பொதுவாக நெல்லி நடுவதற்கு ஒட்டுச் செடிகளைப் பயன்படுத்துவது நல்லது. அதை நட்டவுடன் நீர் தெளிக்க வேண்டும். அதன் பின் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளைகளிலும் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
வேப்ப இலைகளை நன்கு காய வைத்துத் தூள் செய்து கொண்டு அந்த தூளை ஒரு பிடி எனும் அளவில் நெல்லியின் வேர் பகுதியில் போட வேண்டும் இது அடி உரமாகவும், பூச்சிக் கொல்லியாகவும் செயல்படுகிறது. அதோடு ஒரு கையளவு மாட்டுச் சாணத்தை சுமார் 5 லிட்டர் தண்ணீரில் கலந்து வாரம் ஒரு முறை எனும் நிலையில் ஊற்றி வர வேண்டும்.
பூச்சிக்கொல்லியாகச் செயல்படும் வேப்ப எண்ணெயை மாதம் ஒரு முறை தெளித்தும், சமையலறை கழிவுகளையும் பயன்படுத்தலாம்.
பூச்சிகளிடமிருந்து செடிகளைக் காக்கச் சமையலறையில் பயன்படுத்தும் குப்பைகளில் இருந்து செய்யும் உரமும், பஞ்சகாவ்யா உரமும் மிகுந்த பலனைக் கொடுக்க வல்லது. அதிலும் குறிப்பாக, டீத்தூள், முட்டை ஓடு, மக்கிய காய்கறி கழிவுகளை உரமாகப் பயன்படுத்தலாம்.
நெல்லிச்செடி வளர வளர நுனிகளைக் கிள்ளி விட்டுப் பக்கக்கிளைகளை வளரவிட வேண்டும். பக்கக்கிளைகளின் எண்ணிக்கையில் மூன்று கிளைகளுக்கு மேல் வளர விடத் தேவையில்லை.
பராமரிப்பு எனும் நிலையில் வாரம் ஒருமுறை என்று செடியைச் சுற்றி அடி மண்னைக் கொத்தி விட்டுப் பராமரிக்க வேண்டும். நெல்லிக்கனியின் பயன்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- பொதுவாக நெல்லிக்காய் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு சுவையைக் கொண்டுள்ளது. நெல்லிக்காய் குளிர்ச்சித் தன்மை வாய்ந்த்தாக உள்ளதால் இதை உண்பதால் உடலின் சூடு குறையும்.
- நெல்லிக்காய் உண்பதால் உடலில் சிறுநீர் பெருக்கத்திற்கு இது உதவும். நன்கு பசியைத் தூண்டும்.
- குடல் வாயு, எலும்புருக்கி, கொப்புளங்கள் ஆகியவற்றை நீக்கும்.
- இதை தினம் ஒன்று எனும் நிலையில் சாப்பிட்டு வந்தால் சளிப் பிரச்சனை குறையும்.
- சுவாச மண்டலத்தை இது சீராக வைக்க உதவுகிறது. மேலும், மன இறுக்கத்தைப் போக்கி நுண்ணறிவுடன் செயல்பட வழிவகுக்கிறது.
- .இது கண்ணின் பார்வைத் திறனை அதிகரிக்கிறது. அதோடு, கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல், கண் சிவத்தல் முதலான கண் குறைகளைக் களைய இது உதவுகிறது.
- உடலின் இரத்த்தில் உள்ள குளுக்கோசின் அளவைக் கட்டுப்படுத்திச் சர்க்கரை நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
- உடலுக்கு ஏற்ற நல்ல எதிர்ப்பாற்றலைத் தந்து ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
மேலும் படிக்க...
தொப்பையைக் குறைக்க உதவும் நெல்லி- 3 வாரத்தில் குட்பை சொல்ல உதவுகிறது!
Share your comments