தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஏற்கெனவே சில மாநிலங்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளன. தற்போது நடைமுறையில் உள்ள ஓய்வூதிய திட்டத்துக்கும், பழைய ஓய்வூதிய திட்டத்துக்கும் என்ன வேறுபாடு உள்ளது. அப்படி பழைய ஓய்வூதிய திட்டத்தில் என்ன இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.
பழைய ஓய்வூதிய திட்டம் (Old Pension Scheme)
2003 ஆம் ஆண்டு வரை பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருந்தது. 2004 ஆம் ஆண்டு முதல் தேசிய பென்சன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது அரசு ஊழியர்களுக்கு தேசிய பென்சன் திட்டமே நடைமுறையில் உள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு தேசிய பென்சன் திட்டத்தின் கீழ் சிபிஎஸ் (CPS) எனப்படும் பங்களிப்பு பென்சன் திட்டம் அமலில் உள்ளது. எனினும், தேசிய பென்சன் திட்டத்துக்கு அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தின் சிறப்பம்சங்கள் (Special Features of OPS)
அரசு ஊழியர்களுக்கு பொது வருங்கால வைப்பு நிதி வசதி உண்டு. பென்சனுக்காக அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படாது. அரசு ஊழியர்கள் பணிஓய்வு பெற்ற பின் நிலையான பென்சன் கிடைக்கும். பென்சன் செலவுகளை அரசே ஏற்கும். பணிக்காலத்தில் அரசு ஊழியர் இறந்துவிட்டால் அவரது குடும்பத்திற்கு பென்சன் கிடைக்கும்.
ஆனால், புதிய ஓய்வுதிய திட்டத்தில் பொது வருங்கால வைப்பு நிதி வசதி கிடையாது. பென்சனுக்காக அரசு ஊழியர் சம்பளத்தில் மாதம்தோறும் பிடித்தம் செய்யப்படும். பணி ஓய்வுபெற்றபின் நிலையான ஓய்வூதியத்துக்கு உத்தரவாதம் கிடையாது.
பழைய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் தேவைப்படும்போது கடன் பெற்றுக்கொள்ளலாம். இந்தக் கடனுக்கு வட்டி கிடையாது. பங்களிப்பு பென்சன் திட்டத்தில் இந்த வசதி இல்லை
பணி ஓய்வுபெற்ற பின் அரசு ஊழியர் கடைசியாக வாங்கிய ஊதியத்தில் 50% தொகை பென்சனாக தொடர்ந்து கிடைக்கும். பங்களிப்பு பென்சன் திட்டத்தில் உள்ள பணம் கொடுக்கப்பட்டுவிட்டால் பின்னர் பென்சன் கிடைக்காது.
ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால் அவரது கணவன் அல்லது மனைவிக்கு ஓய்வூதியத்தில் 50% தொகை தொடர்ந்து பென்சனாக வழங்கப்படும்
பழைய ஓய்வூதிய திட்டத்தில் விருப்ப ஓய்வூதியத் திட்டம், இயலாமை ஓய்வூதியம், கட்டாய ஓய்வூதியம், கருணை ஓய்வூதியம், ஈடுகட்டும் ஓய்வூதியம் ஆகியவை கிடைக்கும்.
பழைய ஓய்வூதிய திட்டத்தில் வருங்கால வைப்பு நிதி (PF), வருங்கால வைப்பு நிதியில் முன்பணம் பெறும் வசதி, வருங்கால வைப்பு நிதியில் கடன் பெறும் வசதி, பணிக்கால பணிக்கொடை (Gratuity), இறப்பு பணிக்கொடை (Death Gratuity), பணி ஓய்வு பணிக் கொடை (Retirement Gratuity) ஆகியவை கிடைக்கும். பங்களிப்பு பென்சனில் இவை எதுவுமே கிடைக்காது.
அரசு ஊழியர் பணியின்போது இறந்துவிட்டால் கடைசி ஊதியத்தில் 30% தொகை குடும்ப பென்சனாக கிடைக்கும். 7 ஆண்டுகளுக்கு பின் பணியின்போது இறந்தால் கடைசி ஊதியத்தில் 50% குடும்ப பென்சனாக கிடைக்கும்
பழைய ஓய்வூதிய திட்டத்தில் மாதாந்திர மருத்துவப் படியாக 300 ரூபாய் கிடைக்கும். பங்களிப்பு பென்சன் திட்டத்தில் இந்த பணம் கிடைக்காது.
குடும்ப பாதுகாப்பு நிதியாக 50,000 ரூபாய் கிடைக்கும்.
80 வயதுக்கு மேல் உயிருடன் இருப்போருக்கு கூடுதல் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் 20% முதல் 100% வரை அதிகமாக கிடைக்கும்.
மேலும் படிக்க
Share your comments