1. வாழ்வும் நலமும்

இயற்கையளித்த அற்புத கொடை: மனித சமூகத்திற்கு வரமாய் கிடைத்த அதிசய மரம்

KJ Staff
KJ Staff
Amazing tree fight against Corona

காரோனா என்ற ஒற்றை வார்த்தை இன்று உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. நாடே ஊரடங்கில் முடங்கி கிடக்கிறது. சீன நாட்டில் பாதிக்க துவங்கிய வைரஸ், படிப்படியாக பரவத் துவங்கி தற்போது உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களை தாக்கி உள்ளது. இதுவரை 30 ஆயிரத்திற்கு அதிகமானோர் பலியாகி உள்ளனர். எனினும், இதற்கான மருந்து இதுவரை கண்டறியப்படவில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிற விஷயமாக இருந்து வருகிறது. இத்தகைய சூழலில், இதிலிருந்து தப்பிக்க, நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது பெரும் தேடலாக இருந்து வருகிறது.

நூற்றாண்டுகள் தோறும் காரோனா போன்ற பல கொடிய நோய்கள் மனித சமூகத்திற்கு பேராபத்தாகவும், ஆயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்குவதாகவும் அமைந்து விடுகிறது. அத்தகைய அசாதாரண சூழ்நிலையில், போதிய மருத்தவ வசதிகள் இல்லாத அன்றைய காலக்கட்டத்தில் மக்கள் அன்றாடம் உண்ணும் சிறு தானியங்கள், காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களின் மருத்துவ குணங்களை அறிந்து அதனை உட்கொண்டு நோய்களில் இருந்து தங்களை பாதுகாத்து கொண்டனர். அதே போன்று தற்போது தோன்றியுள்ள இக்கட்டான சூழலில் நோயின் பிடியில் இருந்து பாதுகாத்துக்கொள்ள, உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் அடங்கிய உணவுகளை சாப்பிட வேண்டியது கடமையாகும். அந்த வகையில் நோயெதிர்ப்பு சக்தி அதிகம் நிறைந்த அதிசய மரம் முருங்கையாகும். இதன் மருத்துவ குணங்களை குறித்து அறிந்துக் கொள்வோம் வாருங்கள்....!

முருங்கையின் பூர்வீகம் - ஓர் பார்வை

முருங்கை மரத்தில் இலை, பூ, காய் என எல்லாமே மருத்துவ குணமும் அதிக உயிர்சத்துகளை கொண்டதாகவும் உள்ளது. இது உடலில் உள்ள பல நோய்களுக்கு அருமருந்தாக காணப்படுகின்றது. முருங்கை முன்னூறு நோய்களை விரட்டும் என்பது கிராமத்துப் பழமொழி. வருடத்தின் எல்லா நாட்களிலும் கிடைக்கக்கூடிய முருங்கைக்கீரையை வாரத்தில் 3 நாட்கள் சேர்த்து வந்தாலே, குடும்பத்தில் உள்ள அத்தனை பேரின் ஆரோக்கியமும் மேம்படும் என்பது மருத்துவர்கள் கூற்று. முருங்கையின் மூலம் கிடைக்கிற புரதமானது முட்டை, பால் மற்றும் இறைச்சியில் கிடைக்கக்கூடிய புரதத்துக்கு இணையானது. முருங்கை மரவகையைச் சேர்ந்தது. இது 30 அடி உயரம் வரை வளரக்கூடியது. இமயமலை அடிவாரத்தில் வளர துவங்கிய முருங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் வளரத்துவங்கியது. பிலிப்பைன்சிலும், ஆப்பிரிக்காவிலும் இது காணப்படுகிறது. ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ் நாட்டில் அதிகமாகப் பயிரிடப்படும் முருங்கை இலங்கை, தாய்லாந்து, தாய்வான் நாடுகளிலும் பயிராகிறது.

