புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா (RPMFBY) திட்டம் நீலகிரி மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி IFFKO TOKIO பொது காப்பீடு நிறுவனம் (Indian Farmers Fertiliser Cooperative Limited General Insurance Company மூலம் 2023-2024 ஆம் ஆண்டு ராபி பருவத்திற்கு (Rabi Season) செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தில் வங்கி மூலம் பயிர் கடன் பெறும் விவசாயிகள், பயிர் கடன் பெறாத விவசாயிகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட குத்தகை நிலத்தில் சாகுபடி செய்யும் விவசாயிகள் என அனைவரும் பயன் பெறலாம். பின்வரும் வழிமுறைகள் ஏதேனும் ஒன்றின் மூலம், விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம்.
பயிர் கடன் பெறும் விவசாயிகளுக்கு அந்தந்த கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிர் காப்பீடு தொகை பிடித்தம் செய்யப்படும். கடன் பெறாத விவசாயிகள் தங்களின் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள வங்கி கணக்கிலும், IFFKO TOKIO பொது காப்பீடு நிறுவனத்திலும் பயிர் காப்பீடு தொகையை செலுத்தலாம்.
பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு பெற விரும்பும் கடன் பெறாத விவசாயிகள் தங்களுக்கு அருகில் உள்ள வங்கி கிளை/கூட்டுறவு சங்கம்/அங்கீகரிக்கப்பட்ட சேனல் பார்ட்னர்/பொது சேவை மையம் (CSC)/ காப்பீட்டு நிறுவனம் அல்லது தங்களுடைய அங்கீகரிக்கப்பட்ட முகவர் மூலம் தொடர்பு கொள்ளலாம் அல்லது அவர்கள் தனிப்பட்ட முறையில் தேசிய பயிர் காப்பீடு வலைதளத்தில் (www.pmfby.gov.in) குறிப்பிட்ட காலக்கெடு தேதிக்கு முன்பாக சென்று ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நிரப்பலாம்.
கடன் பெறாத விவசாயிகள், முன்மொழிவு படிவம், பதிவுப் படிவம், அடங்கல், ஆதார் அட்டையின் நகல், மற்றும் வங்கி பாஸ் புக்கின் முதல் பக்கம் ஆகிய ஆவணங்களுடன் சமர்பிக்க வேண்டும்.
நீலகிரி மாவட்டத்தில் உருளைக்கிழங்கு, வாழை, முட்டைகோஸ், கேரட், பூண்டு மற்றும் இஞ்சி ஆகிய பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்யலாம். பீரிமியம் தொகையாக ஒரு ஏக்கருக்கு உருளைக்கிழங்கு ரூ.5223/-, வாழை ரூ.4623/-, முட்டைகோஸ் ரூ.3960/-, கேரட் ரூ.3880/- பூண்டு ரூ.5288/- மற்றும் இஞ்சி ரூ.4843/- செலுத்த வேண்டும்.
பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள்: 31.01.2024 (முட்டைகோஸ்), 15.02.2024 (உருளைக்கிழங்கு & பூண்டு) மற்றும் 29.02.2024 (வாழை, கேரட், இஞ்சி). எனவே, நீலகிரி மாவட்டத்திலுள்ள உருளைக்கிழங்கு, வாழை, முட்டைகோஸ், கேரட், பூண்டு மற்றும் இஞ்சி சாகுபடி செய்யும் விவசாயிகள் அனைவரும் தங்களின் பயிர்களை பயிர் காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மு. அருணா இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
முன்னதாக சம்பா பயிரை காப்பீடு செய்யாத விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் நவ.22-க்குள் பதிவுசெய்து பயனடையலாம் என அறிவிக்கப்பட்டது. இதற்காக பயிர் காப்பீட்டுக்கான பொது சேவை மையங்கள் நவ.18,19-ஆம் தேதிகளில் (சனி, ஞாயிறு) செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கெனவே பதிவு செய்தவர்கள் மீண்டும் பதிவு செய்ய வேண்டாம் என்றும் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் காண்க:
அறுவடைத் தேதியே 15 நாட்களுக்கு முன்னரே தெரிவிக்க விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
PMFBY- விவசாயிகள் 72 மணி நேரத்திற்குள் தகவல் தெரிவிக்கலனா பிரச்சினையா?
Share your comments