Old Pension Scheme
மத்திய அரசு வழங்கும் அதே நாளில் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் தமிழக அரசு அகவிலைப்படியை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழைய ஓய்வூதிய திட்டம் (Old Pension Scheme)
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மத்திய அரசு வழங்கும் அதே நாளில் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் தமிழக அரசு அகவிலைப்படியை வழங்க வேண்டும், நிறுத்தப்பட்ட ரயில் பயண கட்டண சலுகையை உடனே வழங்க வேண்டும் உள்பட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சிராஜுதீன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட பொருளாளர் துளசிராமன், மாநில செயலாளர் செந்தமிழ் செல்வன், மாவட்ட செயலாளர் மதிவாணன், சங்க கிளை நிர்வாகிகள் வெள்ளைச்சாமி நாகராஜன் கலைவாணன் ராஜப்பா உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதேபோல, நெல்லையில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை உடனடியாக சரி செய்திட மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம்
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை கலைந்து விட வேண்டும், ரயில் பயணங்களில் மூத்த குடிமக்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கட்டண சலுகையை மத்திய அரசு உடனடியாக வழங்கிட வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியம் 12,000 ஆக வழங்கிட வேண்டும், சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வு ஊதியம் அறிவித்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் நெல்லையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஓய்வூதியர்கள் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுக்கும் வகையில் கோஷங்களை முழங்கினர். மேலும் உடனடியாக மத்திய, மாநில அரசுகள் அனைத்து துறை ஓய்வூதியர் சங்க கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்; இல்லையெனில் அடுத்த கட்ட போராட்டம் மேற்கொள்ளப் போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க
பென்சனர்கள் கவனத்திற்கு: இந்த சேவையைப் பற்றி தெரியுமா?
ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்: பொங்கலுக்கு சூப்பர் அறிவிப்பு!
Share your comments