Rajaram Tripathi- RFOI award
ஆண்டுக்கு 25 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் ராஜாராம் திரிபாதி, விவசாயிகளை கௌரவிக்கும் கிரிஷிஜாக்ரானின் முன்னெடுப்பு நிகழ்வான மஹிந்திரா டிராக்டர்ஸ் வழங்கும் MFOI 2023 விருது விழாவில் பில்லினியர் விருது ( Richest farmer of India- RFOI) வென்றார். இதனையடுத்து, கிரிஷி ஜாக்ரான் மற்றும் APEXBRASIL நிதியுதவியுடன், பிரேசிலுக்கு 7 நாள் பயணிக்கும் அரிய வாய்ப்பினையும் பெற்றார்.
ராஜாராம் திரிபாதி மா தண்டேஸ்வரி ஹெர்பல் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். சட்டீஸ்கர் மாநிலம் பஸ்தாரில் கருப்பு மிளகு மற்றும் வெள்ளை முஸ்லி ஆகியவற்றை உற்பத்தி செய்யும் இந்தியாவின் மிகப்பெரிய உற்பத்தியாளராக ராஜாராம் திரிபாதி திகழ்கிறார். கோண்டகான் மற்றும் ஜக்தல்பூர் ஆகிய பஸ்தார் மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் ஸ்ட்ரோவியா, கருப்பு மிளகு மற்றும் வெள்ளை முஸ்லிகளை பராமரித்து வருகிறார்.
ராஜாராம் திரிபாதி, இயற்கை கிரீன்ஹவுஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதோடு, மிளகு பயிரிட ஆஸ்திரேலிய முறையையும் பயன்படுத்தினார். ராஜாராம், தேசிய தோட்டக்கலை வாரியத்திடம் இருந்து வேளாண் அமைச்சகம் மற்றும் இந்திய வேளாண்மை மற்றும் உணவு கவுன்சில் மூலம் 3 முறை நாட்டின் சிறந்த விவசாயி மற்றும் சிறந்த ஏற்றுமதியாளர் என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார்.
அரசு பணியை உதறி விவசாயத்தில் கால்பதிப்பு:
70 ஆண்டுகளுக்கு முன்பு, உத்தரபிரதேசத்தின் பிரதாப்கர் பகுதியைச் சேர்ந்த ராஜாராம் திரிபாதியின் தாத்தா ஷம்புநாத் திரிபாதி, சத்தீஸ்கரின் (அப்போதைய மத்தியப் பிரதேசம்) தர்பா பள்ளத்தாக்கில் உள்ள கக்னாரில் விவசாயம் செய்யத் தொடங்கினார்.
விவசாய குடும்பப் பின்னணியை கொண்ட ராஜாராம் திரிபாதி, ஜக்தல்பூர் கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு, பாரத ஸ்டேட் வங்கியில் ப்ரோபேஷனரி அதிகாரியாக (PO) வங்கித் தொழிலைத் தொடர்ந்தார். விவசாயிகள் சந்திக்கும் சில பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக ராஜாராம் தனது தொழிலை விட்டுவிட்டு 1998 இல் விவசாயத்தைத் தொடங்கினார்.
கைக்கொடுத்த வெள்ளை முஸ்லி மூலிகை:
1999 ஆம் ஆண்டின் இறுதியில், ராஜாராம் உலக சந்தையில் அதிக தேவையாக இருந்த வெள்ளை முஸ்லியை நடவு செய்தார். அதன் வேர்கள் மருத்துவத் துறையில் பல்வேறு உடல்நல சிகிச்சைக்கு பயன்படக்கூடியது குறிப்பிடத்தக்கது.
அவரது தொலைநோக்கு தலைமை அவரை CHAMF (Central Herbal Agro Marketing Federation of India) இன் தலைவராக்கியது. CHAMF- மூலிகை விவசாய நடைமுறைகளின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும். அவரது வழிகாட்டுதலின் கீழ் மூலிகை, மசாலா மற்றும் பிற அனைத்து இயற்கை வேளாண்மை நடவடிக்கைகளின் வருடாந்திர வருவாய் ஆண்டுக்கு 75 லட்சம் முதல் 80 லட்சம் கோடி ரூபாய்களை எட்டியுள்ளது.
டாக்டர் திரிபாதியின், 'அதிக மகசூல் தரும் பல அடுக்கு பயிர் முறையானது’ இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ள நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு புதிய நுண்ணறிவை வழங்கியுள்ளது என்றால் மிகையல்ல. கடந்த மூன்று தசாப்தங்களாக, அவர் தனிப்பட்ட முறையில் 30 லட்சத்திற்கும் அதிகமான செடிகளை சத்தீஸ்கரின் பஸ்தாரில் நட்டு வளர்த்து வருகிறார், ஒவ்வொரு ஆண்டும் அவற்றின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
Read more: இரக்கமில்லாத இயற்கை- கேப்டன் விஜயகாந்த்தின் மறைவுக்கு முதல்வர் இரங்கல்
பல்லுயிர் பாதுகாப்பிற்கான குறிப்பிடத்தக்க முயற்சியில், டாக்டர் திரிபாதி முன்னூறுக்கும் மேற்பட்ட அரிய மற்றும் அழிந்துபோன மருத்துவத் தாவரங்களைக் கொண்ட "எத்னோ மெடிகோ கார்டன்" ஒன்றை நிறுவினார். இந்த முயற்சி, நாட்டிலேயே முதன்முறையாக, இயற்கை வாழ்விடங்கள் மற்றும் பாரம்பரிய மருத்துவ அறிவைப் பாதுகாப்பதில் அவரது அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
உலக அரங்கில் இந்தியாவின் பிரதிநிதியாக பங்கேற்பு:
விவசாயம் குறித்த அறிவு மற்றும் புதுமைக்கான அவரது தேடலின் விளைவாக டாக்டர் திரிபாதி 32 நாடுகளுக்கு பயணம் செய்து, அதிநவீன வேளாண் தொழில்நுட்பங்கள் மற்றும் கரிமப் பொருட்களுக்கான உலகளாவிய சந்தையை ஆராய்ந்துள்ளார். கரிம மற்றும் மூலிகை வேளாண்மைத் துறையில் பல சர்வதேச கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகளில் இந்தியாவின் பிரதிநிதியாக பங்கேற்று உலக அரங்கில் பாராட்டைப் பெற்றுள்ளார்.
Read more: குதிரைவாலி முதல் அகத்திவிதை வரை- ஒரே நாளில் 10 லட்சத்திற்கு மேல் வர்த்தகம்!
Share your comments