திருவள்ளூர் மாவட்டம், தொடுகாடு ஊராட்சியில் அரசு பள்ளி கட்டடம் கட்ட, 10 சென்ட் நிலத்தை, அரசு மருத்துவர் தானமாக வழங்கியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியம், தொடுகாடு ஊராட்சிக்குட்பட்ட நமச்சிவாயபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஷ்குமார், 47. திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வரும் இவருக்கு, மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர்.
10 சென்ட் நிலம் (10 Cents Land)
நமச்சிவாயபுரம் கிராமத்தில், 1962ம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான பள்ளி கட்டடம் எந்த நேரத்தில் இடிந்துவிழும் அபாய நிலையில் இருந்தது. மாணவர்கள் நலன் கருதி, அதை இடித்து, புதிய கட்டடங்களை கட்டுவதற்கு போதிய இடவசதி இல்லை. இதுகுறித்து தகவலறிந்த ஜெகதீஷ்குமார், தனக்கு சொந்தமான 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 10 சென்ட் நிலத்தை அரசு பள்ளிக்கு தானமாக வழங்க முன்வந்தார்.
இதையடுத்து, கடம்பத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர் ராம்குமார் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசன் முன்னிலையில், ஸ்ரீபெரும்புதுார் சார் - பதிவாளர் அலுவலகத்தில், நிலத்தை தானமாக வழங்கி நேற்று ஜெகதீஷ்குமார் பத்திரப்பதிவு செய்தார்.இந்த செயல், நமச்சிவாயபுரம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இவரது தந்தை, அதே பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்து வந்தது குறிப்பிடத்தக்கது. அரசு மருத்துவரின் இந்த உயர்ந்த எண்ணம், பல மாணவ, மாணவியர்களின் கல்விக்கு உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
மேலும் படிக்க
Share your comments