1. விவசாய தகவல்கள்

வேளாண் பழமொழிகள்! தெரியுமா உங்களுக்கு?

Elavarse Sivakumar
Elavarse Sivakumar

பொதுவாக பழமொழிகளைக் கேட்டும்போது, அவற்றின் மீது ஒரு வெறுப்பும், அலுப்பும் தோன்றுகிறது. ஏனெனில் அதில் ஆயிரம் அர்த்தங்களைப் புதைத்தும், மறைத்தும் வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.

அர்த்தம் தெரியாததால், இவற்றைத் தெரிந்துகொள்ளவே நம்மில் சிலர் விரும்புவதில்லை. அதிலும் விவசாயம் சார்ந்த பழமொழிகள் என்றால், கேட்கவே வேண்டாம் என்று பலர் நினைக்கிறார்கள். அப்படிப்பட்டவரா நீங்கள்? உங்களுக்காக அர்த்தங்களுடன் சில வேளாண் சார்ந்த பழமொழிகளைப் பட்டியலிடுகிறோம்.

பழமொழிகள்...!

தவளை கத்தினால்தானே மழை!

அர்த்தம் :

பொதுவாக மழைக்கான அறிகுறிகள் மனிதனை விட, மற்ற எல்லா ஜீவா ராசிகளுக்கும் தெரியும். தவளைகள் மழை வருவதற்கு முன்பே கத்தும்.

அந்தி ஈசல் பூத்தால், அடை மழைக்கு அச்சாராம்!

அர்த்தம் :

மாலை வேளைகளில் ஈசல்கள் அதிகமாக சுற்றி திரிந்தால் நீண்ட நேர மழைக்கான அறிகுறியாக நாம் எடுத்துக்கொள்ளலாம்.

எறும்பு திட்டை ஏறில் பெரும் புயல்!

அர்த்தம் :

எறும்புகள் கூட்டம் கூட்டமாகச் உயரமான இடத்திற்கு வாயில் முட்டையை கவ்விக் கொண்டு சென்றால் கட்டாயம் புயல் வரும் என்று பொருள்.

மார்கழி மழை மண்ணுக்கு உதவாது!

அர்த்தம் :

பொதுவாக ஆடியில் விதைத்து தை மாதத்தில் அறுவடைக்கு காத்திருப்பார்கள். எனவே மார்கழி மாதத்தில் பயிர்கள் அறுவடைக்கு தயாராயிருக்கும் என்பதால், அந்த சமயத்தில் தண்ணீர் தேவை இருக்காது. அப்போது மழை பெய்தாலும் பயிர் விளைச்சலை பாதிக்கும். இதன் காரணமாக மார்கழி மழை மண்ணுக்கு உதவாது என்றார்கள் நம் முன்னோர்கள்.

தை மழை நெய் மழை!

அர்த்தம் :

நெய் எவ்வாறு சிறிதளவு ஊற்றினாலே மணம், ருசியும் தரும். அதே போன்று தை மாதத்தில் பெய்யும் சிறிதளவு மழையே என்றாலும், வேளாண்மையை மணக்கவே செய்யும்.

அகல உழவதை விட, ஆழ உழுவது மேல்!

அர்த்தம் :

விவசாயத்திற்கு நிலத்தை தயார் செய்யும்போது, அகலமாக உழுவதை விட ஆழமாக உழ வேண்டும்.

ஆடிப்பட்டம் தேடி விதை!

அர்த்தம் :

ஆடி மாதத்தில் விதைத்தால் தை மாதத்தில் அறுவடை செய்யலாம். மேலும் இந்த மாதத்தில் பயிரிட்டால் நல்ல விளைச்சலை கொடுக்கும். இதனால் தான் ஆடிப்பட்டம் தேடி விதை என்கிறார்கள்.

புத்து கண்டு கிணறு வெட்டு!

அர்த்தம் :

பண்டைய காலங்களில் கிணறு வெட்டுவதற்கு முன்பு நிலத்தில் உள்ள நீரின் அளவை அறிய கால்நடைகளின் செயல்பாடு, கரையான் புற்று இவற்றை கொண்டு அறிவார்கள். பொதுவாக காரையான்கள், நிலத்தடி நீர் இருக்கும் இடங்களில் தான் புற்று அமைக்கும். எனவே தான் புற்று இருக்கும் இடங்களில் கிணறு வெட்டுவது நல்ல பலனைத் தரும்.

