குறிப்பிட்ட கிராமத்தில் விதைப்பு செய்ய இயலாமை நிலைமை ஏற்படும் போது பயிர் காப்பீட்டுத் தொகையில் 25 சதவீதம் இழப்பீடு பெற இயலும். அந்த இழப்பீடுத் தொகையானது கிராம அளவில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு மட்டுமே கிடைக்கும். அதற்கு விவசாயிகள் VAO-விடம் விதைப்பு சான்றிதழ்/அடங்கல் பெறுதல் அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுத்தொடர்பான அறிவிப்பின் விவரம் பின்வருமாறு- தமிழ்நாட்டில் 2023-24 ஆம் ஆண்டில் பிரதம மந்திரி பயிர் காப்பிட்டுத்திட்டம் (PMFBY) சம்பா (சிறப்பு) பருவம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் 1 மாவட்டத்திற்கு இப்கோ டோக்கியோ பொது காப்பீட்டு நிறுவனம் மற்றும் தஞ்சாவூர் II மாவட்டத்திற்கு ஃப்யூச்சர் ஜெனரலி காப்பீட்டு நிறுவனம் ஆகிய காப்பீட்டு நிறுவனங்களால் செயல்படுத்தப்படுகிறது.
தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் ll பயிர் சம்பா சிறப்பு பருவத்தில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. சம்பா பருவத்தில் காப்பீடு செய்யப்படும் நெற்பயிர்களை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவான 15.11.2023 தேதிக்குள் காப்பீடு செய்ய விவசாயிகளை கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். பயிர் காப்பீட்டுத்தொகையில் விவசாயிகள் 1.5 சதவீதம் மட்டும் காப்பீட்டுக் கட்டணமாக நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.542 செலுத்தினால் போதுமானது. இதுவரை தஞ்சாவூர் மாவட்டத்தில் 14,616 ஏக்கருக்கு 5266 விவசாயிகள் காப்பீட்டு திட்டத்தில் இணைந்துள்ளனர்.
எனவே, சம்பா பருவங்களில் சாகுபடி மேற்கொள்ளும் கடன் பெறும் விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலோ / தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலோ, கடன் பெறா விவசாயிகள் பொது சேவை மையங்களிலோ (இ-சேவை மையங்கள்) / தேசிய பயிர் காப்பீட்டு இணையதளத்தில் உள்ள "விவசாயிகள் கார்னரில்" (www.pmfby.gov.in ) நேரிடையாகவோ நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் காப்பீடு செய்யலாம்.
விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது முன்பொழவு விண்ணப்பம், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் நடப்பு பசலிக்கான அடங்கல் / இ-அடங்கல் / விதைப்பு சான்றிதழ், வங்கிக்கணக்கு புத்தகத்தின் (Bank pass book) முதல் பக்க நகல், ஆதார் அட்டை (Aadhaar card) நகல் ஆகியவற்றை இணைத்து கட்டணத்தொகையை செலுத்திய பின் அதற்கான இரசீதையும் பொது சேவை மையங்களில் (இ-சேவை மையங்கள்) / தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் / தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம்.
இதையும் காண்க; MFOI 2023- வேளாண் கண்காட்சியில் பங்கேற்க முன்பதிவு செய்வது எப்படி?
25 சதவீத இழப்பீடுத் தொகை:
மேலும் தற்போது போதுமான மழை பெறாத நிலையில் விவசாயிகள் நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்குள் சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்வதன் மூலம் விதைப்பு செய்ய இயலாமை / விதைப்பு பொய்த்து போதல் / நடவு பொய்த்து போதல் போன்ற இனங்களில் இழப்பீடு பெறலாம்.
அதாவது ஒரு கிராமத்தில் சராசரியாக பயிர் சாகுபடி செய்யும் பரப்பில் 75 சதவீததிற்கும் மேலாக பயிர் செய்ய முடியாத நிலையில் இருந்தால் நிர்ணயிக்கப்பட்ட காப்பீட்டுத்தொகையில் 25 சதவீதம் இழப்பீட்டுத்தொகையாக பெறலாம். அவ்வாறு ஏற்படும் பட்சத்தில் அக்கிராமத்தில் பயிர்காப்பீடு செய்த விவசாயிகள் மட்டுமே இழப்பீடு பெற முடியும் எனவே, விவசாயிகள் தங்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் சம்பா / தாளடி நடவு செய்ய உள்ளார் என்று விதைப்பு சான்றிதழ் /அடங்கல் (பசலி 1433) பெற்று 15.11.2023 -க்குள் பயிர்காப்பீடு செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தற்போது சம்பா நெற்பயிர் சாகுபடி முழு வீச்சில் நடைபெற்று வரும் வேளையில், விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட சம்பா பயிர்களை காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி வரை காத்திருக்காமல் முன்னதாகவே காப்பீடு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இத்திட்டம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு பயிர்காப்பீடு இணையதள முகவரியையோ (www.pmfby.gov.in ) அல்லது அருகிலுள்ள வேளாண்மை அலுவலர்களையோ அணுகி பயன் பெற்றிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இதையும் காண்க:
1.42 லட்ச கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை- அரசாணை வெளியீடு
Share your comments