மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஆகஸ்ட் 10 மற்றும் 11 ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூர், திருவாரூர் உட்பட 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுத்தொடர்பாக அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை குறித்த அறிவிப்பினை சென்னை வானிலை மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றின் விவரம் பின்வருமாறு-
09.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
10.08.2023 மற்றும் 11.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
12.08.2023 முதல் 15.08.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை:
09.08.2023 மற்றும் 10.08.2023: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்; ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 - 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress } காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை;
09.08.2023 மற்றும் 10.08.2023: தென்தமிழக கடலோரப்பகுதிகள். மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல், மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் மீனவர்களுக்கு எத்தகைய எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் குறிப்பிட்ட பகுதிக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுவதாக சென்னை வானிலை மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார். மேலும் வானிலை தொடர்பான தகவல்களை தெரிந்துக்கொள்ள Mausam.imd.gov.in/Chennai என்கிற இணையதளத்தை காணவும்.
மேலும் காண்க:
தேசிய விலங்கு பசுவா? ஒன்றிய அமைச்சர் தந்த விளக்கம்
WhatsApp-ல் உங்களது ஸ்கீரினை எப்படி மற்றவருக்கு ஷேர் செய்வது?
Share your comments