Government's important announcement for coconut farmers!
விலை ஆதாரத் திட்டத்தின் அடிப்படையில் கொப்பரைத் தேங்காய்களின் கொள்முதல் மீண்டும் தொடங்கியுள்ளது. விவசாயிகள் பயன்பெற ஈரோடு விற்பனைக்குழு வேளாண்மை துணை இயக்குநர் சாவித்திரி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்த விரிவான தகவலை இப்பதிவு விளக்குகிறது.
தமிழ்நாட்டில் விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருட்களுக்கு லாபகரமான விலை கிடைப்பதற்காக மத்திய மற்றும் மாநில அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தென்னை விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், விலை ஆதரவு திட்டத்தின் அடிப்படையில் பந்து கொப்பரை, அரவை கொப்பரைகளை விவசாயிகளிடமிருந்து நேரடியாக குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்தது அறிந்த செய்தியாகும்.
அதன் அடிப்படையில், ஈரோடு மாவட்டத்தில் தென்னை விவசாயிகள் பலன்பெறும் வகையில் விலை ஆதாரத் திட்டத்தின் அடிப்படையில் கொப்பரை கொள்முதல் செய்வதற்கான காலக்கெடு 31.10.2022 வரை தமிழக அரசால் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.
ஈரோடு மாவட்டத்தில் அவல்பூந்துறை, எழுமாத்தூர், கொடுமுடி மற்றும் சத்தியமங்கலம் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் கொப்பரை கொள்முதல் தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றது. ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் கொப்பரைத் தேங்காய் பருப்பு கிலோ ரூ.73 முதல் ரூ.78 வரை மட்டுமே விற்பனை ஆகிறது என்பது நோக்கத்தக்கது.
இந்த நிலையில், விலை ஆதாரத் திட்டத்தின் கீழ் ஒரு கிலோ அரவை கொப்பரை ரூ.105.90க்கும் பந்து கொப்பரை ரூ.110க்கும் அரசால் கொள்முதல் செய்யப்படுவதால் ஈரோடு மாவட்ட தென்னை விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அவரவர் கொப்பரைத் தேங்காயை அருகில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்து பயன்பெறுமாறு தமிழக அரசு சார்பாகக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
Share your comments