கால்நடை மருத்துவம் மற்றும் கோழியின, பால்வள, உணவுத் தொழில்நுட்ப படிப்புகளுக்கு வரும் 12-ம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகிய நிலையில் தமிழகத்தில் உயர்கல்வி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அனைத்து துறைகளிலும் தொடங்கியுள்ளது. பொறியியல் துறையில் பயிலுவதற்கு இணையாக இந்த கல்வியாண்டு வேளாண் துறை, கணிதவியல் துறையில் பயிலவும் மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்புகளுக்கான (BVSc & AH/BTech) மாணவர் சேர்க்கை வருகிற ஜூன் 12 ஆம் தேதி தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைப்பெறும் எனவும், இதில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின்கீழ் 53 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கல்லூரி மற்றும் பட்டப்படிப்பு விவரம்:
கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு (BVSc & AH) தொடர்பான பட்டப்படிப்பு தமிழகத்தில் 7 கல்லூரிகளில் உள்ளது. மொத்த கல்வியாண்டு ஐந்தரை ஆண்டுகள் (MSVE விதிமுறை 2016-ன் படி, 4 ½ ஆண்டுகள் பட்டப்படிப்பு மற்றும் 1 வருட உள்ளிருப்பு பயிற்சி).
சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு (தஞ்சாவூர் மாவட்டம்), தலைவாசல் (சேலம்), உடுமலைப்பேட்டை, வீரபாண்டி(தேனி) ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இக்கல்லூரிகளில் உள்ள மொத்தம் 660 இடங்களுக்கு தற்போது மாணவர் சேர்க்கை நடைப்பெற உள்ளது.
உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பம்:
கோடுவெளியில் உள்ள உணவு மற்றும் பால்வள தொழில்நுட்ப கல்லூரியில் பி.டெக். படிப்புகளில் உணவு தொழில்நுட்ப பிரிவில் (BTech- Food Technology) 40 இடங்களும், பால்வள தொழில்நுட்ப பிரிவில் (BTech- Dairy Technology) 20 இடங்களும் உள்ளன. இந்த இரண்டு பட்டப்படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டது.
கோழியின தொழில்நுட்பம்:
ஓசூர் மாவட்டம் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப படிப்புக்கு (BTech- poultry Technology) 40 இடங்கள் உள்ளன. இந்தப் பட்டப்படிப்பும் 4 ஆண்டுகள் பயிலும் தன்மை கொண்டது.
இடஒதுக்கீடு விவரம்:
(BVSc & AH)-பட்டப்படிப்புகளுக்கான இடங்களில் 15 சதவீதம் இந்திய கால்நடை மருத்துவக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு (அகில இந்திய ஒதுக்கீடு) ஒதுக்கப்பட்டுள்ளது. இதைப்போல் (BTech- Food Technology)-ல் 15 சதவீத இடங்கள் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், (BVSc & AH)-, பி.டெக். படிப்புகளுக்கு 2023-24-ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் வரும் 12-ம் தேதி காலை 10 மணி முதல் 30-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இது தொடர்பான இதர விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
மேலும் காண்க:
சனிக்கிழமையும் பள்ளி? மாணவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அமைச்சர்
Share your comments