ஹரியானாவில் பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY) திட்டத்தில் பதிவு செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது தொடர்பான கேள்விக்கு ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் பதிலளித்துள்ளார்.
PMFBY இத்திட்டமானது 2016-இல் தொடங்கப்பட்டது. விவசாயிகளுக்கு குறைவான பிரீமியத்தில் விரிவான பயிர் காப்பீட்டுத் தொகையை வழங்குகிறது. இது இயற்கை சீற்றங்கள், பூச்சிகள் அல்லது நோய்களால் ஏற்படும் பயிர் இழப்புகளுக்கு சரியான நேரத்தில் இழப்பீடு வழங்குகிறது. இந்தத் திட்டம் மில்லியன் கணக்கான விவசாயிகளுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்கி வருகிறது.
ராஜ்யசபா எம்.பி பிரபாகர் ரெட்டி வெமிரெட்டியின் கேள்விக்கு, ஒன்றிய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் சமர்ப்பித்த தரவுகளின்படி , 2019 காரீப்பில், 8.2 லட்சம் விவசாயிகள் PMFBY இன் கீழ் ஹரியானாவில் பதிவு செய்துள்ளனர். இது 2020 காரீப்பில் 8.88 லட்சமாக உயர்ந்துள்ளது. இருப்பினும், காரீஃப் 2021 இல் இந்த எண்ணிக்கை 7.40 லட்சமாக குறைந்தது, இது 16.7 சதவீதம் சரிவு. இதுவே 2022 ஆம் ஆண்டு காரீப் பருவத்தில் 7.42 லட்சமாக சற்று மேம்பட்டது.
இதேபோல், 2019-20 ராபியில், 8.91 லட்சம் விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். இது 2020-21 ராபியில் 14.5 சதவீதம் சரிந்து 7.62 லட்சமாக குறைந்துள்ளது. ரபி 2021-22 இல், எண்ணிக்கை 7.17 லட்சமாக சரிந்தது, இது முந்தைய ஆண்டை விட 5.9 சதவீதம் குறைவு. இத்திட்டத்தின் கீழ் உள்ள விவசாயிகளின் எண்ணிக்கை 2022-23 ராபியில் 6.54 லட்சமாக சரிந்தது. இது முந்தைய ஆண்டை விட 8.8 சதவீதம் சரிந்துள்ளது.
சரிவிற்கான காரணம் என்ன?
இழப்பீடு தொகை வழங்குவதில் தாமதம் மற்றும் பயிர்க் கணக்கெடுப்பில் குறைந்த அளவிலான சேதங்கள் பதிவு செய்யப்பட்டதாக விவசாயிகள் தரப்பில் புகார்கள் கூறப்படுகின்றன.
மேலும் மாநில அரசின் இழப்பீட்டுத் தொகையை பெரும்பாலான விவசாயிகள் நம்பியிருப்பதால், PMFBY திட்டத்தில் இணைய ஆர்வம் குறைந்துள்ளதாக தெரிய வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் வசூலிக்கப்படும் பிரீமியம் மற்றும் செலுத்தப்பட்ட தொகைகள் குறித்து, பிஜேடி எம்பி சஸ்மித் பத்ராவின் எழுப்பிய கேள்விக்கும் அமைச்சர் தோமர் பதிலளித்துள்ளார். அதன்படி ஹரியானாவில் 2018-19 ஆம் ஆண்டில் ரூ. 841.18 கோடி பிரீமியம் வசூலிக்கப்பட்டது, அதே சமயம் ரூ.948.31 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.
2019-20 ஆம் ஆண்டில், ரூ. 1,275.56 கோடி பிரீமியம் வசூலிக்கப்பட்டது, மேலும் செலுத்தப்பட்ட இழப்பீடு ரூ. 937.86 கோடி. 2020-21 ஆம் ஆண்டிலும், வசூலிக்கப்பட்ட பிரீமியம் அதிகமாக இருந்தது (ரூ.1,309.45 கோடி). அதே சமயம் ரூ.1,249.94 கோடி இழப்பீடாக செலுத்தப்பட்டுள்ளது.
2021-22 ஆம் ஆண்டில், ரூ.1,208.76 கோடி பிரீமியமாக பெறப்பட்ட நிலையில், ரூ.1,681.37 கோடி இழப்பீடாக செலுத்தப்பட்டது. இருப்பினும், 2022-23 ஆம் ஆண்டில், ரூ. 1,276.99 கோடி பிரீமியமாக வசூலிக்கப்பட்ட நிலையில், ரூ.629.31 கோடி மட்டுமே இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.
காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுக்கு இடையே நிலவிய பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் ஒன்றிய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் காண்க:
Share your comments