1. விவசாய தகவல்கள்

தென்னை மரத்தை தாக்கும் முக்கிய பூச்சிகளும் மற்றும் அதன் மேலாண்மை முறைகளும்!

Daisy Rose Mary
Daisy Rose Mary
Coconut Tree
Credit : X days in Y

தென்னை மரம் ஒரு முக்கியமான மலை தோட்டப் பயிராகும். தென்னை மரம் நமக்கு தேவையான அனைத்து விதமான ஊடு பொருள்களை தருகிறது. ஆனால் பூச்சிகளின் தாக்குதலால் அதிகமாக விளைச்சல் மற்றும் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. தென்னையை தாக்கும் பூச்சிகளின் தாக்குதலுக்கான அறிகுறியும் மற்றும் அதன் மேலாண்மை முறைகள் பற்றியும் காண்போம்.

காண்டாமிருக வண்டு

இது குருத்துவண்டு, கருவண்டு என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் இதன் தாக்குதல் இருந்தாலும் ஜூன் முதல் செப்டம்பர் வரை அதிகமாக இருக்கும். இவ்வண்டுகள் தென்னையின் உச்சியில் விரிவடையாத குருத்துப்பாகத்தில் துளையிட்டு, மரத்தின் உள்ளே சென்று வளரும் மொட்டுப்பகுதியை மென்று விடுகிறது.

மேலாண்மை

காண்டாமிருக வண்டின் வாயில் பேக்குலோ வைரஸ் ஒரைகடஸ் என்ற வைரஸை ஊசிமூலம் செலுத்தி 15 வண்டுகள் / 1 ஹெ  என்ற அளவில் தென்னந்தோப்பில் விட்டால் அது மற்ற வண்டுகளுடன் கலந்து நோயினைப் பரப்பி அவற்றை அழிக்கின்றது. நடுக்குருத்துப்பாகத்தில் (கொண்டை) மட்டை இடுக்குகளில் கீழ்க்கண்ட ஒரு மருந்திடுவதன் மூலம் அவ்வண்டின் தாக்கத்தை தடுக்கலாம்.

சிவப்புக் கூண் வண்டு

மரத்தில் ஓட்டைகளும், ஓட்டைகள் வழியே திசுக்களைத் தின்றபின் வெளியே தள்ளப்பட்ட மரநாறுகளும் காணப்படும். புழுக்கள் உட்சென்ற சிறிய துவாரத்தின் வழியே சிவப்பு நீர் வடிந்து காய்ந்த பிசின் காணப்படும், வெள்ளைப் புழுவானது இளந்தண்டு பகுதியைத் துளைத்து உள்ளே சென்று, இளந்தண்டின் சோற்றுப் பகுதியைத் தின்று வேகமாக வளர்கின்றது.

மேலாண்மை

பாதிக்கப்பட்ட மரங்களில் இருக்கும் துளைகளை கவனித்து மேலே இருக்கும் துளையைத் தவிர பிறவற்றை அடைத்துவிட வேண்டும். பின்பு இத்துளை வழியே புனல் மூலம் 1% கார்போரைல் (20கி/லி) (அ) 0.2% டிரைகுளோர்பான் மரம் ஒன்றுக்கு 1 லி வீதம் ஊற்றிவிட்டுத் துளையை அடைத்து விட வேண்டும். தேவைப்படின் 1 வாரம் கழித்து மீண்டும் ஒருமுறை செய்யவும். கொண்டைப் பகுதியில் தாக்குதல் இருப்பின் ஓலைகளைச் சுத்தம் செய்து பூச்சிக்கொல்லிக் கரைசலை ஊற்றவும்.

ஈரீயோஃபைட் சிலந்தி

2-3 மாதங்களான குரும்பைகளில் வெளிர் மஞ்சள் நிற முக்கோண வடிவ நிறமாற்றங்கள் பிரியாந்த் எனும் இளந்திசு வளையத்திற்குக் கீழ் தோன்றும். இது ஆரம்ப அறிகுறியாகும். பின்பு இப்பகுதிகள் பழுப்பு நிறமாக மாற்றம் அடைகிறது. இச் சிலந்தியினால் அதிகம் தாக்கப்பட்ட குரும்பைகள் கீழே விழுந்து விடுகின்றன. தாக்கப்பட்ட குரும்பைகள் வளர்ச்சி அடைந்து இளங்காயாக மாறும்போது, பழுப்பு நிறப்பகுதியின் அளவு அதிகமாவதுடன், நீளவாக்கில் பல சிறிய வெடிப்புகளும் தோன்றுகின்றன. வெடிப்புகளின் வழியே பிசின் போன்ற திரவம் வெளிப்படும். இதனால் காய்கள் சிறுத்துவிடுவதுடன், அதன் உள்ளே இருக்கும் பருப்பின் கன அளவும் குறைந்து விடுகின்றது. தாக்கம் அதிகரிக்கும் பட்சத்தில் உரிமட்டையில் ஏற்படும் வெடிப்பினால் பருப்புகள் கெட்டுப்போய்விடுகின்றன.

