வெயிலையும், மணலையும், ஒரு குளிரூட்டப்பட்ட பீரையும் ரசிப்பதற்காக, புதுச்சேரிக்கு (முந்தைய பிரெஞ்ச் காலனி, பாண்டிச்சேரி) செல்லும் சென்னையைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இப்போது மகிழ்ச்சியடைய மற்றொரு காரணமும் உள்ளது. யூனியன் பிரதேசத்தின் முதல் மைக்ரோ ப்ரூவரி நிறுவனமான கட்டமரான் ப்ரூயிங் கோ (Catamaran Brewing Co) சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு முதன்முதலாக “பீர் பஸ்ஸை” தொடங்குகிறது.
ஒரு நபருக்கு ₹3,000 என்ற டிக்கெட் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில் வருகிற ஏப்ரல் 22 ஆம் தேதி தனது முதல் பயணத்தை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது, இந்த பீர் பேருந்து. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பேருந்து இயக்கப்படும். சென்னையில் காலை 10.30 மணிக்கு துவங்கும் பயணம் இரவு 9 மணிக்கு நிறைவுப்பெறும். மூன்று வேளை உணவு, வரம்பற்ற கிராஃப்ட் பீர் மற்றும் மதுபானம் தயாரிப்பதை நேரடியாக நிறுவனத்தில் காணவும் சுற்றுப்பயணத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், பேருந்தில் பீர் வழங்கப்பட மாட்டாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். முதல் பயணத்திற்கான வரவேற்பைப் பொறுத்து, அதை வழக்கமான பயணமாக மாற்ற நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஒரு வாடிக்கையாளர் கேலியாக இந்த பீர் பேருந்து போக்குவரத்து சேவையைக் கேட்டபோது தான் பேருந்து பற்றிய யோசனை தோன்றியது என்று கட்டமரான் ப்ரூயிங் கோ நிறுவனர் பிரசாத் ராதாகிருஷ்ணன் கூறினார். கடந்த வாரம், நிறுவனம் வெளியிட்ட "பீர் பஸ்" க்கான விளம்பர அறிவிப்பு சமூக ஊடகங்களில் வைரலாகியது. "இந்த அளவிற்கு வைரலாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. சிலர் எங்களிடம் பஸ்ஸை தொடர்ந்து இயக்க வேண்டும் என்று கேட்கிறார்கள்,” என்று சிரித்தபடி கூறுகிறார் ராதாகிருஷ்ணன்.
ராதாகிருஷ்ணனும் அவரது வணிக கூட்டாளியான ரங்கராஜூ நாராயணசுவாமியும் 2017 இல் கட்டமரான் ப்ரூயிங் கோ. திட்டத்தில் பணிபுரியத் தொடங்கினர். இந்த நிறுவனம் ஒன்பது வகைகளில் கிராஃப்ட் பீரை வழங்குகிறது. Indian Summer (a Belgian Witbier), Hopsunami (an Indian Pale Ale), Chingari Cider (a dry apple cider), and Vox Populi (a dark lager) போன்றவை புகழ்பெற்றவை.
ராதாகிருஷ்ணன் கூறுகையில், கிராஃப்ட் பீர்கள், வணிக பீர்களைப் போலல்லாமல், ருசிக்கப்பட வேண்டியவையே தவிர, அதிகளவில் சாப்பிடக்கூடாது. ஒரு தானியம் எப்படி பீராக மாற்றப்படுகிறது என்பதை பார்வையாளர்களுக்கு விளக்கும் நோக்கத்தோடு, இந்த பேருந்து பயணம் இருக்கும் என்றார். ஆனால் பேருந்தில் பீர் எதுவும் வழங்கப்பட மாட்டாது என அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார். மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் பயணிகளை அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விடுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த பேருந்து திட்டப்பயணம் வெற்றியடைந்தால் பெங்களூரு போன்ற பிற நகரங்களில் இருந்து பேருந்தினை இயக்குவது குறித்தும் முடிவெடுக்கப்படும் என கட்டமரான் ப்ரூயிங் கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் காண்க:
இரக்கம் காட்டாத வெப்ப அலை.. பள்ளி, அங்கான்வாடியை மூட முதல்வர் உத்தரவு
கடுமையான மனநல நெருக்கடியில் இந்தியர்கள்- ICMR கொடுத்த எச்சரிக்கை
Share your comments