இந்தியாவிலேயே முதன்முறையாக Whatsapp வழியாகப் புக்கிங் செய்யும் வகையில் ஆட்டோ சேவை தொடங்கப்பட்டுள்ளது. இது கோயம்புத்தூரில் அறங்கேறியுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம்.
இந்தியாவில் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் போக்குவரத்து வசதிகளுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. பெரும்பாலும் பொதுமக்கள் சொந்த வாகனங்களில் பயணம் செய்வதை விட வாடகை வாகனங்களில் பயணம் செய்வதில் அதிக விருப்பம் கொள்கின்றனர். இதற்காக ஓலா, உபேர், ரேபிடோ உள்ளிட்ட செயலிகள் அதிகம் உள்ள நிலையில், வாட்ஸ் ஆப் மூலமாக எளிமையாகப் புக்கிங் செய்து பயணம் செய்யும் வகையில் இந்தியாவிலேயே முதன்முறையாக ஊர் கேப்ஸ் (OOR Cabs) எனும் புதிய பயண சேவை திட்டமானது கோவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன் துவக்க விழா கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது. ஊர் கேப்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மரிய ஆண்டணி தலைமையில் நடைபெற்ற துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற காவல் துறை கூடுதல் ஆணையர் மகுடபதி குப்பணன் கலந்து கொண்டு இச்சேவையைத் தொடங்கி வைத்தனர்.
இதுகுறித்து ஊர் கேப்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான மரிய ஆண்டணி பேசுகையில், “இந்தியாவிலேயே முதன்முறையாக வாட்ஸ் ஆப் செயலி வழியாகப் புக்கிங் செய்யும் வகையில் இந்த பயணச் சேவை திட்டத்தைத் தொடங்கியுள்ளோம். முதல் கட்டமாக இந்த ஆட்டோ சேவை கோவையில் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து வாகனங்களையும் இணைத்துஇந்தியா முழுவதும் இந்த சேவை திட்டத்தை தொடர உள்ளோம்”என்று கருத்துத் தெரிவித்தார்.
ஊர் கேப்ஸ் வாட்ஸ் ஆப் சேவையைப் பெற 8098480980 என்ற எண்ணில் தொடர்பு கொள்வதன் மூலம் எந்த இடத்திலிருந்து வேண்டுமானாலும் இந்த ஆட்டோ பயணச் சேவையை எளிதாக பெறலாம் எனக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க
Share your comments