மேலாண்மை

சுற்று 1: அஸாடிராக்டின் 1% (5 மி.லி / 1லி நீரில் கலந்தது).
சுற்று 2: வேப்பஎண்ணெய் + டீப்பால் (30 மி.லி/1 லி நீரில் கலந்தது). மேலும் டிரையஸோஃபாஸ் 40 EC 5 மி.லி/லி (அ) மோனோகுரோட்டோஃபாஸ் 36 WSC 2 மி.லி/லி (அ) கார்போசல்ஃபான் 25 EC. 2 மி.லி/லி ஏதேனும் ஒரு மருந்தை வேம்பு அஸல் 1% அதாவது 5 மி.லி/லி உடன் கலந்து வேருக்கு அருகே மண்ணில் இடவும். வேப்பம் புண்ணாக்கு 5 கி.கி / மரம் ஒன்றிற்கு / ஓராண்டிற்கு.

Vandu

கருந்தலைப்புழு (அ) பச்சையம் தின்னும் இலைப்புழு

இது அனைத்து வயதிலுள்ள மரங்களையும் தாக்குகிறது. மரத்தின் அடிப்பகுதிகளில் உள்ள ஓலைகளை அதிகம் தாக்குவதால் கொண்டையின் மேற்பகுதியல் உள்ள 3-4 ஓலைகளைத் தவிர மற்ற ஓலைகள் அனைத்தும் காய்ந்து போய்விடும். ஓலையின் அடிப்பகுதியில் உள்ள பச்சையத்தைச் சுரண்டி இப்புழுக்கள் தின்றுவிடும். அதிகமாகத் தாக்கப்பட்ட மரங்கள் எரிந்து தீய்ந்து போனது போல் தென்படும்.

மேலாண்மை

தாக்குதல் ஒட்டுண்ணிகளால் கட்டுப்படுத்த முடியாமல் அதிகரிக்கும்போது, ஓலையின் அடிப்பகுதிகளில் நன்கு படுமாறு டைக்குளோர்வாஸ் (100 EC) 0.02%, (அ) மாலத்தியான் 50 EC 0.05% (1 மி.லி/லி) (அ) குயினால்பாஸ் 0.05% (அ) பாஸலோன் 0.05% இவற்றில் ஏதேனும் ஒன்றை தெளிக்கவும்.

நத்தைப் புழு

இப்பூச்சியின் புழுக்களே ஓலையைத் தாக்கி சேதம் விளைவிக்கின்றது. இளம் புழுக்கள் தென்னை ஓலையின் அடிப்பாகத்தில் இருந்து கொண்டு பச்சயத்தை சுரண்டி உண்ணும். இவை வளரும்போது ஓலையின் நடு நரம்புகள் மட்டுமே இருக்கும். இதனால் அதிகளவில் தாக்கப்பட்ட ஓலைகள் காய்ந்து விடும்.

மேலாண்மை

தென்னைகளை நன்கு கவனித்து, வளராத இளம் புழுக்கள் இருப்பின் அவற்றை சேகரித்து அழித்து விட வேண்டும், கார்பரைல் 50 WP மருந்தினை 2 கி/லி அளவில் கலந்து தெளிக்கலாம். டைக்குளோர்வாஸ் 76 WSC மருந்தினை 2 மி.லி/லி தெளிப்பதன் மூலமும் இதனைக் கட்டுப்படுத்தலாம்.

தட்டைக்கால் நாவாய் பூச்சி

பூச்சிகள் மற்றும் "நிம்ப்" எனப்படும் இளம்பூச்சிகள் குரும்பையைத் தாக்கி நீரை உறிஞ்சி விடுவதோடு, புல்லி வட்டத்திற்குக் கீழே சிறு கொட்டை போன்ற தடிப்பை ஏற்படுத்துகின்றன. பாதிக்கப்பட்ட காய்களில் வெடிப்பு பகுதிகள் தோன்றி அதன் உரிமட்டையை வீணாக்கிவிடுவதுடன் பிசின் போன்ற திரவம் வெடிப்பு வழியே கசியச் செய்கிறது. அதோடு தேங்காய்களில் பருப்பு இன்றி வெற்றுக்காயாகப் போய்விடும். இப்பூச்சிகளின் தாக்குதல் அதிகரிக்கும்போது காய்கள் உதிர்ந்து விடும். மேலும் முதிர்ந்த காய்களின் தரம் கெட்டுவிடும்.

