ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள ‘கிரெடிட் கார்டு’ விநியோகத்திற்கான புதிய விதிமுறைகள் தொடர்பாக அறிய வேண்டிய முக்கிய அம்சங்கள். கிரெடிட் கார்டு விநியோகம் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய வழிகாட்டுதல்களை அண்மையில் வெளியிட்டது. ஜூலை மாதம் முதல் அமலுக்கு வரும் இந்த வழிகாட்டுதல்கள், கிரெடிட் கார்டு தொடர்பான விதிமுறைகள் மற்றும் செயல்முறையில் மேலும் வெளிப்படையான தன்மையை அளிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும், கிரெடிட் கார்டு பயன்பாட்டை பரவலாக்குவதோடு, தவறான விநியோகம் உள்ளிட்டவற்றில் இருந்து நுகர்வோரை பாதுகாக்கவும் புதிய வழிகாட்டுதல்கள் உதவும் எனக் கருதப்படுகிறது.
முக்கிய அம்சங்கள் (Special Features)
நுகர்வோர் பயன்பாடு, புதிய கிரெடிட் கார்டு வழங்குவது மற்றும் ஏற்கனவே பயன்படுத்தப்படும் கார்டுகளை மூடுவது தொடர்பாக தெளிவான வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
- நுகர்வோர் கோரிக்கை வைக்காமல் கார்டு வழங்கப்படக்கூடாது என்றும், கார்டு பயன்பாட்டிற்கான கட்டணம் மற்றும் வட்டி விகிதங்கள் வெளிப்படையான முறையில் குறிப்பிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வட்டி விகிதங்கள் அளவுக்கு அதிகமாக இல்லாமலும் இருக்க வேண்டும். மேலும், கிரெடிட் கார்டை நுகர்வோர் மூடிவிட விரும்பினால், அதற்கான கோரிக்கை பெறப்பட்ட ஏழு நாட்களுக்குள் கார்டை மூட வேண்டும். அதற்கு மேல் தாமதமாகும் நாட்களுக்கு நுகர்வோருக்கு நஷ்ட ஈடு அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு, கார்டில் நிலுவைத்தொகை இல்லாமல் இருக்க வேண்டும்.
- எந்த ஒரு கிரெடிட் கார்டும் ஓராண்டு காலத்திற்கு மேல் பயன்படுத்தப்படாமல் இருந்தால், நுகர்வோருக்கு தகவல் தெரிவித்து வீட்டு கார்டை மூடுவதற்கான செயல்முறையை துவக்க வேண்டும்.
- அறிவிப்பு பெற்ற 30 நாட்களுக்குள் நுகர்வோர் பதில் அளிக்காவிட்டால், நிலுவைத்தொகை பைசலுக்கு பின் கார்டை மூட வேண்டும். கார்டு மூடப்பட்ட தகவலை கிரெடிட் பீரோக்களுக்கும் தெரிவிக்க வேண்டும்.
- கார்டு மூடப்பட்ட பின், கார்டு கணக்கில் மிச்சத்தொகை இருந்தால் பயனாளி வங்கி கணக்கிற்கு மாற்றப்பட வேண்டும்.
- வங்கிசாரா நிதி நிறுவனங்கள் கிரெடிட் கார்டு வழங்குவது தொடர்பான வழிகாட்டுதல்களும் இந்த விதிமுறையில் அடங்கியுள்ளன. கிராமப்புற வங்கிகள் அல்லாத மற்ற வங்கிகள் தனியாக அல்லது கார்டு நிறுவனங்களுடன் இணைந்து கார்டு வழங்கலாம்.
- அதே போல, 100 கோடிக்கு மேல் நிதி கொண்டுள்ள வங்கிசாரா நிதி நிறுவனங்கள், ரிசர்வ் வங்கியிடம் இருந்து அனுமதி பெற்று கார்டு வெளியிடலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தகுதி உள்ள வங்கிசாரா நிதி நிறுவனங்களும் கார்டு வெளியிடுவதில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு உண்டாகி உள்ளது.
வங்கிசாரா நிதி நிறுவனங்கள் உரிமம் பெற்றுள்ள தொழில்நுட்பம் சார்ந்த நிதிநுட்ப நிறுவனங்களும், கார்டு வெளியிடும் வாய்ப்பை புதிய விதிமுறைகள் அளிப்பதாக கருதப்படுகிறது. இதன் காரணமாக கிரெடிட் கார்டு பிரிவில் மேலும் போட்டி அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியால், நுகர்வோருக்கான புதிய வசதிகள் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பின்னணியில் கார்டு சேவை தொடர்பான புதிய நெறிமுறைகள் மேலும் வெளிப்படையான தன்மையை கொண்டு வருவதோடு, நுகர்வோர் நலன் காக்கும் திசையில் அமைந்திருப்பதாகவும் கருதப்படுகிறது. கிரெடிட் கார்டு பயன்பாடு பரப்பை அதிகரிக்கவும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க
அனுமதி இன்றி கிரெடிட் கார்டு கொடுத்தால் அபராதம்: ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!
Share your comments