அனைவராலும் விரும்பப்படுகின்ற காலிபிளவரை வீட்டிலேயே வளர்க்க முடியும். அதன் விதைத்தல் முதல் அறுவடை வரை நன்கு பின்பற்றிப் பயன்பெறுதல் வேண்டும்.
விதைப்பு:
காலிபிளவர் விதைகளை ஒரு ட்ரே-இல் இட்டு தண்ணீர் விட வேண்டும். அல்லது அதிகமான எண்ணிக்கையில் பயிரிட வேண்டும் என்றால் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கொத்தாக வளர விட்டு அதன் பின் நாத்து நடுதல் போன்று வேறு இடத்தில் நட்டால் நல்ல பலனைக் கொடுக்கும். அவ்வாறு நாத்தினை எடுத்து பயன்படுத்தும் போது மூன்று வாரங்கள் கழித்து வளரவிட்டு எடுத்து நட்டால் நல்லது. அதிலும் ஒரு ஐந்து அல்லது ஆறு இலைகள் வந்த பின்பு அந்த செடியை எடுத்து நட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
காலிபிளவருக்கான அறுவடைக் காலம் என்பது சுமார் 80 லிருந்து 100 நாட்கள் ஆகும். இரண்டு மாதங்களில் நல்ல மொட்டுக்கள் வெளியில் தென்படும். மூன்று மாதத்தில் காலிபிளவரை அறுவடை செய்துவிடலாம்.
மருந்து தெளித்தல்:
இது வளரும் பொழுது பூச்சி, புழுத் தாக்குதல் போன்ற பிரச்சனைகள் செடிக்கு இருக்கும். அது வராமல தடுக்க வேண்டுமென்றால், இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை மீமாயில் கரைசல் போன்ற எதிர்ப்புச் சக்தி வாய்ந்த மருந்துகளைத் தெளித்தல் வேண்டும். ஆனால் இவற்றை மொட்டு வெளியில் தென்படும் நிலையில் காலிபிளவர் மீது தெளிக்காமல், இலைகளில் மட்டும் படும்படித் தெளித்தல் வேண்டும்.
விதைப்புக் காலம்:
வளர்ப்பதற்குரிய காலம் என்றால் ஜனவரி மாதத்துக்குள் விதைகளைப் போட்டு வளர்க்கலாம். நிழல் இருக்கின்ற இடமாகப் பார்த்து வளர்த்தால் நல்லது. மிதமான வெயிலே இதன் வளர்ப்புக்குப் போதுமானது. ஊற்றக் கூடிய நீரின் அளவு என்று பார்க்கும்பொழுது செடிக்கு ஈரப்பதம் இருக்குமட்டும் நீர் விடுதல் நல்லது.
பராமரிப்பு:
காலிபிளவர் பூ வெளியில் தெரியும் போது அந்த பூவை வெயில் படாதவாறு இலையை வைத்து மூடுதல் வேண்டும். இவ்வாறு மூடிப் பாதுகாப்பதன்வழிக் காலிபிளவர் நிறம் மாறாமல் வெள்ளை நிறமாகவும், உலராமலும் இருக்கும்.
அறுவடைக் காலம்:
காலிபிளவர் வெளியில் தென்பட்டுச் சில நாட்களில் அதன் அருகருகே சில பூ மொட்டுக்கள் வர ஆரம்பிக்கும். அவ்வாறு பக்கவாட்டில் பூக்கள் வர ஆரம்பித்தாலே காலிபிளவர் அறுவடை காலத்தை எட்டிவிட்டது எனத் தெரிந்துகொள்ள வேண்டும். எனவே, அந்த பக்கவாட்டுப் பூக்கள் வருவதற்கு முன்னரே காலிபிளவரை அறுவடை செயதல் வேண்டும்.
காலிபிளவர் பச்சையாகவோ, வேகவைத்தோ உண்ணப் பயன்படுத்தப்படுகிறது. ஊறுகாய் மற்றும் சூப் போன்ற உணவுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. எனவே காலிபிளவரை வீட்டுத்தோட்டத்தில் பயிரிட்டுப் பலன் பெறுவோம்.
மேலும் படிக்க
ஃப்ரிட்ஜில் காய்கறி மற்றும் உணவுப் பொருட்களை எத்தனை நாட்கள் வைக்கலாம்?
Share your comments