ஒடிசா மாநிலம் சுந்தர்கர் மாவட்டத்தின் தொலைதூர தங்கர்பாலி தொகுதியில் உள்ள ரத்தன்பூர் கிராமத்தைச் சேர்ந்த 32 வயதான விவசாயத் தொழிலதிபர் ஹிரோத் படேல், ஒருங்கிணைந்த பண்ணை முறையில் மீன் வளர்ப்பு, காய்கறி சாகுபடி என கலக்கி வருகிறார். இவரின் யோசனையும், வேளாண் நடைமுறையும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆண்டுக்கு ரூ.8-10 லட்சம் வரை வருமானமும் ஈட்டுகிறார்.
இவரின் வேளாண் பணிகளை பாராட்டி ஒடிசா அரசாங்கத்தால் ‘பச்சிமா ஒடிசா க்ருஷி மேளா-2023’ இல் ‘வெற்றிகரமான இளம் முன்னோடி விவசாயி’ என கௌரவிக்கப்பட்டுள்ளார். தனது தந்தை சிவசங்கருக்கு விவசாயத்தில் உதவ முடிவு செய்வதற்கு முன்பு பல்வேறு தொழில்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். குத்தகைக்கு இரண்டு ஏக்கர் உட்பட 14 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த முறையில் வேளாண் பணிகளை மேற்கொள்கிறார்.
பத்து ஏக்கர்- தோட்டக்கலை, மீன் வளர்ப்பு, கோழிப்பண்ணை, பால் பண்ணை மற்றும் மலர் வளர்ப்பு போன்ற பல்வேறு வகையான நடவடிக்கைகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, மூன்று ஏக்கர்- காரிஃப் பருவத்தில் நெல் சாகுபடிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில், இவரது விவசாய நிலமானது நெல் பயிர்களுக்கு மட்டுமே ஏற்றதாக இருந்தது. இருப்பினும், முதலீடு செய்த அளவிற்கு ஏற்ப வருமானம் இல்லை. மிகவும் நிலையான மற்றும் லாபகரமான அணுகுமுறையை நாட, ஹிரோத் ஒரு ஒருங்கிணைந்த விவசாய முறைக்கு மாறினார்.
2019 ஆம் ஆண்டில், வேளாண் துறையின் மண் பாதுகாப்பு மற்றும் நீர்நிலை மேம்பாட்டு பிரிவின் ஆதரவுடன், அவர் தனது நிலத்தில் மூன்று குளங்களைத் தோண்டினார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MGNREGS) உதவியுடன் 10 தசம நிலத்தை உள்ளடக்கிய குளம் ஒன்று உருவாக்கப்பட்டது. ஒரு காலத்தில் மழைநீர் தேங்கியதால் பயன்படுத்த முடியாமல் போன இந்த தாழ்வான பகுதி, ஹைரோடின் புதுமையான விவசாய முறைகளின் மையப் புள்ளியாக மாறியது.
குளத்தின் கரைகளில் வெவ்வேறு தோட்டக்கலை பயிர்களை வளர்ப்பது பொதுவானது. ஆனால் ஹிரோத் அப்பகுதியில் காய்கறி செடிகளை பயிரிட்டு தனித்துவமான வேளாண் நடைமுறையில் ஈடுப்பட்டார். சமீபத்தில், ஹிரோத் 1,500 சுரைக்காய்களை அறுவடை செய்து அவற்றின் விற்பனை மூலம் ரூ.35,000 ஈட்டியுள்ளார். அவரது பண்ணையில் முட்டைக்கோஸ், மிளகாய், தக்காளி, பப்பாளி, கொய்யா மற்றும் பல்வேறு வகையான பூக்கள் போன்றவற்றையும் பயிரிட்டுள்ளார்.
Read also: விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
“நான் 2015 இல் ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்ய ஆரம்பித்தேன், அங்கு எனது கவனம் காய்கறிகளை வளர்ப்பதில் இருந்தது. லாபத்தைப் பார்த்த பிறகு, விவசாயத்தில் ஆர்வம் அதிகரித்தது. தோட்டக்கலைத் துறையின் ஆதரவுடன், ஜல்கானுக்குச் சென்று வாழைத் தோட்டத்தின் நுட்பங்களைக் கற்றுக் கொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்தது. போதுமான அறிவைப் பெற்ற பிறகு, எனது பண்ணையிலும் அதையே செயல்படுத்துகிறேன். தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிக்காக முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார் ஹிரோத்.
“என்னுடைய முதன்மையான கவனம் வாழைத் தோட்டம் மற்றும் மீன் வளர்ப்பு ஆகியவற்றில் உள்ளது. ஏழு ஏக்கர் வாழைத்தோட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலையில், மூன்று குளங்களில் மீன் வளர்க்கிறேன். எனது பண்ணையில் எனது கிராமத்தில் உள்ளவர்களுக்கு வேலை வழங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்,” என்று படேல் மேலும் கூறினார்.
ஊடுபயிர் மற்றும் பண்ணை இயந்திரமயமாக்கல் நுட்பங்கள் மூலம் முன்னேற்றம் அடைந்ததாக படேல் கூறினார். பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதற்கும், பவர் டில்லர் மேற்கொள்ள மேம்பட்ட கருவிகளைப் பயன்படுத்துகிறார். சொட்டு நீர் பாசன நுட்பங்கள் மற்றும் களையெடுப்பு மூலம் நிலத்தை நீரேற்றமாகவும், தேவையற்ற தாவரங்கள் இல்லாததாகவும் வைத்துள்ளார்.
நான்கு விவசாயத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ள ஹிரோத் ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை உள்ளது. மேலும் தொடர் சோதனைகள் மற்றும் பண்ணை விரிவாக்க நடவடிக்கை மூலம் தனது வருமானத்தை மேலும் அதிகரிக்க அவர் திட்டமிட்டுள்ளார். இவரின் பணி அப்பகுதியிலுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் உந்துசக்தியாக மாறியுள்ளது.
Read also:
பால் கொள்முதல் விலையை உயர்த்தியது ஆவின்- முதல்வர் வெளியிட்ட நற்செய்தி
மிக்ஜாம் புயலால் நீரில் மூழ்கிய பயிர்கள்- விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை!
Share your comments