பருவமழை பொய்த்த நிலையில் நடப்பாண்டு குறுவை சாகுபடி போதிய விளைச்சல் இருக்காது என கருதப்படும் நிலையில் ரபி சிறப்பு பருவ பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. பயிர் காப்பீட்டில் செய்யக்கூடாத தவறுகள் குறித்தும் திருச்சி மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், நடப்பு 2023-24 ஆம் ஆண்டு ரபி சிறப்பு பருவத்தில் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்த திட்ட தொடர் நீட்டிப்பு (Go Ahead) ஆணை பெறப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் வருவாய் கிராம அளவில் சம்பா நெல், பிர்கா அளவில் மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர்களுக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம்.
மேலும், சம்பா நெல், மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர்களை பயிர் காப்பீடு செய்ய வரும் நவம்பர் 15-ஆம் தேதி கடைசி நாளாகும். இத்திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் (குத்தகைதாரர் உட்பட) பயிர் கடன் பெறும் விவசாயிகளும் மற்றும் கடன் பெறாத விவசாயிகள் விருப்பத்தின் பேரில் பயிர் காப்பீடு செய்யலாம்.
இத்திட்டத்தில் பயிர் காப்பீடு செய்ய சிட்டா,நடப்பு ஆண்டு பயிர் சாகுபடி அடங்கல், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களுடன், அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் பொது சேவை மையங்களை அணுகலாம். மேலும் தகவலுக்கு, அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை அணுகவும்.
இத்திட்டத்தில், நெல் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு பிரீமியமாக ரூ.560.20/-, பருத்தி பயிருக்கு ஒரு ஏக்கருக்கு பிரீமியமாக ரூ.579.54/- மற்றும் மக்காச் சோளம் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு பிரீமியமாக ரூ.337.16/- செலுத்தி பயிர் காப்பீடு செய்யலாம்.
பயிர் காப்பீடு பதிவு நீக்கப்படுவதற்கான காரணம்:
விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யும் போது ஒரே சர்வே எண்ணிற்கு ஒன்றுக்கு மேற்பட்டோர் பதிவு செய்தாலோ, சாகுபடி செய்யப்பட்ட பரப்பை விட கூடுதலாக பதிவு செய்தாலோ தவறான பதிவுகள் அனைத்தும் நீக்கம் செய்யப்படும்.
பயிர் இழப்பீடு கணக்கிடுதலில் புள்ளியியல் துறை மூலம் பெறப்படும் எதேச்சை எண்கள் மூலம் நெற்பயிருக்கு அறிவிக்கை செய்த கிராமத்திலும், பிற பயிர்களுக்கு அறிவிக்கை செய்யப்பட்ட பிர்காகளிலும், தேர்வு செய்யப்படும் வயல்களில் பயிர் அறுவடை பரிசோதனை நடைபெறும். இதில் வேளாண்மை துறை புள்ளியியல் துறை மற்றும் காப்பீட்டு நிறுவன பிரதிநிதிகள் கலந்துகொண்டு தேர்வு செய்யப்பட்ட தளையில் பெறப்படும் மகசூலை பயிர் அறுவடை செயலியில் பதிவேற்றம் செய்வர். இவ்வாறு பெறப்படும் மகசூல் அடிப்படையில் பயிர் இழப்பீடு கணக்கிடப்படும்.
எனவே, விவசாயிகள் தங்கள் பயிரை காப்பீட்டு செய்ய கடைசி நாள் வரை காத்திராமல் நவம்பர்-15-ஆம் தேதிக்கு முன்னதாகவே காப்பீட்டு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார்,இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
இதையும் காண்க:
கரண்ட் கொடுக்குறீயா- முதலையை விடவா? விவசாயிகள் மிரட்டல்
PM Kisan- விவசாயிகளுக்கு நவம்பர் மாதம் இன்ப அதிர்ச்சி காத்திருக்கு!
Share your comments