கிராமங்களில் ஏழை விவசாயிகளுக்கு நாட்டுக் கோழிகள் அவர்களுடைய அன்றாட வாழ்க்கைக்கு தேவையான வருமானத்தின் ஒருபகுதியை ஈட்டி கொடுக்கின்றன. நாட்டுக்கோழிகள் கிராமப்புற மக்களின் வாழ்க்கையில் திடீர் தேவைகளை நிறைவு செய்யும் ஆதாரமாகவும், நிலையான வருவாய் தரக்கூடியதாகவும், நெருக்கடி காலங்களில் கைகொடுப்பதாகவும் இருக்கின்றன. எனவே, நாட்டுக் கோழிகளை நடமாடும் வங்கிகள் எனலாம்.
கோழி முட்டை
கோழி முட்டையானது உலகில் கிடைக்கக்கூடிய புரத மூலப்பொருட்களிலேயே மிகவும் அதிகளவு செரிமானகி உடலில் உட்கிரகிக்கக்கூடிய புரதத்தை 12% கொண்டும், இறைச்சியானது 18 முதல் 21% மற்றும் குறைந்த கொழுப்புச்சத்தையும் கொண்டும் அனைவரும் அன்றாட உணவில் உண்ணக்கூடிய, உடல்நலத்தில் எந்தவிதமான தீங்கிணையும் விளைவிக்காத ஒரு தனித்தன்மை வாய்ந்த உணவுப்பொருட்களாக விளங்கி வருகிறது.
தமிழ்நாட்டில் வளர்க்கப்படும் கோழி இனங்கள்
-
அசீல் அல்லது சண்டைக்கோழி
-
கடக்நாத் என்னும் கருங்கால் கோழி
-
கழுகுக்கோழி அல்லது கிராப்புக்கோழி
-
குருவுக்கோழி
-
கொண்டைக்கோழி
-
குட்டைக்கால் கோழி
-
பெருவிடைக்கோழி
அசீல்
இவ்வகை கோழிகள் தோற்றம் ஆந்திர மாநிலம். தற்போது தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் சண்டைக்காக வளர்க்கப்படுகிறது. சேவல் எடை 3 -4 கிலோவாகவும், கோழி எடை 2-3 கிலோவாகவும் உள்ளது. 196 நாட்களில் பருவம் அடைகிறது. பெரும்பாலும் சண்டைக்காக வளர்க்கப்படுவதால் இவற்றின் முட்டையிடும் திறனும் , குஞ்சு பொறிக்கும் தன்மையும் குறைவு.
கருங்கால் கோழி (கடக்நாத்)
இதன் நிறமும் கருப்பு, கால், தலை, அலகு, தோல் யாவும் கருப்பு நிறமானது. கொண்டையும் தாடியும் நாக்கும் கத்திரிக்காய் நிறத்தில் இருக்கும். இதன் இறைச்சி முழுவதுமே கருப்பு நிறத்திலேயே இருப்பதால் இதற்கு கருப்பு இறைச்சி அல்லது காலாமாசி என்று பெயர்.மேலும் இதன் இறைச்சியில் இரும்புச் சத்து அதிக அளவில் உள்ளது.இந்த வகை கோழியின் இறைச்சில் அதிக புரதசச் சத்தும் (25.47%) இரும்புச் சத்தும் உள்ளது. இவை சராசரி உடல் எடை உடையது.சராசரியாக 1½ முதல் 2 கிலோ வரை எடை இருக்கும்.
கழுகுக் கோழி அல்லது கிராப்பு கோழி
இந்த வகை கோழிகளின் கழுத்தில் முடி இருக்காது. அல்லது கழுத்தின் முற்பகுதியில் கொத்தாக சிறகுகள் உள்ளன. நீளமான உருண்டை வடிவ கழுத்துடைய இனமாகும். பருவநிலையை அடையும்பொழுது , சேவலின் தோல் சிவப்பு நிறத்திற்கு மாறி விடுகிறது. கேரளாவின் திருவனந்தபுரப் பகுதி இவ்வகை இனத்தின் தோற்றம் ஆகும். இவ்வகை கோழிகளின் உடல் எடை அதிகமாக இருப்பதுடன் இறைச்சியின் அளவும் அதிகமாக இருக்கும். இறைச்சிக்காக வளர்ப்பதற்கு இந்தவகை நாட்டுக் கோழிகள் மிகவும் ஏற்றவை.
குருவுக் கோழி
இது செல்லப்பறவை போன்றது.இக்கோழிகள் மிகவும் சிறியவை. சராசரியாக 1 முதல் 1.2 கிலோ உடல் எடையுடன் காணப்படும். ஆனால் முட்டையிடும் தன்மை அதிகம். நீண்ட காலம் அடைகாக்காமல் கூடுதலாக முட்டையிடும். பெட்டைகளில் தாய்மை பண்பு அதிகமாகக் காணப்படும். ஆண்டிற்கு 3-4 தடவை அடைபடுத்து குஞ்சு பொரிக்கும். 2 மாதத்துக்குள் குஞ்சுளை விரட்டி விட்டு முட்டையிட ஆரம்பிக்கும். ஆண்டிற்கு 80 முதல் 100 முட்டைகள் வரை இடும்.
கொண்டைக்கோழி
கொண்டைக் கோழிகள் மிகவும் அரிதாகக் காணப்படும் இனமாகும். இதன் தலைமீது கொண்டைப் பகுதியில் கொத்தாக முடி இருப்பதால் இதற்கு கொண்டைக்கோழி என்று பெயர். இவை சிறியதாக இருந்தாலும் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.
