கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசன அமைப்புகளில் உள்ள பாசனத்திற்காக பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை நாளுக்குநாள் தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் கேரளாவை ஒட்டிய கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர் மட்டும் வேகமாக நிறம்பி வருகிறது.
அணை திறப்பு
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசன அமைப்புகளில் உள்ள பாசனத்திற்குத் தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வேளாண் பெருங்குடி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதனை ஏற்றுத் தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.
48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் தற்போதைய நீர்மட்டம் 39 அடியாகவும், உள்வரவாக வினாடிக்கு 411 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதில் இருந்து பாசனத்திற்காக 850 கன அடி தண்ணீர் இன்று திறக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் முன்னிலையில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் மதகுகளை திறந்து வைத்தார்.
மாவட்டத்தின் நீர் ஆதாரமாக இருந்து வரும் இந்த அணை தண்ணீரானது வரும் ஜனவரி மாதம் 28ம் தேதி வரை திறக்கப்படும். இதனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசனப் பகுதிகளில் உள்ள 79,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
அமராவதி, திருமூர்த்தி அணை நீர்மட்டம் சரிவு
மேலும், திருப்பூர் மாவட்டத்தில் பருவமழை தாமதமாகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகள் உள்ளன. இதில் 90 அடி கொள்ளளவு கொண்ட அமராவதி அணையில் பருவமழை தாமதம் காரணமாக நீர்மட்டம் 26.25 அடியாக உள்ளது. நீர்வரத்து 92 கன அடியாகவும், வெளியேற்றம் 6கன அடியாகவும் உள்ளது.
இதேபோல 60அடி கொள்ளளவு கொண்ட திருமூர்த்தி அணையிலும் 24.81 அடி அளவிற்கே நீர்மட்டம் உள்ளது. அணையிலிருந்து குடிநீருக்காக வினாடிக்கு 27 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அமராவதி அணையை பொறுத்தவரை திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் மட்டும் சுமார் 54 ஆயிரம் ஏக்கர் விளைநிலம் பாசன வசதி பெறுகிறது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையிலும் திருப்பூர் மாவட்டத்தில் மழை பொழிவு இல்லை இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். கேரளாவில் துவங்கியுள்ள பருவமழை விரைவில் தமிழகத்திலும் நல்ல மழை பொழிவை தரும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
மேலும் படிக்க
தீவிரமாகும் பருவமழை - அணைகள் திறப்பு
WhatsApp-ல் இனி கேஸ் பதிவு செய்யலாம், பாரத் பெட்ரோலியம் அறிமுகம்!
Share your comments