benefits of moringa seeds

முருங்கை கீரையின் நன்மைகள்

 • முருங்கை கீரையின் சூப்பினை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், ஆஸ்துமா, வீசிங் போன்ற சுவாசப் பிரச்சனைகள் அண்டாது.
 • முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணிவதோடு, வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலச்சிக்கல் நீங்கும்.
 • முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்துக்கள் முதலியன இதில் அதிகமுள்ளது. முருங்கை இலையை மிளகுடன் சேர்த்து ரசம் வைத்து குடித்து வர கை, கால் உடம்பின் வலிகள் யாவும் குணமடையும்.
 • இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும், பல் கெட்டிப்படும். முடி நீண்டு வளரும். நரை முடி குறையும், தோல் வியாதிகள், கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் மருந்தாக அமையும்.
 • முருங்கை இலை கர்ப்பப்பையின் குறைகளை போக்கி கருத்தரிப்பதை ஊக்குவிப்பதோடு, பிரசவத்தை துரிதப்படுத்த உதவுகிறது. மேலும் இது தாய்ப்பால் சுரப்பதற்கும் மேம்படுத்தும்.
 • ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றுவதோடு, இரத்த விருத்திக்கு நல்ல உணவாகவும் பரிந்துரைக்கப்படுகிறது.
 • முருங்கைக்காய், பூ, பட்டை சாப்பிடுவதால் ஏற்படும் மற்ற பலன்கள்
 • முருங்கைக்காயில் அதீத இரும்புச்சத்து, கொழுப்புச்சத்து, வைட்டமின்கள் ஏ, சி, ஆகியவைகள் நிரம்பியுள்ளது. இது மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வாகிறது.
 • தொண்டை வறட்சி, சளி போன்ற பிரச்சனைகள் போன்றவை முருங்கைக்காயில் உள்ள வைட்டமின் சி காரணியால் குணமடைகிறது.
 • முருங்கை பிஞ்சை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் இரத்தம் சம்மந்தமான அனைத்து நோய்களும் சரியாவதோடு, இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
 • முருங்கை பிஞ்சில் அதிகளவு கால்சியம் உள்ளதால், இது எலும்புகளுக்கு வலிமை சேர்ப்பதோடு, எலும்பு மஞ்ஜைகளை வலுபடுத்துகிறது.
 • நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்ட முருங்கை பூவினை, பாலில் வேகவைத்து நன்றாக வடிகட்டி குடித்து வந்தால் கண்கள் குளிர்ச்சி அடையும்.
 • குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கை வகிப்பதால், இது நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்தாகிறது.
 • முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து லேசாக நெய்யில் வதக்கி, பொடியாக்கி பாலில் கலந்து சாப்பிட்டு வர, நரம்புகள் பலப்படும், உடல் சூடு குறையும், ஆண்மை பெருகும், விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகமாகும்.
 • முருங்கை பட்டையை பொடித்து, சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது வைத்து கட்டினால், வீக்கம் குறையும். சிறுநீரும் தெளிவாகும்.
 • முருங்கை வேரை இடித்து சாறு பிழிந்து, பாலோடு சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால், இரைப்பு, விக்கல், முதுகுவலி போன்ற நோய்கள் நீங்கும்.
Health benefits of Moringa leaves

முருங்கையில் உள்ள சத்துக்களின் சிறப்புகள்

முருங்கைக்கீரையில் தயிரில் இருப்பதைவிட 2 மடங்கு அதிக புரதமும், ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைப் போல 7 மடங்கு அதிக வைட்டமின் சியும், வாழைப்பழத்தில் உள்ளதைவிட 3 மடங்கு அதிக பொட்டாசியமும், கேரட்டில் உள்ளதைப் போல 4மடங்கு அதிக வைட்டமின் ஏவும், பாலில் உள்ளதைவிட 4 மடங்கு அதிக கால்சியமும் உள்ளன. மற்ற கீரைகளைப் போல அல்லாமல் காய்ந்த முருங்கை இலைகளிலும் ஊட்டச்சத்துகள் அப்படியே இருப்பதுதான் இதன் சிறப்பம்சமாகும்.

அமிர்தமே ஆனாலும் அளவுக்கு மீறினால் நஞ்சு என்பது பழமொழி. அதற்கேற்றாற்போல், முருங்கை அருமருந்தாக விளங்கினாலும் அதனை உட்கொள்வதற்கு ஓர் குறிப்பிட்ட அளவு வரையறுக்கப்பட்டுள்ளது. அதன்படி நாள் ஒன்றுக்கு இதனை பெண்கள் 100 கிராம், ஆண்கள் 40 கிராம், 10 வயதுக்கு மேலான குழந்தைகள் 50 கிராம் என அளவாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த தொகுப்பு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.

M.Nivetha
nnivi316@gmail.com

English Summary: Moringa and its Medicinal Values: Improve your immunity to fight against Corona

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.