தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ், கால்நடைகளுக்கான 2-வது தவணை புரூசெல்லோசிஸ் நோய் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., தகவல் தெரிவித்துள்ளார்.
புரூசெல்லோசிஸ் கொடிய நோய்:
பசு மற்றும் எருமைகளில் கருச்சிதைவு மற்றும் மலட்டுத் தன்மை ஏற்படுத்தும் நோய் புரூசெல்லோசிஸ். இந்த நோய் ஒரு பாக்டீரியா கிருமியால் ஏற்படுவது ஆகும். சினையுற்ற பசுக்கள் ஆறு மாத சினை காலத்தில் கன்றுகளை விசிறி விடும். இந்நோய் பசு மற்றும் ஆடுகளை தாக்கக்கூடியது. நோயுற்ற கால்நடைகளின் பிறப்புறுப்பு மற்றும் சினை நஞ்சுக்கொடி மூலம் இதர கால்நடைகளுக்கு பரவுவதோடு மனிதர்களுக்கும் இந்த நோய் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவும் முக்கிய நோயான இந்த நோய் தாக்கம் மனிதர்களுக்கு ஏற்பட்டால் ஆண்,பெண் இரு பாலருக்கும் சினையுறா தன்மை நீடிக்கும். மனிதர்களுக்கு ஒரு விதமான காய்ச்சல் உண்டாகும்.
இந்த நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு தீவிர காய்ச்சல் மற்றூம் சினை ஈன்றும் நேரத்தில் கருச்சிதைவு ஏற்படுகிறது. இந்த நோயால் நஞ்சுக்கொடி தாக்குதல், மீண்டும் எளிதில் சினை பிடிக்காமை, பால் உற்பத்தி குறைவால் பொருளாதார இழப்பு ஆகியவை ஏற்படுகிறது.
இரண்டாவது தவணை தடுப்பூசி:
புரூசெல்லோசிஸ் நோயின் வீரியம் கருதி இந்த நோயினை கட்டுப்படுத்தவும் பரவ விடாமல் தடுக்கவும் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் கிராமங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு கருச்சிதைவு நோய் தடுப்பூசிப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல் சுற்று தடுப்பூசிப் பணிகள் பிப்ரவரி மாதம் நடைபெற்றது.
தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் மூலமாக 2-வது தவணையாக புரூசெல்லோசிஸ் நோய்க்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இந்த நோய்க்கான தடுப்பூசி 4 மாதம் முதல் 7 மாதம் வயதுடைய கிடேரி கன்றுகளுக்கு மட்டும் ஜுன் 15 ஆம் தேதி முதல் ஜூலை 15 ஆம் தேதி வரை இலவசமாக செலுத்தப்பட உள்ளது.
சினை மாடுகளுக்கு தடுப்பூசி கூடாது:
இந்த தடுப்பூசியை ஒருமுறை செலுத்தினால் கிடேரி கன்றுக்கு அதன் ஆயுள் முழுவதற்கும் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். காளை கன்றுகளுக்கும், சினை மாடுகளுக்கும் இந்த தடுப்பூசியை செலுத்தக்கூடாது. இந்த தடுப்பூசியானது இலவசமாக கால்நடை நிலையங்கள் மூலமாக ஊராட்சி பகுதியில் நடைபெறும் முகாம்களில் செலுத்தப்படுகிறது.
எனவே மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற இந்த நோயினை கட்டுப்படுத்தும் பொருட்டு தற்போது நடைபெறவுள்ள இரண்டாவது சுற்று தடுப்பூசிப் பணி வாய்ப்பை கால்நடை வளர்ப்போர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.பஜெயசீலன்.,இ.ஆ.ப., வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.
மேலும் காண்க:
சொட்டு நீர் பாசன அமைக்க மானியம்- திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகள் அழைக்க வேண்டிய நம்பர் விவரம்
Share your comments