2024-2025 ஆம் ஆண்டிற்கான பிசான பருவ நெற் பயிர் மற்றும் ராபி பருவ மற்ற பயிர்கள் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் போன்றவற்றினை பயிர் காப்பீடு செய்யுமாறு திருநெல்வேலி மாவட்ட விவசாயிகளுக்கு வேண்டுக்கோள் விடுத்துள்ளார் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் கா.ப,கார்த்திகேயன்.
2023-2024 ஆம் ஆண்டு பாரத பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் நெற்பயிருக்கு பயிர் காப்பீடு செய்திருந்த 1552 விண்ணப்பங்களுக்கு ரூ.68.26 இலட்சம் இழப்பீட்டுத் தொகையாக விவசாயிகளின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிகணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில் நடப்பாண்டிற்கான பயிர் காப்பீடு தொடர்பான அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அவற்றின் விவரம் பின்வருமாறு-
பயிர் காப்பீடு தொடர்பான அறிவிக்கை:
2024-2025 ஆம் ஆண்டிற்கு பிசான பருவ நெல் பயிருக்கும், ராபி பருவ மற்ற பயிர்களான நெல்(கோடைப்பருவம்), மக்காச்சோளம், உளுந்து, பாசிப்பயறு ஆகிய பயிர்களுக்கும் தோட்டக்கலைத்துறை பயிர்களான வாழை, வெண்டை பயிர்களுக்கும் பயிர் காப்பீடு செய்ய அறிவிக்கை செய்யப்பட்டுள்ளதால், விவசாயிகள் மேற்கண்ட திட்டத்தின்கீழ் பதிவு செய்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேளாண் பயிர்களான பிசான பருவ நெற் பயிருக்கு காப்பீடு செய்ய பிரீமியத் தொகையாக ஏக்கருக்கு ரூ.534/-ம், மக்காச்சோள பயிருக்கு பிரீமியத் தொகையாக ஏக்கருக்கு ரூ.330/-ம், உளுந்து பயிருக்கு ஏக்கருக்கு பிரீமியத் தொகையாக ரூ.231/-ம், பாசிப்பயருக்கு ஏக்கருக்கு பிரீமியத் தொகையாக ரூ.167/-ம், தோட்டக்கலை பயிர்களான வாழை பயிருக்கு ஏக்கருக்கு ரூ.1440/-ம், வெண்டை பயிருக்கு ஏக்கருக்கு ரூ.314/-ம் பிரீமியத் தொகையாக அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பயிர் காப்பீடு செய்ய கடைசித்தேதி என்ன?
பிசான பருவ நெல் பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய டிசம்பர் -16 கடைசி நாளாகும். உளுந்து மற்றும் பாசிப்பயறு பயிர்களுக்கு நவம்பர் 15 பயிர் காப்பீடு செய்ய கடைசி நாளாகும்.
மக்காச்சோள பயிருக்கு டிசம்பர் 30 பயிர் காப்பீடு செய்ய கடைசி நாளாகும். கோடை பருவ நெற்பயிர் செய்யும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய 31.01.2025 கடைசி நாளாகும்.
தோட்டக்கலைத்துறை பயிர்களான வாழைக்கு 28.02.2025 பயிர் காப்பீடு செய்ய கடைசி நாளாகும். வெண்டைக்கு பயிர் காப்பீடு செய்ய 15.02.2025 கடைசி நாளாகும். விவசாயிகள் தங்கள் பயிர்களை இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் இழப்புகளிலிருந்து பாதுகாத்திட பாரத பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின்கீழ் காப்பீடு செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வடகிழக்கு பருவமழை தற்போது துவங்கியுள்ளதால் மழை வெள்ளத்தினால் பயிர் பாதிப்பு ஏற்பட்டால் அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தையோ அல்லது மாவட்ட வெள்ள கட்டுப்பாட்டு அறையினையோ 0462-2572514 என்ற எண் மூலமாகவும், பயிர் இன்சூரன்ஸ் தொடர்பான புகார்களுக்கு 18001036565, 7358150560 அல்லது 9944369649 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விவசாயிகள் தங்கள் கால்நடை குறித்த விவரங்களை அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையில் பதிவு செய்து கொண்டால் மழைக்காலங்களில் பாதிப்பு நேரும்போது தாமதம் இன்றி நிவாரணம் கிடைத்திட இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more:
பசுந்தீவன சாகுபடிக்கு மானியத்தில் இடுப்பொருள் மற்றும் புல்நறுக்கும் கருவி!
தரிசு நிலங்களில் சிறுதானிய சாகுபடி- உழவு மேற்கொள்ள பின்னேற்பு மானியம்!
Share your comments