மேலாண்மை

தென்னைகளை நன்கு கவனித்து, வளராத இளம் புழுக்கள் இருபின் அவற்றை சேகரித்து அழித்து விட வேண்டும், கார்பரைல் 50 WP மருந்தினை 2 கி/லி அளவில் கலந்து தெளிக்கலாம். 0.1% கார்போரைல் (1 மி.லி/ லி நீரில் கலந்தது) கரைசலை கொண்டைப் பகுதியிலுள்ள புதிதாக மலர்ந்த பெண் மலர்களின் மீது தெளிக்க வேண்டும். இம் மருந்துகள் முற்றிய காய்கள் மற்றும் ஓலைகளின் மீது படக்கூடாது. நண்பகல் நேரத்தில் மருந்து தெளிப்பதால் தென்னையின் கருவுறுதலுக்கு உகந்த நன்மை செய்யும் பூச்சிகள் கொல்லப்படுவதைத் தவிர்க்கலாம். டைக்குளோர்வாஸ் 76 WSC மருந்தினை 2 மி.லி/லி தெளிப்பதன் மூலமும் இதனைக் கட்டுப்படுத்தலாம்.

Insect

சாம்பல் நிற வண்டு

இளம் தென்னங்கன்றுகளின் வேர்களில் துளையிட்டு நடுப்பகுதி முழுவதையும் தின்றுவிடுவதால் கன்றுகள் மஞ்சள் நிறமடைந்துப் பின் காயத் தொடங்கும். வளர்ந்த மரங்களில் இவ்வண்டு தாக்குவதால் ஓலைகள் மஞ்சள் நிறமாக மாறுதல், குரும்பை உதிர்தல். பூக்கும் பருவம் தள்ளிப்போதல், வளர்ச்சி மற்றும் மகசூல் குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். பாதிக்கப்பட்ட மரத்தின் அடியில் தோண்டிப் பார்த்தால் இவ்வண்டுகளைக் காண முடியும். இந்த வண்டினால் ஊடுபயிராக இடப்பட்டுள்ள கிழங்கு வகைகளும் தாக்கப்படுகின்றது.

மேலாண்மை

மாலத்தியான் 5D என்ற வீதத்தில் பொடியை கன்றுகளை நடுவதற்கு முன்பு மண்ணில் துாவ வேண்டும். போரேட் 10 G - 100 கி/ மரம் (அ) 0.04% குளோர்பைரிஃபாஸ் கரைசலில் கன்றின் வேர்ப்பகுதியை நனைத்தபின் நடவேண்டும். இப்பொடியை மழை பெய்த உடன் ஏப்ரல்-மே மாதத்தில் 1 முறையும், மீண்டும் செப்டம்பரில் ஒரு முறையும் இட வேண்டும்.

கரையான்

இது குருத்துவண்டு, கருவண்டு என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் இதன் தாக்குதல் இருந்தாலும் ஜூன் முதல் செப்டம்பர் வரை அதிகமாக இருக்கும். கன்றுகளை நட்ட இளம் பருவத்தில் கரையானின் தாக்குதல் அதிக அளவில் இருக்கும். மரத்தின் அடிப்பாகங்களில் மணல் கலந்த மண்ணினால் ஆன வரிகள் ஓடியிருப்பது இதன் அறிகுறியாகும்.

மேலாண்மை

காப்பர் சல்பேட் 1% (அ) முந்திரி ஓட்டு எண்ணெய் 80% (அல்லது) குளோர்பைரிபாஸ் 3 மி.லி / லி நீரில் கலந்து வேப்ப எண்ணெய் 5% (அ) வேம்புகாய்பொடி 20% கலந்து தெளிப்பதன் மூலம் தென்னை ஓலைகளைக் கரையான் தாக்காமல் தடுக்கலாம். மரத்தின் அடிப்பகுதியில் சுண்ணாம்பு கரைசலைப் பூசுவதன் மூலமும் தடுக்கலாம். வேப்ப எண்ணெய் கலந்து வளர்ந்த மரத்தில் தரையிலிருந்து 2 மீ உயரம் வரை தண்டுப்பாகத்தில் பூசுவதன் மூலமும் கரையான் தாக்காமல் தவிர்க்க இயலும்.

===============
கா. அருண்குமார், ஆராய்ச்சி மாணவர்
வாசனை மற்றும் மலை தோட்டப்பயிர்கள் துறை
தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோவை, 641003.


முனைவர். வெ. ஜெகதீஸ்வரி, உதவி பேராசிரியர்
தோட்டக்கலை துறை,
தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் (பெண்கள்), திருச்சி.

Karayan

மேலும் படிக்க... 

மீனவர்களுக்கும் கிசான் கிரெடிட் கார்டு மூலம் கடன்! - திட்டத்தை துவங்கியது இந்தியன் வங்கி!

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி 9ம் தேதி உருவாக வாய்ப்பு! - சென்னை வானிலை மையம்!

PM Kisan Update : ரூ.2000 பணம் உங்களுக்கு வந்துவிட்டதா? இல்லையா? உடனடியாக சரிபாருங்கள்!

அதிக மகசூல் அள்ளித்தரும் ஒற்றை நாற்று நெல் நடவு முறை! - விவசாயிகள் ஆர்வம்!

English Summary: The main insects that attack the coconut tree and its management methods! Published on: 06 October 2020, 11:18 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.