சென்னை மக்களுக்கான சிறப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள மக்கள் பொது இடங்களுக்குச் செல்லும் போது முகக்கவசம் அணிவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் வசூலிக்கப்படும் என்ற கெடுபிடியிலிருந்து மட்டுமே விலக்களிக்கப்பட்டுள்ளது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இன்று அமைச்சர் மா. சுப்பிரமணியன், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பதால் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. அவற்றிற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர், "டெல்லி, ஹரியாணா, மகாராஷ்டிரா மாநிலங்களில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாகத் தகவல் வருகிறது. மக்கள் கொரோனாவிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள தொடர்ந்து பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் போன்ற நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம் என்றார். அரசு, முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் வசூலிக்கப்படும் என்ற கெடுபிடியிலிருந்து மட்டுமே விலக்களித்திருக்கிறது என்றும், முகக்கவசம் அணிய வேண்டும் என்ற கொரோனா வழிகாட்டு நெறிமுறையிலிருந்து விலக்களிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும், இதுவரை முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தாதோர் தாமாக முன்வந்து தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். தேவைப்பட்டால் மாவட்டந்தோறும் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்துவது பற்றி ஆலோசிக்கப்படும்" எனவும் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, "விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் சேவைகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்காமல், தனியார் மருத்துவமனையில் அனுமதித்ததாக புகார் வந்தால் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரித்தார்.
இதற்கிடையில், பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டார். தமிழகத்தில் அன்றாடம் வெறும் 25 என்றளவில் இருந்து தொற்று கடந்த சில நாட்களாக 30 என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது என்றும், எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என்றும் அவர் அந்த சுற்றறிக்கையில் சுட்டிக் காட்டி உள்ளதாக கூறினார்.
கொரோனா ஒமிக்ரான் வைரஸின் XE திரிபால் சீனா, ஹாங்காங், பிரிட்டன் போன்ற பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக 1000க்கும் மேல் அன்றாட தொற்று பதிவாகி வருகிறது. இந்தியாவில் ஜூன் மாதம் அடுத்த கொரோனா அலை பாதிப்பு ஏற்படலாம் எனக் கூறப்படும் நிலையில் மக்கள் முகக்கவசம் அணிவதை, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதைக் கைவிடக் கூடாது என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:
கோடை விடுமுறைக்கு தென்னிந்தியாவில் சிறப்பு சுற்றுலா தலங்கள்
தமிழகம்: தனியார் பள்ளிகளில் இலவசமாக மாணவர் சேர்க்கை தொடக்கம்
Share your comments