தமிழக விவசாயிகளுக்கு விருதுகள்: உழவர் தின விழா இன்று தொடக்கம், கறவை மாட்டுப் பண்ணையம் குறித்த ஒரு மாதச் சுய வேலை வாய்ப்புப் பயிற்சி: இன்று முதல் விண்ணப்பிக்கலாம், தமிழகத்தில் இலவச மின்சாரம் குறித்து வெளியான புதிய அறிவிப்பு, தமிழக வேளாண் அமைச்சர் தலைமையில் விவசாய நலத்திட்டங்கள் குறித்த அதிகாரிகள் கூட்டம், Pan Asia விவசாயிகள் பரிமாற்றத் திட்ட நிகழ்ச்சி இன்றுடன் நிறைவு முதலான விவசாய தகவல்களை இப்பதிவு வழங்குகிறது.
தமிழக விவசாயிகளுக்கு விருதுகள்: உழவர் தின விழா இன்று தொடக்கம்!
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பொன்விழா ஆண்டினைக் கொண்டாடும் விதமாக உழவர்தின விழா இன்று தொடங்கியது. தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் இவ்விழாவானது மதுரை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இன்று தொடங்கியது. இதனைத் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துடன் இணைந்து தமிழக அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அதன் சுகாதாரத் துறை இணைந்து நடத்துகிறது. இவ்விழாவில் சிறப்பாகச் செயல்பட்ட தமிழக விவசாயிகளை ஊக்கப்படுத்தும் விதமாகப் பரிசுகளும் விருதுகளும் வழங்கப்பட இருக்கின்றன.
கறவை மாட்டுப் பண்ணையம் குறித்த ஒரு மாதச் சுய வேலை வாய்ப்புப் பயிற்சி: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் “கறவை மாட்டுப் பண்ணையம்-ஒரு மாதச் சுயவேலை வாய்ப்புப் பயிற்சி” எனும் தலைப்பில் வருகின்ற நவம்பர் 07- ஆம் தேதி முதல் டிசம்பர் 8-ஆம் தேதிவரை பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் அக்டோபர் 25-ஆம் தேதி எனக் கூறப்பட்டுள்ளது. கறவை மாட்டினங்கள், கொட்டகை அமைப்பு, தீவனமளித்தல், இனவிருத்தி முறை, தடுப்பூசி மற்று நோய் மேலாண்மை முதலானவைகள் பயிற்சியில் கற்பிக்கப்பட உள்ளன. மேலும் விவரங்களுக்கு 956682013 என்ற தொலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்புகொள்ளலாம்.
தமிழகத்தில் இலவச மின்சாரம் குறித்து வெளியான புதிய அறிவிப்பு!
தமிழகம் முழுவதும் 11 லட்சம் குடிசை வீடுகளுக்கும், 2.22 கோடி வீடுகளுக்கும் தலா 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் 500 யூனிட் மின்சாரம் வரை மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். மின்சாரத்தில் முறைகேடு செய்வதைத் தவிர்க்கும் வகையில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டள்ளது. மத்திய அரசு வழிகாட்டுதலின்படி ஆதார் சட்டம் 2016 பிரிவு 7ன் கீழ் மானியம் பெறும் அனைத்து மின் நுகர்வோர்களும், விவசாயிகளும் என அனைவரும் தங்களது ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக வேளாண் அமைச்சர் தலைமையில் விவசாய நலத்திட்டங்கள் குறித்த அதிகாரிகள் கூட்டம்!
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மாவட்ட அளவிலான அதிகாரிகளுடன் அரசின் திட்ட செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் தமிழக வேளாண்மை மற்றும் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. விவசாயிகளின் விலை பொருட்களுக்கு தகுந்த விலை கிடைப்பதை உறுதி செய்தல், விளைப்பொருட்களின் விற்பனைக் கூடங்களின் மேம்பட்ட செயல்பாடுகள், E-NAM விவசாயப் பொருட்களின் சந்தைப்படுத்தல் தளங்கள் பற்றிய விழிப்புணர்வு முதலானவைகள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
Pan Asia விவசாயிகள் பரிமாற்றத் திட்ட நிகழ்ச்சி இன்றுடன் நிறைவு!
Pan Asia விவசாயிகள் பரிமாற்றத் திட்டத்தின் 16-வது நிகழ்வு பிலிப்பைன்ஸ்-இல் கடந்த அக்டோபர் 10-ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து ஐந்து நாட்கள் நிகழ்ந்த இது இன்றுடன் நிறைவடைந்தது. விவசாயிகள், தலைவர்கள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், ஊடகங்கள், அரசு அதிகாரிகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் உட்பட பலர், இந்த ஒரு வார கால நிகழ்வில் பங்கேற்பார்கள். இதில் கிருஷி ஜாகரன் நிறுவனரும் தலைமையாசிரியருமான எம்.சி. டொமினிக் பங்கேற்றார் என்பது குறிப்பிடதக்கது.
Smart Protein Summit 2022 மாபெரும் தாவரவியல் மாநாடு இன்றுடன் நிறைவு!
பச்சை காய்கறிகள், கீரைகளிலிருந்து அதன் ஊட்டச்சத்தினை எவ்வித குறைவும் இல்லாமல் பிரித்தறியும் நுட்பங்களை பெருவாரியாகக் கையாளப்படுதலை நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்ட இருநாள் Smart Protein மாநாடு 2022 இன்றுடன் நிறைவடைகிறது. இம்மாநாட்டில் பல உலகத்தர முன்னனி நிறுவனங்கள், தாவரவியலாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் கலந்துகொண்டனர். இதில் மாபெரும் விவசாயப் பத்திரிக்கை-யான கிரிஷி ஜாகரன் குழுவினரும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
பான்-ஆசியா விவசாயிகள் பரிமாற்றத் திட்டம்; விவசாயத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வழிவகுக்கும்
அக்டோபர் 17ம் தேதி விவசாயிகளுக்கு தீபாவளி- PM-kisan 12-வது தவணைத் தொகை!
Share your comments