பால் குடிப்பதால் சர்க்கரை கோளாறு வரும் என்று பல ஆண்டுகளாக சொல்லப்பட்டு வந்தது. இது முற்றிலும் தவறான கருத்து என்று, சமீபத்தில் நடந்த ஆய்வில் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
பாலில் உள்ள சத்துக்கள்
பாலில் உள்ள 'லாக்டோஸ் (Lactos)' எனப்படும் சர்க்கரையை செரிக்கும் திறன், அரிதாக சிலருக்கு இல்லாமல் இருக்கலாம். இந்த லாக்டோஸ் மூளை வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். பாலில் உள்ள புரதச் சத்து தசைகளின் வளர்ச்சிக்கும், கால்சியம் (Calcium) சத்து எலும்புகளுக்கும் முக்கியம்.
இது தவிர விட்டமின் ஏ, டி, பாஸ்பரஸ், பொட்டாசியம், ரிபோபுளோவின் போன்ற பல நுண்ணுாட்ட சத்துக்கள் உள்ளன.
ஆய்வு
பால் குடிப்பதால் சர்க்கரை கோளாறு வரும் என்று சொல்வதற்கு மருத்துவ, அறிவியல் ரீதியில் எந்த ஆதாரமும் இல்லை. நம் நாட்டில் இது வரை செய்த ஆய்வில், தினமும் பால் அருந்துவது, குறுகிய, நீண்ட கால உடல் ஆரோக்கியத்தை தருவது உறுதி செய்யப்பட்டு உள்ளது. சர்க்கரை கோளாறுக்கு எதிராக, பால் பாதுகாப்பு தருவதாக, 'சென்னை அர்பன் ரூரல் எபிடெர்மாலஜி' - சி.யு.ஆர்.இ.எஸ்., ஆய்வு கூறுகிறது. 21 நாடுகளில் செய்யப்பட்ட ஆய்வில், பால் மற்றும் பால் பொருட்களை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு, சர்க்கரை கோளாறு, உயர் ரத்த அழுத்த (High Blood Pressure) பிரச்னைகள் வருவது மிகக் குறைவு. உடல் உள்ளுறுப்பு செயல்பாட்டில் கோளாறு வருவதில்லை என்று தெரிகிறது.
தாய்ப்பால்
தாய்ப்பால் குடிப்பதால் சர்க்கரை கோளாறு வரும் என்ற ஆய்வுகள் அனைத்தும், மேற்கத்திய நாடுகளில் செய்யப்பட்டவை. பல வெளிநாடுகளில், பிறந்ததும் குழந்தைக்கு தாய்ப்பால் தரும் பழக்கம் இல்லை. புட்டி பால் தருகின்றனர். இதனால், இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) குறைவாக ஆகி விடுகிறது. எளிதாக தொற்று ஏற்படுகிறது. தாய்ப்பால் தராமல் இருப்பதே பலவித நோய்கள் வரக் காரணம். பால் குடிப்பது தான் உடல் கோளாறுக்கு காரணம் என்று தவறாக புரிந்து கொள்கின்றனர்.
காரணங்கள்
குழந்தை பருவத்தில் இருந்தே, பதப்படுத்திய உணவுகளை அதிகம் சாப்பிட்டு, அதிக உடல் எடையுடன் இருப்பது. போதிய உடற்பயிற்சி (Excercise) இல்லாதது, பாலிஷ் செய்யப்பட்ட அரிசி மற்றும் கோதுமையில் இருந்து, அதிக கார்போஹைட்ரேட்
சாப்பிடுவதன் விளைவால், இன்சுலின் (Insulin) சுரப்பதில் சிக்கல், நீர்க் கட்டிகள் உருவாவது என, பல பிரச்னைகள் குழந்தை பருவத்திலேயே ஆரம்பித்து விடுகின்றன.
டாக்டர் வி.மோகன்,
தலைவர்,
மோகன்ஸ் டயாபடிக் மையம்,
சென்னை
Share your comments