சாதிக்க வேண்டும் என்ற ஆசையும், உழைக்கும் ஆர்வமும் இருந்தால், இயற்கை விவசாயத்தில் சாதித்து, நிறைந்த லாபம் ஈட்ட முடியும் என்கிறார், விருத்தாசலத்தைச் சேர்ந்த பெண் விவசாயி கிரிஜா.
கிருஷி ஜாக்ரன் பத்ரிகையின் சார்பில் மாதம் தோறும் 2வது ஞாயிற்றுக்கிழமைகளில் பெண் விவசாயிகள் பங்கேற்றும் ''Farmer the Brand'' என்ற நிகழ்ச்சி ஃபேஸ்புக் பக்கம் மூலம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி டிசம்பர் 13ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் 6 பெண் விவசாயிகள் பங்கேற்றனர்.
6 பெண் விவசாயிகள் (Six Lady Farmers)
தமிழ்நாடு, கேரளா, ராஜஸ்தான், பஞ்சாப், அசாம், மகாராஷ்டிரா உள்ளிட்ட ஆறு மாநிலங்களைச் சேர்ந்த 6 சாதனை பெண் விவசாயிகள் பங்கேற்று, தங்களது வெற்றியின் ரகசியம் குறித்து எடுத்துரைத்தனர்.
இதில் கலந்துகொண்ட தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தைச் சேர்ந்த கிரிஜா கூறியதாவது:
நான் பெண் விவசாயி என்பதில் பெருமைப் படுவதுடன், இயற்கை விவசாயி என்று கூறிக்கொள்வதில் சந்தோஷமடைகிறேன். சிறுவயதில் என்அம்மா செடிகள் வளர்ப்பதில் காட்டிய ஆர்வமே என்னை இப்போது விவசாயியாக மாற்றியிருக்கிறது.
எனக்கு விவசாயம் பற்றி எதுவுமே தெரியாது. எங்கள் பகுதியில் விவசாயம் செய்வோரிடம் பல விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டு பயிரிட ஆரம்பித்தேன். இருப்பினும், மேலும் பல தொழில்நுட்பங்களை சொல்லிக் கொடுத்தது விவசாயம் சார்ந்த இதழ்கள்தான்.
முதலில் இரசாயன விவசாயத்தை செய்தபோதிலும், பின்னர் ரசாயனம் பயன்படுத்துவதால், நிலத்திற்கும், மனிதர்களுக்கும் ஏற்படும் பாதிப்பு தெரியவந்தது. இதையடுத்து இயற்கை விவசாயத்திற்கு மாறினேன்.
எங்கள் ஊரில் குரங்குகள் தொல்லை, ஆரம்பத்தில் பெரும் சவாலாகவே இருந்தது. குறிப்பாக பாரம்பரிய நெல் வகைகளைக் கையில் எடுத்தேன், மாப்பிள்ளை சம்பா, ஆத்தூர் கிச்சிலி சம்பா, கருப்புக் கவுனி.. இப்படி பல ரகங்களைப் பயிரிட்டதுடன், இயற்கை மருந்துகளையும் புத்தகங்கள் மூலம் படித்துத் தெரிந்துகொண்டு, நானே தயாரித்து பயன்படுத்தினேன்.
கடந்த 3 வருடங்களாக இயற்கை விவசாயத்தில், ரசாயன விவசாயத்திற்கு இணையான விளைச்சலை அடைவதற்கு, ஒவ்வொரு நிலையிலும் தரத்திற்கு முக்கியம் கொடுத்ததே காரணம்.
பாப்பா ரைஸ் (Pappa`s rice)
எங்கள் வீட்டில் 5 பெண்கள். எங்களுடைய மாவுமில்லில் நாங்கள் அனைவருமே வேலைசெய்வோம், அதனால், மக்களே பார்த்து எங்களுக்குக் கொடுத்த பெயர் பாப்பா ரைஸ் மில். அதனால் எங்களது பிராண்டின் பெயரும் பாப்பா என்றே வைத்துள்ளோம். எங்களது அரிசி, பாப்பா ரைஸ்.
இயற்கை விவசாயத்தைப் பொருத்தவரை, ஆரம்பத்தில் சிரமம் இருந்தாலும், பல ரகங்களைப் போட்டு விற்பனை செய்வதால், நல்ல லாபம் ஈட்ட முடிகிறது. இப்பகுதி இயற்கை விவசாயிகள் இணைந்து பொன்னேர் விவசாயக் குழு என்ற குழுவை அமைத்துள்போம். இதன் மூலம் ஒரு விவசாயி மற்றொரு விவசாயியின் விளைபொருளை விற்பனை செய்ய உதவி செய்ய முடிகிறது.
அரிசியாக மட்டும் விற்பனை செய்யாமல், விதை நெல்லாகவும் சேர்த்து விற்பனை செய்யும்போது நஷ்டம் அடைய வாய்ப்பே இல்லை. ஒரு காலத்தில், வீட்டில் இருக்கிறோமே, நம்மால் வருமானம் இல்லையே, வெளியே செல்ல அனுமதிக்கவில்லையே என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்த என்னால், தற்போது வருடத்திற்கு ரூ.3 லட்சம் வரை வருமானம் ஈட்ட முடிகிறது.
எனவே என்னைப் போல் சாதிக்க விரும்பும் பெண்கள் , இயற்கை விவசாயத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, தரத்தில் என்வித சமரசமும் செய்துகொள்ளாமல், கடினமாக உழைத்தால் வெற்றி உங்கள் பக்கம் என்பது நிச்சயம்.
மற்றவரிடம் வேலைக்குச் செல்லாமல், சுயதொழில் செய்து வருமானம் பார்க்கிறோம் என்பது கூடுதல் கவுரவத்தைப் பெற்றுத் தருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...
விவசாயத்தை வாழ்க்கையாகப் பார்த்தால் ஏமாற்றமே இல்லை!!
விவசாயத்தில் வெற்றிப்படியை எட்டிப் பிடித்த இஞ்சினியரிங் பட்டதாரிகள்!
Share your comments