Krishi Jagran Tamil
Menu Close Menu

மழை வருவதை முன்பே அறிய வேண்டுமா? இதோ உங்களுக்கான எளிய வழி

Tuesday, 01 October 2019 05:22 PM

ஆறு அறிவுள்ள மனிதனால் அறிந்து கொள்ள முடியாத பல ரகசியங்களை இந்த பிரபஞ்சத்தில் இறைவன் ஒளித்து வைத்துள்ளான் என்றால் நம்மால் நம்ப முடிகிறதா? என்ன தான் நாம் தொழில்நுட்பத்திலும், கல்வியில் சிறந்து விளங்கினாலும் மெய் ஞானம் என்பது நமக்கு மிகவும் குறைவு. நாம் முன்னோர்களின் அறிவாற்றல் முன்பு நமக்கு ஒன்றுமில்லை என்றே சொல்ல தோன்றும்.

தொழில்நுடப்ப வசதி இல்லாத காலத்தில் பருவ நிலைய வகுத்தனர், மழையை அறிந்தனர். எந்த தொழில்நுட்ப துணையும் இல்லாமல் அறிவது எவ்வாறு? முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது மழையின் வரவை மனிதர்கள் தவிர பறவைகள், விலங்குகள், பூச்சி இனங்கள் என அனைத்தும் அறிந்து கொள்ளும் என்றால் உங்களால் நம்ப இயலுமா?         

Rain Live

பொதுவாக கிராமங்களில் பேச்சு வழக்கில் 'மழை வருவது மகேசனுக்கு (கடவுளுக்கு) மட்டுமே தெரியும்’ என்று கூறுவார்கள்.  ஆனால் மழை வருவதும் என்பது வளி மண்டலத்தில் தோன்றும் மாற்றத்தினால் ஏற்படுகிறது. இன்றும் கூட சில சமயங்களில் வானிலை அறிக்கைகள் பொய்த்தாலும், பறவைகள் மற்றும் விலங்கினங்கள் உணர்த்தும் உண்மைகள் பொய்த்தது இல்லை.ஏனெனில் அவைகள் மட்டும் தான் இயற்கையோடு இன்று வரை இணைந்தே பயணிக்கின்றன.

மழையை எவ்வாறு அறியலாம்?

