கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் 17 வகையான கடனுதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும், அதனை உரிய பயனாளிகள் பெற்று பயனடையுமாறும் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
2022-2023 ஆம் ஆண்டில் கூட்டுறவுத்துறை மூலம் பயிர்க்கடன் வழங்க அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறியீட்டிற்கு மேல் கடன் வழங்கி சாதனை படைத்துள்ளதாகவும், இதனால் 1,24,850 விவசாயிகள் பயனடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம்.
இந்நிலையில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் கடனுதவி பெறும் வழிமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு-
கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பயிர்க்கடன், கால்நடை பராமரிப்புக்கடன், சுயஉதவிக்குழு கடன், மாற்றுத் திறனாளிகளுக்கான கடன், நகைக்கடன், மத்திய காலக்கடன், பண்ணைசாராக் கடன், வீடு அடமானக்கடன், விதவைகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு குறைந்த வட்டியில் கடன், மகளிர் தொழில் முனைவோர் கடன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கடன் போன்ற 17 வகையான கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
பயிர்கடன் பெறும் வழிமுறைகள்:
சேலம் மாவட்ட விவசாயிகள் தங்களின் ஆதார் நகல், ரேஷன் கார்டு நகல், நில உடைமை தொடர்பான கணினி சிட்டா, பயிர் சாகுபடி தொடர்பாக கிராம நிர்வாக அலுவலரின் அடங்கல் சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை தொடர்பு கொண்டு கடன் மனு சமர்ப்பித்து, பயிர்க்கடன் மற்றும் இதர கடன்கள் பெற்று பயனடையலாம்.
சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளிட்ட கூட்டுறவு நிறுவனங்களில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இல்லாத விவசாயிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர் படிவத்தை பெற்று ரூ.110 பங்குத்தொகை மற்றும் நுழைவுக் கட்டணம் செலுத்தி உடன் உறுப்பினராக சேர்ந்து உரிய ஆவணங்களுடன் கடன் மனுவை சமர்ப்பித்து, அனைத்து வகையான கடன்களையும் பெற்று பயனடையலாம். கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர் மற்றும் உறுப்பினர் அல்லாத விவசாயிகள் தங்களுக்கு தேவையான உரங்களை கூட்டுறவு சங்கங்களில் பெற்று பயனடையலாம் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ஆகவே, சேலம் மாவட்டத்தில் வசித்து வரும் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களை அணுகி தங்களுக்குத் தேவையான கடன்களை பெற்று, தங்களுடைய வாழ்வாதாரத்தைப் பெருக்கிக் கொண்டு கூட்டுறவு நிறுவனங்களின் சேவைகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் செ. கார்மேகம், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
மேலும் காண்க:
குப்பை கிடங்குகளை கண்காணிக்க ட்ரோன்- உலக வங்கியை நாடும் மாநில அரசு
Share your comments