விண் பொய்த்தால் மண் பொய்க்கும்!

அர்த்தம் :

வானம் பொய்த்து விட்டால் நிலத்தில் நீர் இருக்காது. பயிர் விளைச்சலும் இருக்காது. மழை இல்லை என்றால் விவசாயம் பொய்த்து விடும்.

களர் கெட பிரண்டையைப் புதை!

அர்த்தம் :

நிலத்தினை சீராக்க பிரண்டையை அந்நிலத்தில் புதைத்தால், நிலமானது சிறக்கும்.

மாசிப் பனி மச்சையும் துளைக்கும்!

அர்த்தம் :

மாசி மாதத்தில் பனிப்பொழிவு கடுமையாக இருக்கும். மச்சு வீட்டையும் துளைக்கும்.

வெள்ளமே ஆனாலும்,பள்ளத்தே பயிர் செய்!

அர்த்தம் :

வெள்ளம் வந்தாலும், பள்ளமான இடத்தில் பயிர் செய்தால் பயிருக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும் என்பதே இதன் பொருள்.

காணி தேடினும் கரிசல் மண் தேடு!

அர்த்தம் :

நிலம் வாங்கும் போது, சிறிய அளவாகவே இருந்தாலும் கரிசல் மண் உள்ள நிலமாக வாங்க வேண்டும். நீரினைத் தேக்கி வைக்கும் தன்மை உடையது, விவசாயத்திற்கு ஏற்றது.களரை நம்பிக் கெட்டவனும் இல்லை, மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை!

களர் நிலமானது தண்ணீரை தேக்கி பயிர் வளர்ச்சிக்கு உதவும். மணலானது தண்ணீரை வடித்து விடுவதால் வளர்ச்சிக்கு ஏற்றதல்ல.

கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி!

அர்த்தம் :

பெரும் நஷ்டத்தை சந்தித்து கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு கிடைத்தால், உழைத்து முன்னேறிவிடுவார்கள்.

நன்னிலம் கொழுஞ்சி, நடுநிலம் கரந்தை, கடை நிலம் எருக்கு!

அர்த்தம் :

நல்ல நிலத்தில் கொழுஞ்சியும், நடுத்தர நிலத்தில் கரந்தையும், தரமற்ற நிலத்தில் எருக்கச் செடியும் வளரும். எனவே ஒரு நிலத்தின் தன்மையை அந்நிலத்தில் இருக்கும் தாவரங்களை கொண்டு அறிந்து கொள்ளலாம்.

நீரும் நிலமும் இருந்தாலும்,பருவம் பார்த்து பயிர் செய்!

அர்த்தம் :

பயிர் வளர்ச்சிக்கு தேவையான நிலமும், நீரும் ஓரிடத்தில் இருந்தாலும், பருவநிலையை கணக்கில் கொண்டே பயிர் செய்ய வேண்டும்.

ஆடி ஐந்தில் விதைத்த விதையும், புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர்கள் வைத்த தனம்!

அர்த்தம் :

பொதுவாக ஆடி ஐந்தாம் தேதி விதைத்து, புரட்டாசி பதினைந்தாம் தேதி நடவு செய்தல் வேண்டும். அவ்வாறு செய்தால் நம் முன்னோர்கள் சேமித்து வைத்த சொத்து போன்று அது நமக்கு பலன் தரும்.

பாரில் போட்டாலும், பட்டத்தில் போடு!

அர்த்தம் :

எந்த விதை விதைத்தாலும் பருவமறிந்து பயிர் செய்தல் நல்ல பலன் கிடைக்கும்.

மழையடி புஞ்சை, மதகடி நஞ்சை!

அர்த்தம் :

மழை நீரை மட்டும் நம்பி விவசாயம் நடைபெறும் இடங்களில் நஞ்சை பயிர்களையும், மழை நீரை சேமித்து வைத்திருக்கும் கண்மாய், ஏரிகள் போன்றவற்றின் அருகில் புஞ்சைப் பயிர்களை பயிர் செய்யலாம்.

