமுதல் செய்யப்படும் மாடுகள் கோசலையில் ஒப்படைக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. இந்நிலையில், உத்தரபிரதேசத்தின் ஷாஜகான்பூர் மாவட்டம் கையிலெடுத்துள்ள நூதன திட்டம் பிரச்சனைக்கு தீர்வு தரும் வகையில் அமையுமாயின் மற்ற மாநிலங்களும் இதனை பின்தொடர வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க:
விவசாயத்துறையில் இளைஞர்கள் அதிகளவில் பங்களிக்கவும்-ஒன்றிய அமைச்சர் தோமர் வேண்டுக்கோள்
என்னங்க சொல்றீங்க..24 வருஷமா தேங்காயை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழ்கிறாரா?
Share your comments