 • "அந்தியில் ஈசல் பூத்தால் அடைமழைக்கு அச்சாரம்" - மழை வருவதை முன்கூட்டியே உணர்ந்து,  புற்று மண் கரைந்து விடும் என்பதற்காக பொதுவாக கரையான்கள் புற்றிலிருந்து வெளியே வந்து பறக்கும்.
 • இரவில் மட்டுமே சுறுசுறுப்புடன் இயங்கும் வவ்வால்கள், பகல் நேரங்களில் அதிக உயரத்தில் வெகு நேரம் பறந்துக் கொண்டிருந்தால் மழை பெய்ய வாய்ப்பு உண்டு என்று பொருள்.
 • நீரில் வசிக்கும் பறவைகள் பொதுவாக கரையோரங்களில் இருக்கும் புதர்களில் அல்லது மண்ணில் ஆழமாக குழித்தோண்டி முட்டையிடும் வழக்கத்தை கொண்டது. ஆனால் மழை, வெள்ளம், போன்றவைகள் தோன்றுவதை முன்பே அறிந்து மரத்தின் மேல் முட்டையிட்டால் நிச்சயம் மழையை எதிர்பார்க்கலாம்.
 • தும்பி என்கிற தட்டான் பூச்சி தூரத்தில் பறந்தால் எங்கோ தொலைவில் மழை பொழிகிறது என்றும், தாழ்வான பகுதியில் பறந்தால் அருகில் மழை என்றும்  பொருள்.
Birds during Rain
 • பறவைகள் இரை உட்கொள்ளும் நேரத்தை தவிர, மற்ற சமயங்களில் வெகு உயரத்தில் பறந்தால் பருவநிலை இயல்பாக இருக்கிறது என்று அர்த்தம். தாழ்வாக பறந்தாலோ அல்லது பறக்கவே இல்லை என்றாலோ மழையோ அல்லது புயலோ வரப்போகிறது என்று அர்த்தம். ஒருவித  சத்தம் எழுப்புவதுடன் வழக்கத்திற்கு மாறாக இருக்கும்.
 • சிட்டுக் குருவிகள் நிலத்தில் விளையாடினால் மழை வரப்போகிறது என்று உணர்ந்து கொள்ளலாம். மைனா, தண்ணீரில் புரண்டு விளையாடினால் மழை நிச்சயம் வந்துவிடும். அதிகாலை தவிர்த்து சேவல் வழக்கத்துக்கு மாறாக வேறு நேரத்தில் தொடர்ந்து கூவுவது மழை வரப்போவதின் அறிகுறி.
 • நிலவு  பழுப்பு நிறத்தில் இல்லாமல் பளிச்சென்று இருக்குமானால் மழை வரும். அதே போன்று சில நேரங்களில் நிலவைச் சுற்றி ஒரு வளையம் போல, ஒளிவட்டம்  தோன்றும். அது ஓரிரு நாட்களில் மழை வரும் என்பதை உணர்த்தும்.
Cow and Goat
 • பொதுவாக புயல் வருவதற்கு முன்பாக காற்றழுத்தம் குறையும். இதை நம்மால் புரிந்து கொள்ள இயலாது, ஆனால் ஐந்தறிவிற்கு இது சாத்தியமே. பசுக்கள் தரையில் படுத்துக்கொள்ளும். ஒரு சில சமயங்களில் பசுவும்,  ஆடும் ஒன்றாக ஒரே இடத்தில் பக்கத்தில் நின்றுகொள்ளும். அதன் பொருள் புயல் வரப்போகிறது என்று அர்த்தமாம். செய்கை மூலம் ஆடு-மாடு மேய்ப்பவர்களுக்கு தெரியப் படுத்தும்.
 • பொதுவாக எல்லா வீடுகளிலும் மாலை நேரங்களில் வீட்டின் சுவற்றில் பல்லிகள் ஒட்டி கொண்டு இருக்கும். ஒரு வேளை பல்லிகள் ஒன்று கூட கண்ணில் பட வில்லை என்றால் மழை வரும் என்று பொருள்.
 • பூனைகள்  வாலை உயர்த்தி வைத்துக் கொள்ளும், வாலில் மின்சாரம் பாய்ந்ததைப் போல உதறும். இவை அனைத்தும்  மழை வரவிற்கான அறிகுறி. பூனைகள் நாக்கால் கால் பாதங்களை நக்குவதும் மழை வரவை நமக்கு உணர்த்தும்.
Shows Rain Forecast
 • நதியில் உலாவும் மீன்கள், நீரின் மேற்பகுதிக்கு வந்து இருக்கும் உணவை சாப்பிட்டு விட்டு பின்னர் கீழ் பரப்பிற்குச் சென்றுவிடும்.
 • வீட்டில் சில நேரங்களில் எறும்புகள் சாரை சாரையாக உணவை சேகரித்திக்கொண்டு செல்லும். இதுவும் மழை வருவதை உணர்த்தும். 
 • சுறுசுறுப்பாக இருக்கும் ஈக்கள் அதிகம் பறக்காமல் அருகில்  உள்ளவர்கள் மீது மொய்க்கும் என்றால் மழை வரப்போககிறது என்று கூறுவார்கள்.

மேலே குறிப்பிட்ட அனைத்தும் பண்டைய காலம் தொட்டு இன்று வரை தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. நாம் தான் கவனிக்காமல் கடந்து செல்கிறோம். இனியேனும் கவனிப்போம்... மழை செய்தியை நம்மை சுற்றியுள்ள பறவைகள், விலங்குகள், மரங்களிடமிருந்து கற்று கொள்வோம்.

Anitha Jegadeesan
krishi Jagran

Rain Forecast Ancient Methods Animals and Birds Nature And Animals Interesting Information About Rain Interesting Facts About Rain How do we know Rainfal

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription

CopyRight - 2019 Krishi Jagran Media Group. All Rights Reserved.