தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று சென்னையில் மாபெரும் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2003ஆம் ஆண்டு வரை அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருந்தது. பின்னர் 2004ஆம் ஆண்டு முதல் பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு தேசிய பென்சன் திட்டம் (NPS) கொண்டுவரப்பட்டது. பங்களிப்பு பென்சன் திட்டத்தில் ஓய்வூதியத்துக்கான உத்தரவாதம் இல்லை என்பது அரசு ஊழியர்களின் பிரச்சினையாக உள்ளது. மேலும் பழைய ஓய்வூதிய திட்டத்தில் கிடைத்த பல்வேறு பலன்களும், சலுகைகளும் தேசிய பென்சன் திட்டத்தில் இல்லை என்கின்றனர்.
பழைய பென்சன் திட்டம் (Old Pension Scheme)
திமுக தேர்தல் வாக்குறுதி அளித்ததற்கு ஏற்ப மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். தமிழ்நாட்டில் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தக் கோரி சென்னையில் பிப்ரவரி மாதம் அனைத்துக் கட்சி ஆதரவு மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மாநாடு
சென்னை சேப்பாக்கம் அண்ணா அரங்கத்தில் பிப்ரவரி 11ஆம் தேதி காலை 10 மணிக்கு இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அன்பு மணி ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர். சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்வோம் என திமுக வாக்குறுதி கொடுத்துள்ள நிலையில் வெற்றிபெற்று 20 மாதங்களைக் கடந்த நிலையில், இதுகுறித்த எந்த முடிவுக்கும் அரசு இன்னும் வரவில்லை. இந்தத் திட்டத்தை ரத்து செய்தாலே அரசுக்கு ரூ.30 ஆயிரம் கோடி உபரி நிதி கிடைக்கும் என்கிறோம்.
சிபிஎஸ் திட்டட்தை ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்தியே மாநில அளவிலான கோரிக்கை மாநாடு பிப்ரவரி 11ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இதில் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். நிச்சயம் எங்களது போராட்டத்தில் வெற்றி பெறுவோம் என்று சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கூறினார்.
மேலும் படிக்க
விரைவில் விசைத்தறிக்கு 1,000 யூனிட் இலவச மின்சாரம்: அமைச்சர் அறிவிப்பு!
Share your comments