தமிழகத்தில் பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலையில் சிவப்பு கம்பளிப்புழுத் தாக்கும் அபாயம் இருப்பதால், முறையான பாதுகாப்பு வழிமுறைகளைக் கையாளுமாறு வேளாண் பேராசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாட்டில், சேலம், தர்மபுரி, கிரிஷ்ணகிரி, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், பெரம்பலூர் ஆகிய வட மாவட்டங்களில் தற்போது பரவலாக நிலக்கடலை ப் பயிரிடப்பட்டுள்ளது. நிலக்கடலையில், அமாஸ்க்டா அல்பிஸ்ட்ரைக்கா (Amsacta albistriga) எனப்படும் சிவப்பு கம்பளிப் புழுவானது தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு தாக்கினால், 25 முதல் 90 விழுக்காடு அளவிற்கு சேதம் விளைக்கும்.
தாக்குதலின் அறிகுறிகள்
இளம் சிவப்பு கம்பளிப் புழுவானது, இலையின் பச்சையத்தைச் சுரண்டி உண்ணும். நன்கு முதிர்ந்த புழுவானது, இலையின் நரம்பு தவிர்த்து இடைப்பட்ட இலைப் பகுதியை உண்டு சேதப்படுத்தும்.
அதிகமாக தாக்கப்பட்ட செடிகள், மாடு மேய்ந்தது போல் நுனிக் குருத்து மற்றும் இலைகள் வெட்டப்பட்டு காணப்படும்.
பூச்சியின் அடையாளம்
முட்டை
தாய் அந்து பூச்சி, வெண்நிற முட்டையை இலையின் அடிப்பகுதியில் குவியலாக ஈடும்.
புழு
உடலின் மேற்பரப்பில் நீளமான சிகப்பு கலந்த பழுப்பு நிற முடிகளுடன் கூடிய பழுப்பு நிற புழுக்கள்இருக்கும்.
கூட்டுப்புழு
பழுப்பு நிற, நீள் கோள வடிவில், நீண்ட நாட்களாக உறக்க நிலையில் மண்ணில் இருக்கும். நல்ல மழையை தொடர்ந்து, உறக்க நிலை மீள் பெற்று தாய் அந்து பூச்சிக்கள் வெளியே வரும்.
அந்துப்பூச்சி
முன் இறகானது பழுப்பு கலந்த வெள்ளை நிறத்தில் சிவப்பு நிற முன் புறக் கோடுகளுடன் காணப்படும், பின் இறகானது வெள்ளை நிறத்தில் கருப்பு நிற புள்ளிகளுடன் காணப்படும்.
கட்டுப்படுத்தும் முறைகள் (Control Methods)
-
கோடை உழவு செய்வதன் மூலம் கூட்டுப் புழுவானது தரைக்கு மேலே வந்து பறவைகளுக்கு உணவாகும்.
-
விளக்குப்பொறியை (1 -3 வீதம்/ ஹெக்டர்) அமைத்து அந்துப்பூச்சியை கவர்ந்து அழிக்கலாம்.
-
விளக்குப்பொறி வைத்திருக்கும் பகுதியில் முட்டைக் குவியலையும், இளம் புழுக்களை கைகளால் சேகரித்து அழிக்கலாம்.
-
2.5 கிலோ / ஹெக் கார்பைரிலை 625 லிட்டர் நீரில் கரைத்து தெளிக்க வேண்டும்
நச்சுப் பொறி வைக்க வேண்டும்.
-
துவரை மற்றும் தட்டைப்பயிறு ஆகியவற்றை ஊடுப்பயிராக பயிர் செய்து, இளம் புழுக்களை கவர்ந்து கட்டுப்படுத்தலாம்.
-
வயலைச் சுற்றிலும் 30 செ.மீ நீளம் மற்றும் 25 செ.மீ அகலம் இருக்கும் அளவிற்கு சிறிய அளவில் குழிகள் அமைத்து, படையெடுத்து வரும் புழுக்களை அழிக்கலாம்.
-
மிதைல்டெமெடான் 25 EC- 1 லிட்டர் / ஹெக்டர் அல்லது குயினால்பாஸ் 25 EC – 750 மிலி /ஹெக்டர் என்ற அளவில் 500 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
-
குலொரன்ட்ரனலிபுரொல் 18. 5 EC – 150 மிலி / ஹெக்டர் என்ற அளவில் 500 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
-
ஃப்ளுபென்டையமைய்டு (Flubendiamide) 20 WDG 7.5 கி என்ற அளவில் 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
மேலும் விவரங்களுக்கு, தஞ்சாவூர், ஆர்விஏஸ் வேளாண்மை கல்லூரி, உதவி பேராசியர்கள் (பூச்சியியல் துறை) முனைவர் செ. சேகர், கு.திருவேங்கடம் ஆகியோரை sekar92s@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
இயற்கை விவசாயம் (Organic Farming)
இயற்கை விவசாயம் செய்பவராக இருந்தால், பஞ்சகவ்யா, அதாவது நெய், சாணம், கோமியம், பால், தயிர் கொண்டு தயாரிக்கப்படுவது. இத்துடன் வெல்லம் ஒரு கிலோ, ஒரு சீப் வாழைப்பழம், பேரிச்சம்பழம் அரை கிலோ, ஆகியவற்றுடன் 3 இளநீரைச் சேர்த்துக்கொள்ளலாம். இதனைத் தயாரிக்க 25 நாட்கள் ஆகும். இந்த கரைசலைப் பயன்படத்தினால், இப்புழுக்கள் விரைவில் கட்டுப்படும்.
வேப்பயிலை, நொச்சியிலை, புங்கயிலை ஆகியவற்றில் தலா 5 கிலோ என மொத்தம் 15 கிலோ எடுத்துக்கொள்ளுங்கள். அவற்றை 5 அல்லது 10 லிட்டர் கோமியம் கலந்து ஊற வைக்கவும். 4 நாள்கள் கழித்து, அவை மக்கி அழுகிவிடும். இதனை மிதமான வெப்பத்தில் கொதிக்கவைத்து வடிகட்டி 10 லிட்டர் டேங்க்கிற்கு 60 மில்லி லிட்டர் அளவுக்கு கலந்து தெளிக்கலாம். இதனைத் தயாரிக்க 5 நாள்கள் அகும்.
அதற்கு பதிலாக தலா 3 கிலோ வீதம், 9 கிலோ இலைகளை, 10 லிட்டர் தண்ணீர் மற்றும் அரைலிட்டர் கோமியத்தில் ஊறவைக்கவும்.
பின்னர் கொதிக்கவைத்து வடிகிட்டி, ஒரு லிட்டர் கோமியம் சேர்த்துக்கொள்ளவும். பின்னர் மறுநாளே, இந்த கலவையில் இருந்து 70 முதல் 80 மில்லி லிட்டர் அளவுக்கு எடுத்து 10 லிட்டர் டேங்க்கில் கலந்து தெளித்தால், பூச்சிகள் அந்த இடத்தில் இருந்து ஓடிவிடும்.
மேலும் படிக்க...
மக்காச்சோள பயிரைத் தாக்கும் பூச்சிகளும் அதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்!!
மானாவாரி துவரையில் அதிக மகசூல் பெற வேண்டுமா? வேளாண்துறை அளிக்கும் ஆலோசனைகள்!!
Share your comments