கொள்ளு பயிர் 'ஏழைகளின் பயிர்' என்றழைக்கப்படுகிறது. இது குறைந்தளவு வளம் கொண்ட பகுதிகளில் சாகுபடி செய்ய ஏற்றது. நமது நாட்டில் இது குறைந்தளவு மழைபொழியும் அதாவது 200-700 மி.மீ. மழை பதிவாகும் பகுதிகளிலும், குறைந்த மண்வளம் கொண்ட பகுதிகளிலும் பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. எனவே இது ‘வறட்சியை தாங்கும் பயிர்' எனவும் அழைக்கப்படுகிறது.
இத்தகைய கொள்ளு பயிரில் இரும்புச்சத்துப் பற்றாக்குறை அறிகுறிகள் இருப்பின் அவற்றினை எவ்வாறு கண்டறிவது மற்றும் அதனை நிவர்த்தி செய்யும் வழிமுறைகள் என்ன என்பது குறித்து வேளாண் துறை சார்ந்த முனைவர்.ம.சங்கீதா, முனைவர்.பா.ச.சண்முகம், முனைவர். கி. கீதா மற்றும் முனைவர்.மு.சை.அனிஷா ராணி ஆகியோர் தொகுத்து வழங்கிய தகவல்களை இந்த கட்டுரை உள்ளடக்கியுள்ளது . அவற்றின் விவரம் பின்வருமாறு-
கொள்ளு பயிரானது உணவு,தீவனம் மற்றும் உரம் ஆகியவற்றை தரக்கூடிய ஒரு மலிவான ஆதாரமாகும். இதன் தானியத்தில் அதிகளவு ஊட்டச்சத்து காணப்படுகிறது. குறிப்பாக புரதம் (44 சதவீதம்) மற்றும் தாதுஉப்புக்களான பாஸ்பரஸ் (44.4 சதவீதம்) மற்றும் சுண்ணாம்பு சத்து (28.7 சதவீதம்) ஆகியவற்றை கொண்டுள்ளது. மேலும் இது கொழுப்பை குறைக்கக்கூடிய தன்மை கொண்டது. அதாவது குறைந்த அடர்த்தி கொழுப்பை குறைக்கவும், அதிக அடர்த்தி கொழுப்பை அதிகரிக்கவும் செய்கிறது. கொள்ளு பயிர் அதிகளவு இலைகள் உற்பத்தி செய்வதன் மூலமாகவும், மண்ணில் தழைச்சத்தை நிலைநிறுத்துவதன் வாயிலாகவும் மண்வளத்தை அதிகரிக்க உதவுகிறது.
இரும்புச்சத்துப் பற்றாக்குறை அறிகுறிகள்:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இராபி பருவத்தில் கொள்ளு பயிரானது மானாவாரியில் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பயிரில் தற்பொழுது பரவலாக இரும்புச்சத்துப் பற்றாக்குறை அறிகுறிகள் தென்படுகிறது. இரும்புச்சத்துப் பற்றாக்குறையினால் கொள்ளு செடியில் புதிதாக வெளிவரக்கூடிய இளம் இலைகள் பச்சையம் இழந்து வெளிறி மஞ்சள் நிறத்திலும், இலை நரம்புகள் பச்சையாகவும் காணப்படும்.
பற்றாக்குறை அளவு அதிகரிக்கும் பொழுது இலை நரம்புகள் நிறமிழந்து, இலைப்பரப்பு முழுவதும் மஞ்சள் நிறமாக மாறி பின்பு வெண்மை நிறத்தில் காட்சியளிக்கும். பாதிக்கப்பட்ட செடியானது மஞ்சள் கலந்த வெண்மை நிறத்தில் தோற்றமளிக்கும்.
இரும்புச்சத்துப் பற்றாக்குறையானது பொதுவாக செம்மண் கலந்த மணற்பாங்கான நிலங்களிலும், களர் நிலங்களில் அதாவது மண்ணின் அமில கார நிலை 8.0 க்கு அதிகமாக உள்ள நிலங்கள் மற்றும் சுண்ணாம்புச்சத்து அதிகமாக உள்ள நிலங்களில் அதிகளவில் தோன்றும். களர் நிலங்களிலும் மற்றும் மண்ணில் பைகார்பனேட் அயனிகள் அதிகளவில் இருக்கும்பொழுதும் மண்ணில் உள்ள இரும்புச்சத்தானது எளிதில் கரையாத உப்புகளாக மாற்றமடைந்து மண்ணின் களித்துகள்களில் நிலைப்படுத்தப்படுகின்றன. ஆகையால் பயிர்கள் அதனை எளிதில் எடுத்துக் கொள்ள இயலாமல் பற்றாக்குறை அறிகுறிகளை தோற்றுவிக்கும்.
மேலும் மண்ணில் அதிகளவு ஈரப்பதம் இருக்கும் பொழுதும் மற்றும் காற்றோட்டம் குறையும் பொழுதும் இரும்புச்சத்துப் பற்றாக்குறை அதிகளவில் தோன்றும். இந்த ஊட்டச்சத்துப் பற்றாக்குறை அறிகுறிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதனை மேலாண்மை செய்ய வேண்டும்.
Read more: குறுவை பரப்பிற்கு நிவாரணம்- அறிக்கை அனுப்பிய தஞ்சை மாவட்ட நிர்வாகம்
நிவர்த்தி முறை:
இரும்புச்சத்துப் பற்றாக்குறை அறிகுறிகளை நிவர்த்தி செய்ய இரும்பு சல்பேட் 1 சதவீதம் கரைசலை அதாவது 100 கிராம் இரும்பு சல்பேட் உரம், எலுமிச்சை பழச்சாறு 1 மி.லி மற்றும் ஒட்டும் திரவம் 5 மி.லி ஆகியவற்றை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து இலைகளின்மீது நன்றாக படும்படி காலை அல்லது மாலை நேரத்தில் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். இந்த பற்றாக்குறை அறிகுறிகள் மறையும்வரை 10 நாட்கள் இடைவெளியில் 2 அல்லது 3 முறை தெளிக்க வேண்டும்.
இவ்வாறு இலைவழித் தெளிப்பு செய்வதன் மூலம் கொள்ளு பயிரில் இரும்புச்சத்துப் பற்றாக்குறை அறிகுறிகளை நிவர்த்தி செய்வதுடன் அதனால் ஏற்படும் மகசூல் இழப்பை தவிரக்க முடியும் என தனது ஆய்வு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்கள்.
இதையும் காண்க:
தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளுக்கான 10 மானியத் திட்டங்கள்!
நெருங்கியது மிக்ஜாம் புயல்- 4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிப்பு
Share your comments