good news for salem farmers- 50 percent subsidy for Poultry farm
சேலம் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையில் 50% மானியத்தில் 250 எண்ணிக்கையில் நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம், இ.ஆ.ப, தகவல் தெரிவித்துள்ளார்.
கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் 2023-24 ஆம் நிதியாண்டில் நாட்டுக்கோழி வளர்ப்பில் திறன் வாய்ந்த கிராம பயனாளிகளுக்கு சிறிய அளவிலான நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்க உதவும் திட்டம் நடைமுறையில் உள்ளது. அதனடிப்படையில் மாவட்டம் ஒன்றுக்கு 3 - 6 பயனாளிகளை தேர்வு செய்து திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள பயனாளிகள் சம்பந்தப்பட்ட கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராகவும், கோழி கொட்டகை அமைக்க குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் கொண்டவராகவும், அந்நிலம் மனித குடியிருப்புகளிலிருந்து விலகியும் இருக்க வேண்டும்.
நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணை அமைக்க தேவையான மொத்த செலவில் 50% மானியம் (ரூ.1,50,625/- அதிகபட்ச வரையறை) மாநில அரசால் வழங்கப்படும். ஒவ்வொரு பயனாளிக்கும் 250 எண்ணம் 4 வார வயதுடைய நாட்டுக்கோழி குஞ்சுகள் ஒசூர் மாவட்ட கால்நடை பண்ணையிலிருந்து இலவசமாக வழங்கப்படும்.
விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் பயனாளிகளில் 30% பழங்குடியினர் மற்றும் பட்டியல் வகுப்பினராக இருக்க வேண்டும். 2022-23-ஆம் ஆண்டு நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் பயனடைந்திருக்கக் கூடாது. 3 ஆண்டுகாலம் கோழிப்பண்ணையை பராமரிப்பவராக இருத்தல் வேண்டும்.
மேலும் இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் 30.06.2023 ஆம் தேதிக்குள் அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி திட்ட விளக்கங்களை பெற்று உரிய படிவத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
சேலம் மாவட்டத்தில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்:
வருகின்ற வெள்ளிக்கிழமை 16.06.2023 தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இம்முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளை சார்ந்த சேலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முன்னனி வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களின் காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
சேலம் கோரிமேட்டில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவிருக்கும் இம்முகாமில் 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்வித்தகுதி உள்ளவர்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைநாடுநர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவுசெய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு [email protected] என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் மற்றும் 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
மேலும் காண்க:
Share your comments