1. Blogs

63 வயதில் நீட் தேர்வு எழுதிய முன்னாள் தலைமை ஆசிரியர்!

R. Balakrishnan
R. Balakrishnan
Former head teacher - Write NEET exam

அரசு பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர், 63 வயதில் மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வை எழுதியுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பிலும் பாராட்டுகள் குவிந்துள்ளன. கடந்த 12ம் தேதி நடந்த நீட் நுழைவு தேர்வில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பங்கேற்றனர். இந்த தேர்வு எழுத வயது ஒரு தடை அல்ல என்பதால், 63 வயது நிறைந்த முனுசாமி என்ற அரசு பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியரும் தேர்வில் பங்கேற்றுள்ளார்.

பணி ஓய்வு

சென்னை பெருங்குடியில் வசிக்கும் முனுசாமி, எம்.எஸ்சி., - எம்.எட்., -எம்.பில்., மற்றும் எம்.பி.ஏ., படித்துள்ளார். கடந்த 1984ல் டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வில் தேர்ச்சி பெற்று, கவர்னர் மாளிகையில் சுருக்கெழுத்தராக பணியை துவங்கிய முனுசாமி, 1987ல் போலீஸ் துறையில் நேரடி எஸ்.ஐ., தேர்வில் பங்கேற்று தேர்வாகி, எஸ்.ஐ.,யாக நான்கு ஆண்டுகள் பணியாற்றி உள்ளார்.

அதன்பின், போலீஸ் துறையில் இருந்து கல்வித் துறைக்கு மாறினார். முதுநிலை ஆசிரியராக தேர்வாகி, செங்கல்பட்டு, பொலம்பாக்கம் பள்ளியில் பணியாற்றினார். பின், சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 15 ஆண்டுகளாக உயிரியல் ஆசிரியராக பணிபுரிந்தார். பின், வேளச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றி 2018ல் ஓய்வு பெற்றார். இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவி, தினேஷ் கண்ணா என்ற மகன், மஞ்சு என்ற மருமகள், லட்ஷிதா மற்றும் பரினிதா என்ற பேத்திகள் உள்ளனர்.

நீட் தேர்வு எழுதியது குறித்து ஆசிரியர் முனுசாமி அளித்த பேட்டி: வடமாநிலத்தில் அப்பாவும், மகளும் நீட் தேர்வு எழுதி ஒரே கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., படிக்கின்றனர். இந்த தகவலை, அசோக் நகர் அரசு பெண்கள் பள்ளி ஆசிரியர்கள் உதயகுமார், மணிமாறன் ஆகியோர் என்னிடம் தெரிவித்து, என்னையும் நீட் தேர்வு எழுத ஊக்குவித்தனர்.

Also Read | பள்ளிகளைத் திறப்பதில் அவசரம் வேண்டாம்: விஞ்ஞானி எச்சரிக்கை

நம்பிக்கை

பின், குடும்பத்தாரின் ஒத்துழைப்பும், ஆதரவும் கிடைத்தது. நீட் தேர்வுக்கு பல்வேறு புத்தகங்கள் வாங்கி ஐந்து மாதங்கள் சொந்தமாக படித்து பயிற்சி பெற்று, தேர்வு எழுதியுள்ளேன். எனக்கு 351 மதிப்பெண் கிடைக்கும். அகில இந்திய ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தால், வடமாநில கல்லுாரியில் சென்று படிக்கவும் தயாராக உள்ளேன். நான் செங்கல்பட்டு மாவட்டம் பட்டிகுளம் கிராமத்தில் உள்ள ஆதி திராவிட பள்ளியில் படித்தவன். மாமல்லபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலைப் படிப்பையும், நந்தனம் அரசு கல்லுாரியில் பட்டப் படிப்புகளையும் முடித்துள்ளேன். எப்படியும் மருத்துவ படிப்பில் சேரலாம் என்ற நம்பிக்கை உள்ளது.

ரோல் மாடல்

தன் 63 வயதிலும் நீட் தேர்வை எழுதியுள்ள ஆசிரியர் முனுசாமியை, இளம் மாணவர்கள் தங்களின் 'ரோல் மாடலாக' எடுத்து கொண்டு, எந்த வயதிலும் விருப்பப்பட்ட படிப்பை படிக்கலாம் என்ற எண்ணம் கொள்ள வேண்டும். மாறாக, நீட் தேர்வை கண்டு அச்சப்பட்டு, ஒதுங்கி தற்கொலை போன்ற கோழைத்தனமான முடிவுகளை எடுத்து, வாழ்வை வீணாக்கி விடக்கூடாது என, கல்வியாளர்களும், உளவியலாளர்களும் தெரிவித்துள்ளனர்.-

நீட் தேர்வு ஆர்வம்

சென்னை வடபழநியை சேர்ந்த ஜிம் உரிமையாளர் மோகன், தன், 47வது வயதில் நீட் தேர்வை எழுதியுள்ளார். இவர் தன் மகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக தானும் படிக்க ஆரம்பித்து நீட் தேர்வை எழுதியுள்ளார்.நீட் தேர்வில் 550 மதிப்பெண் பெற முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளார். தேர்வு எழுத மகனும், மகளும் உறுதுணையாக இருந்ததாக அவர் கூறினார்.

English Summary: Former head teacher who wrote the NEET exam at the age of 63! Published on: 15 September 2021, 06:29 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.