தென்காசி மாவட்டத்தில் மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் இ.ஆ.ப., தகவல் தெரிவித்துள்ளார்.
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் மாநில அரசின் மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டமானது மாநில அரசின் 100 சதவீத நிதி உதவியுடன் தோட்டக்கலைத் துறையின் மூலமாக தமிழகத்தை முழுமையான வளர்ச்சி அடைய செய்வதே நோக்கமாக கொண்டுள்ளது.
ஊடுபயிருக்கு 40 சதவீத மானியம்:
இத்திட்டத்தின் மூலம் தென்னையில் ஊடுபயிராக வாழை சாகுபடி செய்ய ஹெக்டேருக்கு ரூ.10 ஆயிரம் வீதம் 40 சதவீதம் மானியத்தில் நடவுபொருட்கள் மற்றும் இடுபொருட்கள் வழங்கப்படுகிறது. வாழையில் ஊடுபயிராக காய்கறி சாகுபடி செய்ய ஹெக்டேருக்கு ரூ.10 ஆயிரம் வீதம் 40 சதவீத மானியத்தில் இடுபொருட்கள் வழங்கப்படுகிறது.
அரசு கல்வி நிலையங்கள் மற்றும் ஆதரவற்றோர் காப்பகங்களில் தோட்டம் அமைப்பதற்கு மா ஒட்டு, சப்போட்டா ஒட்டு, நெல்லி ஒட்டு, எலுமிச்சை பதியன், கொய்யா பதியன், வாழை கன்று, பப்பாளி கன்று போன்ற பழச்செடிகளும் மற்றும் அதிக மகசூல் தரும் விதைகளும் (முருங்கை, முள்ளங்கி மற்றும் கீரை) மற்றும் மூலிகை செடிகள் இத்திட்டத்தின் கீழ் ரூ.8000 வீதம் 100 சதவீத மானியத்தில் செடிகள் மற்றும் இடுபொருட்கள் வழங்கப்படுகிறது.
வீட்டுத்தோட்டம் அமைக்க 50 சதவீத மானியம்:
வீட்டுத் தோட்டம் அமைப்பதை ஊக்குவிக்க மாடித் தோட்ட தளைகள் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது. இதில் அதிக மகசூல் தரும் வீரிய ஒட்டு காய்கறி இரக விதைகளும் உயிர் உரங்களும் தென்னை நார் கழிவும் வழங்கப்படுகிறது. மேலும் பழப் பயிர்களின் பரப்பை விரிவு செய்ய கொய்யா, நெல்லி, சீத்தா, எலுமிச்சை மற்றும் மா போன்ற 5 வகை பழச்செடிகள் அடங்கிய தொகுப்பு 75 சதவிகிதம் மானியத்தில் வழங்கப்படுகிறது.
தோட்டக்கலை விவசாயிகளுக்கு விளை பொருட்களை பாதுகாப்பாக கையாள நெகிழிக் கூடைகள் 40 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது. ஒரு பயனாளிக்கு அதிக பட்சமாக ஒரு அலகு மட்டுமே வழங்கப்படும். (ஒரு அலகிற்கு 10 எண்கள்). கூடுதல் வருமானம் ஈட்டும் சிறு தொழிலான காளான் வளர்ப்புக் கூடம் 50 சதவீதம் மானியத்தில வழங்கப்படுகிறது.
தேவைப்படும் ஆவணங்கள் என்ன?
மேற்கண்ட திட்ட இனங்களில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் பட்டா நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்-2 மற்றும் அடங்கல் உள்ளிட்ட ஆவணங்களை சம்மந்தப்பட்ட வட்டாரத்தின் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்பித்து பயன்பெறலாம்.
பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை:
மேலும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் இந்த ஆண்டு 40 பஞ்சாயத்து கிராமங்கள் அரசாங்கத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட இந்த பஞ்சாயத்து கிராமங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு 80 சதவீத இலக்கீடு இக்கிராமங்களில் செயல்படுத்தப்படும் என்றும், மேற்கூரிய அனைத்து திட்ட இனங்களும் 80% பொதுபிரிவு விவசாயிகளுக்கும், 20% ஆதிதிராவிட விவசாயிகளுக்கும் வழங்கப்படும்.
பெண் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் 30% திட்ட இனங்கள் பெண்களுக்கு வழங்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு tnhorticulture.tn.gov.in என்ற வலைத்தளத்திலும் பதிவு செய்து பயன் பெறலாம் மற்றும் கூடுதல் விபரங்களுக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகவும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.துரை.இரவிச்சந்திரன் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் காண்க:
ஒவ்வொரு விவசாயிக்கும் வருஷத்துக்கு ரூ.50,000 - பிரதமர் மோடி உத்தரவாதம்
Share your comments