கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற வங்கியாளர்களுக்கான மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டத்தில் நபார்டு வங்கி சார்பில் 2024-25 ஆம் ஆண்டிற்கான ரூ.18,273.55 கோடி மதிப்பிலான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இ.ஆ.ப., நேற்று (28.12.2023) வெளியிட்டார்.
இந்தியாவில் கிராமப்புறங்களில் விவசாயம் மற்றும் பிற பொருளாதார நடவடிக்கைகளுக்கான கடன் வழங்கல் கொள்கை, திட்டமிடல் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான விஷயங்களை நபார்டு வங்கி தான் தீர்மானிக்கிறது. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அடுத்த நிதியாண்டிற்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
இதுத்தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இ.ஆ.ப., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் விவரம் பின்வருமாறு-
தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி (நபார்டு வங்கி) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிடைக்கப் பெற்ற வளம் சார்ந்த தகவல்களை சேகரித்து அதன் மூலம் ரூ.18273.55 கோடி அளவுக்கு கடனாற்றல் உள்ளது என மதிப்பீடு செய்துள்ளது. இது 2023-24 ஆண்டைவிட 84.04 சதவிகிதம் அதிகம் என்பது குறிப்பிடதக்கது.
அதனடிப்படையில், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 2024-25 ஆம் ஆண்டுக்கு, பயிர் கடன் ரூ.8147.36 கோடியும், விவசாய முதலீட்டு கடன் ரூ.2471.52கோடியும், விவசாய கட்டமைப்பு கடன் ரூ.464.03கோடியும், விவசாய இதர கடன்கள் ரூ.230.07 கோடியும் என விவசாயத்திற்கான மொத்த கடன் மதிப்பீடு ரூ.11312.99 கோடியும், சிறு, குறு நடுத்தர தொழில் கடன் ரூ.5726.25 கோடியும் கடனாற்றல் உள்ளதென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இதைப்போல் ஏற்றுமதி, கல்வி மற்றும் வீட்டு வசதிக்கான கடன் ரூ.168.11 கோடியும், அடிப்படை கட்டுமான வசதி ரூ.57.00 கோடியும், சுய உதவிக்குழு மற்றும் கூட்டு பொறுப்பு குழுக்கான கடன் அளவு ரூ.995.55 கோடி என மொத்தம் ரூ.18273.55 கோடி அளவுக்கு கடனாற்றல் உள்ளதென மதிப்பீடு செய்து கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது.
Read more: பிஎம் கிசான்- நில ஆவண விவரங்களை இணைக்காத விவசாயிகளின் கவனத்திற்கு!
இது போன்ற கடன் வசதிகள், விவசாயத்தில் அடிப்படை கட்டுமான வசதிகளை பெருக்கி விவசாயத்தை ஒரு வளம் நிறைந்த தொழிலாக மாற்றிட உதவும். வேளாண்மையில் இயந்திரமயமாக்கல், சொட்டுநீர் மற்றும் தெளிப்பு நீர் பாசன முறையை பயன்படுத்துதல், கால்நடை வளர்ப்பை விவசாயத்தின் ஒரு அங்கமாக செய்தல், விவசாயிகளின் வருமானத்தை பெருக்க உதவிடும். இது போன்ற முதலீடுகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என வங்கிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னோடி மாவட்ட அலுவலர் கிருஷ்ணகுமார், நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் ரமேஷ், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் மரு.ராஜேந்திரன், இந்தியன் வங்கி முன்னோடி வங்கி மேலாளர் சரவணன், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சீனிவாசன், தாட்கோ மேலாளர் கே.எஸ்.வேல்முருகன், மற்றும் வங்கி மேலாளாலர்கள், அரசு துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.
Read more: Vi SmartAgri திட்டம்- விவசாய பணிகளில் உள்ளீடு செலவு 23% வரை குறைவு
Share your comments