வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் (Gas Subsidy) அரசு தரப்பிலிருந்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இது நேரடியாகவே பயனாளிகளின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. முதலில் நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது சிலிண்டருக்கான முழு விலையையும் கொடுத்து வாங்க வேண்டும். பின்னர் அதற்கான மானியத் தொகை உங்களுடைய வங்கிக் கணக்கில் அரசு தரப்பிலிருந்து செலுத்தப்படும்.
மீண்டும் மானியம் (Subsidy)
பலருக்கு மானிய உதவி வங்கிக் கணக்குக்கு வருகிறதா இல்லையா என்பதே தெரிவதில்லை. சமையல் சிலிண்டருக்கான மானியத்தை மத்திய அரசு நிறுத்திவிட்டதா என்ற சந்தேகமும் பலருக்கு உள்ளது. ஏனெனில், சென்ற ஆண்டின் மே மாதம் முதலே பலருக்கு சிலிண்டர் மானியம் கிடைக்கவில்லை. சிலிண்டருக்கான மானிய உதவியைப் படிப்படியாக நிறுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சிலிண்டர் மானியத்தை நிறுத்துவது தொடர்பான அறிவிப்பு அரசிடமிருந்தும் வெளியாகவில்லை. மானிய உதவியும் வந்துசேரவில்லை. இதனால் பயனாளிகளிடையே குழப்பம் இருந்தது.
இந்நிலையில் சிலிண்டருக்கான மானிய உதவியை மத்திய அரசு மீண்டும் வழங்கத் தொடங்கியுள்ளது. தற்போதைய நிலையில் சமையல் சிலிண்டருக்கு ரூ.79.26 மானியம் கிடைக்கிறது. சிலருக்கு ரூ.158.52, சிலருக்கு ரூ.237.78 வழங்கப்படுகிறது. சிலிண்டர் மானியம் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது.
சிலிண்டர் மானியம் ரத்து செய்யப்பட்டு விட்டது என்ற செய்தி தீயாகப் பரவிக் கொண்டிருந்த வேளையில் தற்போது சிலிண்டர் மானியம் மீண்டும் வழங்கப்படுகிறது என்ற செய்தி பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அனைவரும் தங்களது வங்கிக் கணக்கில் மானியத் தொகை வந்துவிட்டதாக என்று சரிபார்க்கத் தொடங்கியுள்ளனர்.
நிபந்தனை
சிலிண்டர் மானியம் பெறுவதற்கு ஆண்டு வருமானம் 10 லட்ச ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. அதேபோல, சிலிண்டர் இணைப்புடன் ஆதாரும் வங்கிக் கணக்கும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
உடனடி LPG இணைப்புக்கு புதிய வசதி!
வங்கிகளுக்கு டிசம்பரில் 16 நாட்கள் விடுமுறை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
Share your comments