Credit: News network

உழவில்லாத நிலமும், மிளகில்லாத கறியும் வழ வழ!

அர்த்தம் :

மிளகு சேர்க்காத குழம்பு எப்படி பலன் அற்றதாகுமோ, அதேபோல் வேளாண் இல்லாத நிலம் பலன் தராது.

தேங்கி கெட்டது நிலம், தேங்காமல் கெட்டது குளம்!

அர்த்தம் :

விளை நிலத்தில் நீர் தேங்கினால் பயிர் செழித்து வளராது. அதே போன்று குளத்தில் தண்ணீர் தேங்காவிடில் பயிர் வளர்ச்சி இருக்காது.

ஆற்று வண்டல் தேற்றும் பயிரை!

அர்த்தம் :

ஆற்று வண்டலானது எப்போதும் வளமானதாக இருப்பதால் அது பயிரின் வளர்ச்சிக்கு உதவும்.

நிலத்தில் எடுத்த பூண்டு, நிலத்தில் மடிய வேண்டும்!

அர்த்தம் :

பசுந்தாள் போன்ற உரப்பயிர்களை வளர்த்து , அதனை அந்நிலத்திலே மடக்கி உழுது வளத்தினை அதிகரிக்க செய்ய வேண்டும்.

கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி

அர்த்தம் :

வளமில்லாத நிலத்துக்கு வன்னி மரங்களை நட்டு வளர்த்தால் நிலம் வளமாகும்.

கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு!

அர்த்தம் :

வறுமை வாடும் குடும்பத்திற்கு எட்டு வெள்ளாடுகளை வளர்த்தால் வறுமை நீங்கும்.
கலக்க விதைத்தால், களஞ்சியம் நிறையும்!விதைகளை முறையான இடைவெளி விட்டு விதைத்தால் விளைச்சல் பெருகும். அதன் காரணமாக களஞ்சியம் (தானிய கிடங்கு) நிறையும். இடைவெளி இல்லாது (அடர) விதைத்தால் விளைச்சல் பயன் தராது, மாற்றாக வெறும் வைக்கோல் (போர்) மட்டும் உயரம்.

காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும்!

அர்த்தம் :

தண்ணீர் பாய்ச்சி நிலம் நன்றாக காய்ந்த பின் மீண்டும் தண்ணீர் விடவேண்டும்.

கூளம் பரப்பி கோமியம் சேர்!

அர்த்தம் :

கூளம் எனபது சிதைந்த வைக்கோல் ஆகும். அவற்றை பரப்பி வைத்து அதன்மீது கோமியத்தை தெளித்தால் உரம் விரைவில் சத்தானதாக மாறும்.

கோரையைக் கொல்ல கொள்ளுப் பயிர் விதை!

அர்த்தம் :

நெல் வயல்களில் வளர்ந்துள்ள களைப் பயிரான கோரைப்புல்லை கொள்ளுப் பயிரினை கொண்டு தடை செய்யலாம்.

சொத்தைப் போல்,விதையைப் பேண வேண்டும்!

அர்த்தம் :

விவசாயி என்பவன் தன்னுடைய சொத்தை பாதுகாப்பது போல் விதைகளை பாதுகாக்க வேண்டும்.

இவற்றை பழமொழிகள் என்று கூறுவதைவிட, பொன்மொழிகள் என்றே வருணிக்கலாம். ஏனெனில், சில விஷயங்களை அனுபவித்துத் தெரிந்து கொள்வதைவிட, மற்றவர்களின் அனுபவங்களை பாடமாக்கிக்கொள்வதே உத்தமம்.

அதற்கு இந்த பழமொழிகள் பெரிதும் உதவும்.

மேலும் படிக்க...

பணம் சம்பாதிக்க நல்லதொரு வழி- பால் வியாபாரத்தில் உச்சம்தொட சில யோசனைகள்!!

உடலுக்கு உரமிடும் சிறுதானியங்கள்- எண்ணற்ற நன்மைகள் நமக்கு!

உங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும் சிறந்த உணவுகள்!

நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் குளிர்கால உணவுகள்! நீங்களும் சாப்பிடுங்க!

English Summary: Agricultural proverbs! Do you know? Published on: 25 July 2020, 05:14 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.