உலகம் முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா மட்டுமின்றி அனைத்து நாடுகளிலும் பெரும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில் வெப்பத்தின் தாக்கத்தை தணிக்கவும், பயிர் தரத்தை பாதுகாக்கவும் அமெரிக்க விவசாயிகள் அறுவடை பணியினை இரவு நேரத்தில் மேற்கொண்டு வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.
இதுக்குறித்து வாஷிங்டன் போஸ்டில் வெளியாகியுள்ள கட்டுரையில் இரவு நேரத்தில் அறுவடை பணிகளை மேற்கொள்வதால் உண்டாகும் நன்மை மற்றும் பாதிப்புகள் குறித்து விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கோடைக்காலத்தில் நிலவிய வெப்பம் என்பது இதுவரை இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தை தொட்டிருப்பது நாம் அனைவரும் அறிந்ததே.
இந்தியாவை எடுத்துக்கொண்டால் நடப்பாண்டில் தக்காளி போன்ற பயிர்கள் கோடை வெப்பத்தில் கருகின. இவற்றால் விளைச்சல் அளவு குறைந்தது. சந்தையில் தக்காளியின் தேவையும் அதிகரித்ததால் கிலோ ரூ.200 வரை சென்றது.
அமெரிக்காவில் உள்ள விவசாயிகள், இந்த கடுமையான வெப்பம் வெயிலில் அறுவடை செய்யும் விவசாயிகளுக்கு சுகாதார ஆபத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், அவர்கள் பயிரிட்ட பயிர்களின் தரத்தையும் குறைத்தது. இதற்கு மாற்று வழியை நாடிய விவசாயிகள் பழங்கள் மற்றும் காய்கறிகள் குளிர்ச்சியான வெப்பநிலையில் (இரவு நேரத்தில்) எடுக்கப்படும் போது, புத்துணர்ச்சியுடன் நீண்ட காலம் நீடிக்கும் தன்மையுடன் இருப்பதாக சில இரவு நேர விவசாயிகள் வாஷிங்டன் போஸ்ட்டிடம் தெரிவித்து உள்ளனர்.
அதே நேரத்தில், விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரும் இந்த போக்கால் பயனடைவதில்லை எனவும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரவில் அறுவடை செய்வது வெப்பம் தாக்கம் தொடர்பான நோய்களின் அபாயத்தைக் குறைக்கும் என்றாலும், சில பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இரவு நேர அறுவடையின் போது ஏற்படுவதாகவும் பண்ணை தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இரவு நேரத்தில் போதிய வெளிச்சமின்மை நிலவுவதால், தொழிலாளர்கள் தலையில் அடிபடுவது, ஏணியில் இருந்து விழுவது மற்றும் இருட்டில் ஆபத்தை விளைவிக்கும் இடங்களில் காலடி எடுத்து வைப்பது, அபாயம் விளைவிக்கும் விலங்குகளின் அச்சுறுத்தல் போன்றவற்றை சந்திக்க நேர்வதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், அமெரிக்காவின் விவசாயத் துறையால் ஆதரிக்கப்படும் பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிக் குழுவின் கூற்றுப்படி, நாட்டில் தொழிலாளர்களுக்கு விவசாயம் மிகவும் ஆபத்தான தொழிலாக மாறி வருகிறது. 2015 முதல் 2019 வரை சுமார் 60,000 பேர் பண்ணையில் வேலை செய்யும் போது ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர்.
இனி வரும் காலங்களிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கத் தான் வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கும் நிலையில், இரவு நேர அறுவடை பணி இந்தியாவிலும் மேலோங்குமா என கேள்வி எழுந்துள்ளது.
மேலும் காண்க:
Share your comments