விருதுநகர் மாவட்டத்தில் ரூ.17.50 லட்சம் வரையிலான மானியத்துடன் கூடிய நிதியுதவி பெற்று தொழில் தொடங்கும் அறிவிப்பினை விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் (PMEGP) திட்டத்தின் அடிப்படையில் கிராமப்புற மற்றும் நகர்புற அனைத்து ஆண், பெண் இருபாலரும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் வங்கிகளின் மூலமாக ரூ.17.50 லட்சம் வரையிலான மானியத்துடன் கடனுதவி பெற்றுப் புதிதாக உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் பயனைப் பெற விரும்புவோருக்கு 18 வயதிற்கு மேல் இருத்தல் வேண்டும். சேவைப்பிரிவின் கீழ் ரூ. 5 இலட்சம் வரையிலான திட்ட அளவு மற்றும் உற்பத்திப் பிரிவு ஆகியவற்றின் கீழ் ரூ. 10 இலட்சம் வரையிலான திட்ட அளவிற்கும் கல்வித் தகுதி எதுவும் தேவையில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சேவைப் பிரிவிற்கு அதிகபட்சமாக ரூ. 20 இலட்சம் வரையிலும் உற்பத்திப் பிரிவிற்கு ரூ. 50 இலட்சம் வரையிலும் தொழில் தொடங்க அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
2022-23 ஆம் நிதி ஆண்டிற்கான திட்டத்தில் விருதுநகர் மாவட்ட தொழில் மையத்திற்கு 216 நபர்களுக்கு ரூ.6.24 கோடி எனும் அளவில் மானியம் என நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் வழி முறைகளைப் பின்பற்றி வங்கியால் ஒப்புதல் அளிக்கப்பட்ட தொழில் திட்டங்களுக்கு அதிகபட்சமாக நகர்ப்புறத்தில் 25 சதவீத மானியம், கிராமப்புறத்தில் 35 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் கடன் பெறும் தொழில் முனைவோர்கள் திட்ட மதிப்பீட்டில் 5 முதல் 10 சதவீதம் வரை தங்கள் பங்களிப்பாக வங்கிக்கணக்கில் செலுத்துதல் வேண்டும். மேலும், இத்திட்டத்தில் திருத்திய வழிகாட்டுதலின்படி கால்நடை மருத்துவரிடமிருந்து பெறப்படும் திட்ட அறிக்கையின் அடிப்படையில் ஆடு, மாடு, கோழி மற்றும் மீன் பண்ணைகள் சார்ந்த தொழில்கள் துவங்க இவ்வலுவலகம் மூலம் கடன் வசதி செய்து தரப்ப்படும் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆகவே, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள படித்த ஆர்வம் உள்ள தொழில் திறமையுள்ள ஆண், பெண் தொழில் முனைவோர்கள் www.kviconline.gov.in Agency DIC என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
மேற்கண்ட இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கும் போது ஆதார் எண் மற்றும் பெயர் ஆகியவற்றை பதிவு செய்யும் போது, ஏஜென்சி என்ற option வரும் போது DIC எனத் தேர்ந்தெடுக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயன் பெறுங்கள்.
மேலும் படிக்க
Share your comments