புதிய பென்சன் திட்டத்தில் பணத்தை எடுத்த ஊழியர்கள் பழைய பென்சன் திட்டத்தில் பயன்பெற முடியாது என்று மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அரசு ஊழியர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
பழைய ஓய்வூதியத் திட்டம்
நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த கோரிக்கைகள் வலுத்துள்ளன. ஒரு சில மாநிலங்கள் அமல்படுத்திவிட்ட நிலையில், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இழுபறி நீடிக்கிறது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநில அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில் மகிழ்ச்சியான செய்தி வந்தது. ராஜஸ்தான் சிவில் சர்வீசஸ் பங்களிப்பு ஓய்வூதிய விதி (2005) ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது.
ஊழியர்கள் மகிழ்ச்சி
இந்த அறிவிப்பின்படி, 2004ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி மற்றும் அதற்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்த ஊழியர்கள், ஓய்வு பெற்றவுடன் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பென்சன் பெற தகுதியுடையவர்கள் ஆவர். இதன்படி, 2022 மார்ச் 31க்கு முன் பணியில் இருந்து வெளியேறிய ஊழியர்களுக்கும் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த விதியின்படி ஓய்வூதியப் பலன்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
50%
ராஜஸ்தான் மாநில அரசு, பணி ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு சம்பளத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக வழங்கும் விதியை சட்டப்பூர்வமாக அமல்படுத்தியுள்ளது. அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் பழைய ஓய்வூதியத்தை மீண்டும் அமல்படுத்துவதாக அறிவித்தார்.
2004 ஏப்ரல் 1க்குப் பிறகு ராஜஸ்தான் மாநிலத்தில் அரசுப் பணியில் சேர்ந்த ஊழியர்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டனர். இப்போது ராஜஸ்தான் அரசு ஏப்ரல் 1 முதல் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 10 சதவிகித அடிப்படைப் பிடித்தத்தை நிறுத்தியுள்ளது.
அரசு எச்சரிக்கை
ராஜஸ்தான் மாநில அரசு ஊழியர்களுக்கு இப்போது புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது, புதிய பென்சன் திட்டத்தில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை எடுத்தவர்கள் பழைய பென்சன் திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அம்மாநில முதல்வர் தற்போது வெளியிட்டுள்ளார். புதிய பென்சன் திட்டத்தில் பணத்தை எடுக்கக்கூடாது என்று மாநில நிதியமைச்சகம் சுற்றறிக்கை விட்டுள்ளது.
மேலும் படிக்க...
Share your comments