1. தோட்டக்கலை

உழவர்களின் நலனுக்காக! எளிதான பயிர் சாகுபடிக்கான புதிய தொழில்நுட்பம்

KJ Staff
KJ Staff

இன்றைய காலகட்டத்தில் அதிக விளைச்சல் தரும் பயிர்களை பயிரிடும்போது அதிக அளவு ஊட்டச்சத்து தரும் உரங்களை அளிக்க வேண்டியுள்ளது .மண்ணின் மேற்பரப்பில் உரங்களைத் துவுவதால் பயிர்களின் வளர்ச்சி அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் களைச் செடிகளின் வளர்ச்சியும் பயிர்களைப் பாதிக்கும் வண்ணம் அதிகரிக்கின்றது.

பயிர் செய்யும் பொழுது உரச்சத்துகளின் பயன்பாட்டுத்திறனை அதிகரிக்க ஆழமாகக் குழி பறித்து இடும் முறைகள் சிறந்தவையாகும். இம்முறைகளைக் கையாள போதிய பணியாளர்களும், போதிய கருவிகளும் கிடைக்காததால் உழவர்கள் இவற்றை கடைபிடிப்பதில்லை. மேலும் உழவர்களுக்கு பயிர் விளைவிப்பதற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கொண்ட உரங்கள், விதைகள், களைக்கொல்லிகள், பணியாளர்கள் ஆகிய அனைத்தும் ஒரே சமயத்தில், ஒரே இடத்தில் கிடைப்பதில்லை. இக்காரணங்களால் விளைச்சலை பெருமளவு அதிகரிக்க முடிவதில்லை.

seed fertilizer technology

இந்த நிலையில் ஊட்டங்களின் பயன்பாட்டுத் திறனை அதிகரிக்க உழவர்கள் பயன் பெறும் பொருட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்திலுள்ள மண்ணியல் மற்றும் வேளாண் வேதியல் துறையினர் ஒரு புதுமையான விதை உர கட்டு என்கின்ற தொழில் நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். இந்த விதை உர கட்டுகளைத் தொழிற்கூடங்களில் உற்பத்தி செய்து உழவர்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்ய புதுடெல்லியிலுள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மற்றும் சென்னையிலுள்ள தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் உடன் இணைந்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இயற்கை வள மேலாண்மை இயக்குனரகத்தில் இயங்கி வரும் மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறையில் இயந்திரங்கள் மூலம் விதை உர கட்டு தயாரிக்கும் திட்டத்தை 2011- 14 ஆண்டில் ரூ 30.91 இலட்சம் செலவில் செயல்படுத்தியுள்ளது.  

விதை உர கட்டு

விதை உரைக்கட்டு வடிவமைப்பு மற்றும் பயன்பாடு

விதை உரைக்கட்டு மூன்று பாகங்களை உள்ளடக்கியது. மேல்நோக்கி இருப்பது நேர்த்தி செய்யப்பட்ட விதை, மத்தியில் இருப்பது ஊட்டமேற்றிய எரு, அடிப்பகுயில் இருப்பது சமச்சீர் உரம். இவை எளிதில் மக்கக்கூடிய பேப்பர் கொண்டு கட்டப்பட்டுள்ளது. கடைசியில் இந்த மூன்றையும் ஒன்றாக இணைத்து செய்தித்தாள் கொண்டு சுற்றி அதன் நுனிப்பகுதி பசையினால் ஓட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் பயிரின் விதைகளை மண்ணில் ஊன்றும் போதே விதைக்கு அடியில் அல்லது பக்கத்தில் செரிவூட்டப்பட்ட எரு, உரங்கள் பதிக்கப்படுகின்றன. சத்துக்கள் தினந்தோறும் கொஞ்சம் கொஞ்சமாக வேர்ப் பகுதியில் வெளிப்படுவதால் பயிரின் வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகின்றது. சத்து இழப்புகளும் குறைகின்றது. விதை உர கட்டில் பயன்தரும் நுண்ணுயிரிகள், நுண்னூட்டங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளும் சேர்க்கப்படுள்ளன. ஒருவிரல் அளவுள்ள ஒவ்வொரு விதை உர கட்டையும் மண்ணில் செங்குத்தாகவோ அல்லது கிடைமட்டமாகவோ பதிக்க வேண்டும். பயிர்க் காலத்திற்கு முன்பே விதை உர கட்டுகளைத் தயாரித்து வைத்துக் கொள்ளலாம். அதிக அளவில் விதை உர கட்டுகளைத் தயாரிக்க இயந்திரங்களைப் பயன்படுத்தும் போது அதன் தயாரிப்பு செலவு மிகவும் குறைகின்றது.

