திருப்பூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதம மந்திரி பயிர் காப்பீடுத் திட்டத்தின் கீழ் 2023-24 ஆம் ஆண்டு ராபி பருவ தோட்டக்கலைப் பயிர்களுக்கு காப்பீடு செய்தல் தொடர்பான அறிவிப்பினை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
பயிர் காப்பீடு செய்ய பணிகள் தற்போது பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசிய மையமாக்கப்பட்ட வங்கிககள் மூலம் நடைப்பெற்று வருகிறது. எனவே, இதுவரை ராபி பயிர்களை காப்பீடு செய்யாத, காப்பீடு செய்ய விருப்பமுள்ள விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் பொது சேவை மையங்கள் அல்லது தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்களை அணுகி இத்திட்டத்தில் காப்பீடு தொகை செலுத்தி பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ் இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.
தோட்டக்கலைப்பயிர்கள் - காப்பீடு தொகை (ஏக்கர்-1-க்கு) - காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் விவரம் பின்வருமாறு:
1.கொத்தமல்லி- ரூ.622.50 - 02.01.2024
2.வெங்காயம்- ரூ.2227.50- 31.01.2024
3.மிளகாய்- ரூ.1257.50- 31.01.2024
4.தக்காளி- ரூ.1495.00- 31.01.2024
5.வாழை- ரூ.4900.50- 29.02.2024
6.மரவள்ளி- ரூ.1720.00- 29.02.2024
மேலும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள மற்றொரு செய்திக்குறிப்பில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பினை சார்ந்தவர்கள் விவசாய நிலம் வாங்குவதற்கு மானியத்துடன் வங்கி கடனுதவி வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் பின்வருமாறு- நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்கள் சமூக பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் பொருட்டு அவர்கள் விவசாய நிலம் வாங்க நிலத்தின் சந்தை மதிப்பீட்டின்படி திட்டத் தொகையில் 50% அல்லது அதிகபட்சம் ரூ.5.00 இலட்சம் வரை மானியம் விடுவிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் வாங்கப்படும் நிலங்களுக்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது.
தற்போது பயனாளிகள் பங்குத்தொகை இல்லாமல் மானியத்தொகை போக எஞ்சிய கிரையத் தொகையினை தேசிய பட்டியலினைத்தோர் நிதி மேம்பாட்டுக் கழக நிதியிலிருந்து பயனாளிகளுக்கு 6 % மிக குறைந்த வட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் கடனாக பெற்று நிலம் வாங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பினர் தாட்கோ இணையதள முகவரியில் விண்ணப்பிக்க செய்ய வேண்டும். (www.tahdco.com) மேலும் விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, அறை எண்:501 (ம) 503, 5 வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர்-641 604.தொடர்புக்கு: அலைபேசி எண்: 94450 29552, தொலைபேசி எண்: 0421-2971112.
Read more:
கொடுவா மீன்வளர்ப்பு பணிக்கு 60 % வரை மானியம்- ஆட்சியர் அறிவிப்பு
பப்பாளி பழத்தினை மதிப்பு கூட்டுமுறையில் காசு பார்க்கும் வழிகள்!
Share your comments