குட்டைக்கால் கோழி
குட்டைக்கால்களும், கொண்டைக் கோழியைப்போல் மிகவும் அரிதாகக் காணப்படும் கோழி இனமாகும். இதனுடைய வால் தரையைத் தொட்டுக் கொண்டு போகின்ற அளவிற்கு, கால்கள் குட்டையாக இருப்பதால் இதற்கு குட்டைக்கால் கோழி என்று பெயர் ஏற்பட்டது.
பெருவிடைக் கோழி
இந்த இனக்கோழிகள் நடுத்தர எடை உடையவை. தமிழ்நாட்டில் பல பகுதிகளில் இவ்வினக் கோழிகளை வளர்க்கின்றனர். தலையில் ஒற்றைக் கொண்டப்பூ கொண்டது. இவை வருடத்திற்கு 50 முதல் 60 முட்டைகளிடும்.
இவற்றில் கிரிராஜா (பெங்களுர்) , வனராஜா (ஹதராபாத்) நந்தனம் (சென்னை) ஆகியவை இறைச்சி மற்றும் முட்டைக்காக மேம்படுத்தப்பட்ட கோழி இனங்கள் ஆகும்.
நந்தனம் கோழிகள்
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் நந்தனம் கோழி ஆராய்ச்சி நிலையம் நந்தனம் கோழி ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு ஆகிய உயர்ரக நாட்டுக்கோழி இனங்களை இறைச்சிக்காகவும் முட்டை உற்பத்திக்காகவும் புறக்கடை முறையில் வளர்ப்பதற்கு ஏற்ற இனங்களாக உருவாக்கி உள்ளனர் .இவற்றில் நந்தனம் கோழி இரண்டு மற்றும் மூன்று இறைச்சி உற்பத்திக்கு ஏற்ற இனங்களாகும்.
வனராஜா கோழி
ஜதராபாத்தில் உள்ள ஜ.சி.ஏ.ஆர். கோழி ஆராய்ச்சி மையம் இதனை வெளியிடப்பட்டுள்ளது. பல வண்ணங்களில் கவர்ச்சியான இறகுகளைக் கொண்டது. வீட்டுப் பண்ணைகள் மற்றும் கிராமங்களில் புறக்கடை வளர்ப்பதற்கு ஏற்ற இனமாகும்
-
உடல் எடை 8 வாரத்தில் 1 கிலோ
-
உடல் எடை 40 வாரத்தில் 3-5 கிலோ
-
ஒரு பருவ சுழற்சியில் 160-180 முட்டைகள் இடுகின்றது. (500 நாட்கள் வயதில்)
கிரிராஜா கோழி
பெங்களுரில் உள்ள கால்நடை மற்றும் மீன்வள அறிவியல் பல்கலைக்கழகத்தின் கோழி ஆராய்ச்சித்துறை வெளியிடட்டுள்ள இனமாகும். கிரிராஜா கோழிகள், வண்ணமயமாய் இருப்பதோடு நோய் எதிர்ப்புச்சத்தியும், அதிக முட்டை மற்றும் அதிக இறைச்சி தரும் இயல்பு கொண்டது.
-
புறக்கூடை கோழி வளர்ப்பதற்கு ஏற்ற இனமாகும்.
-
இராணிக்கெட் வியாதி தவிர மற்ற தடுப்பூசி போட வேண்டியதில்லை.
-
மேரக்ஸ் மற்றும் கோழிக்கழிச்சல் இக்கோழிகளுக்கு வரவே வராது.
-
உடல் எடை 8வது வாரத்தில் 1.6 முதல் 1.8 கிலோ
-
வளர்ந்த கோழியின் உடல் எடை சேவல் 4 முதல் 5 கிலோ பெட்டை 3.5 கிலோ முதல் 4 கிலோ
-
வருடத்திற்கு இடும் முட்டைகளின் எண்ணிக்கை 150- 160 கிராம்
-
முட்டை எடை 55-65 கிராம்
-
குஞ்சு பொறிக்கும் திறன் 85 சதவீதம்
சுலபமான மேலாண்மை குறைவான முதலீட்டுச் செலவு வணிக சந்தையில் நல்ல விலை, எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளும் தன்மை மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி போன்ற காரணங்களினால் நாட்டுக் கோழி வளர்ப்பில் அதிக இலாபம் கிடைக்கிறது. இயற்கையில் கிடைக்கும் உணவுப் பொருட்கள் மற்றும் பண்ணை மற்றும் வீட்டுக் கழிவுகள் இவற்றை பயன்படுத்தி புறக்கடை கோழி வளர்ப்பின் மூலம் குடும்பத்திற்கு தேவையான ஒரு குறிப்பிடத்தக்க வருவாயை ஈட்டிக்கொள்ளலாம்.
முனைவர். ப. சித்ரா
உதவி பேராசிரியர், கால்நடைமருத்துவ அறிவியல் துறை
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர் - 641 003.
மேலும் படிக்க...
காய்கறி தோட்டங்கள் அமைப்பது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு!
நகைகளை வைத்து விவசாயிகள் பெற்ற பயிர்க் கடனும் தள்ளுபடி! அமைச்சர் செல்லூர் ராஜூ
விவசாயிகளுக்கு இனிப்பான செய்தி! இன்று முதல் பயன்பாட்டிற்கு வரும் நெல் கொள்முதல் நிலையங்கள்!
Share your comments