nutri seed pack

விதை ஊன்றுவதற்கு பதிலாக விதை உர கட்டுகளை பதிய வைக்கும் போது விதையுடன், பயிர் சாகுபடிக்கு தேவையான எரு, இரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகள் ஆகியவைகள் பயிர் காலம் முழுவதும் கிடைப்பதால் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கும். விதை உர கட்டு தொழில்நுட்பத்தை எளிதில் கடைப்பிடிக்க ஒரே வழி தொழில் கூடங்களில் விதை உர கட்டுக்களைத் தயாரித்து, பின் பயிர் விளைவிக்கும் பருவம் தொடங்கும் போது உழவர்களுக்கு அளிப்பது தான். கிராமங்களில் சிறுதொழில் கூடங்களில் பல்வேறுபட்ட இயந்திரங்களைக் கொண்டு விதை உர கட்டுகளைத் தயாரித்து போதுமான அளவில் உழவர்களுக்கு அளிக்க முடியும். இயந்திரங்கள் மூலம் விதை உர கட்டு தயாரிப்பதால் ஆண்டு முழுவதும் நல்ல வருமானத்தையும், வேலை வாய்ப்புகளையும் பெற முடியும்.

ஆய்வுக் களம்

இதுவரை பல இடங்களில் பயிரிட்டு மக்காச்சோளம், நெல், பருத்தி, கார்னேசன், செண்டுமல்லி, காலிப்ளவர், தக்காளி பயிர்களைப் பயிரிட இந்த விதை உர கட்டு தொழில் நுட்ப முறை உகந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. மண்ணின் மேற்பரப்பில் உரமிடுவதை தவிர்த்து விதை உர கட்டு தொழில் நுட்பத்தை பயன்படுத்தியதால் 10 முதல் 30 சதம் வரை தானிய மற்றும் தோட்டக்கலை பயிர்களில் விளைச்சல் அதிகரித்துள்ளது.

crop

விதை உர கட்டுகளின் பயன்கள்

விதை உர கட்டு மூலம் விதை, நுண்ணுயிர்கள், உரம் எரு எல்லாம் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில், ஒரே முறையில் மண்ணில் பதிக்கலாம்.

ஊட்டச்சத்துக்கள் சரியான அளவில் பயிர்க்காலம் முழுவதும் பயிர்களுக்கு கிடைக்கின்றது. மேலுரம் இடத்தேவையில்லை.

மண்ணின் வளம் குறைவதில்லை. அனைத்து மண் வகைகளுக்கும் ஏற்றது.

பயிர் உள்ள வரிசைகளுக்கு இடையே உள்ள இடைவெளியில் களைகள் குறைகின்றதன.

நுண்ணுயிர் வித்துக்கலவை தழைச்சத்து நிலை நிறுத்துவதற்கும், மணிச்சத்தினை திரட்டுவதற்கும் உயிரியல் முறையில் நோய்களை கட்டுப்படுத்துவதற்கும் பயன்படுகிறது.

பூச்சிக்கொல்லிகள் ஊட்டமேற்றிய எருவினால் தண்டுத் துளைப்பான், இளங்குருத்து உண்ணும் பூச்சி போன்றவற்றின் தாக்குதல் குறைகின்றது.

சொட்டு நீர் பாசனத்திற்கும் உகந்தது. நீர்வழியாக உரக்கரைசலை அளிக்க தேவையில்லை.

seed pack

விதை உர கட்டை எளிதில் கிராம தொழில் கூடங்களிலிருந்து பெற்றுக் கொள்வதால் நேரம் மீதமாவதுடன், பணியாளர் தேவை குறைகின்றது.

என்னென்ன உரங்கள், எந்த அளவு, எப்பொழுது அளிப்பது போன்ற தகவல்களைப் பற்றி உழவர்கள் அறிந்திருக்க அவசியம் இல்லை.

விதை உர கட்டு தயாரிக்கும் பணியில் கிராம மக்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை கிடைக்கும்.

விதை உர கட்டு தயாரிக்கும் தொழில் நுட்பத்தினை அறிந்து கொள்ள கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் அமைக்கபட்டுள்ள விதை உர கட்டு இயந்திர அறையிலுள்ள முன் மாதிரி இயந்திரங்களை தொழில் முனைவோரும் சுய உதவி குழுக்களும் பார்வையிட்டு தெரிந்து கொள்ளலாம். விதை உர கட்டு தயாரிக்கும் தொழில் நுட்பத்தினை அறிந்து கொண்டு சுயமாக கிராமங்களில் தொழில் கூடங்களை அமைக்கலாம்.

 

K.Sakthipriya
Krishi Jagran

English Summary: For Easy Cropping Here we Brought a New Seed Fertilizer Technology By TamilNadu Agriculture University

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.