எண்ணெய் வித்து உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்திலும், நிலக்கடலை உற்பத்தியில் முதலிடத்திலும் உள்ளது. எண்ணெய் வித்துப் பயிர்களில் நிலக்கடலை 40 சதவீத பரப்பளவில் பயிரிடப்பட்டு முதலிடத்தில் இருந்து வருகிறது.
ஆனி-ஆடிப் பட்டம் நிலக்கடலை சாகுபடிக்கு ஏற்ற பருவம் என்பதால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நிலக்கடலை பயிரிடப்படுகிறது. இதில் அதிக மகசூல் பெற பயிர் பாதுகாப்பு என்பது மிகவும் அவசியமானது. இது குறித்து வேளாண் துறை தெரிவித்துள்ள சில விதிமுறைகளை நாம் தெரிந்துக்கொள்வோம்.
விதையளவு
ஒரு ஏக்கருக்கு 50 கிலோ விதை அளவு போதுமானது. விதைப்புக்கருவி கொண்டு விதைப்பதற்கு 40 கிலோ விதையே போதுமானது.
விதை நேர்த்தி
-
விதைப்பதற்கு முன்னர் விதைநேர்த்தி செய்வது மிகவும் அவசியம்.
-
ஒரு கிலோ விதைக்கு சூடோமோனாஸ் 10 கிராம் மற்றும் டிரைக்கோடெர்மா 4 கிராம் கொண்டு விதை நேர்த்தி செய்ய பயன்படுத்தவும்.
-
ரைசோபியம், பாஸ்போபாக்டீரியா 1 பாக்கெட் வீதம் வடிநீரில் கலந்து காற்றில் உலர வைக்க வேண்டும்.
-
இவ்வாறு செய்வதால் விதை முளைப்புத்திறன் அதிகரிக்கப்படுவதுடன் பூச்சி மற்றும் நோய் எதிர்ப்புத்திறன் அதிகமாகும்.
களை நிர்வாகம்
நிலக்கடலையில் நல்ல மகசூல் பெற களை கட்டுப்பாடு முக்கியமான ஒன்றாகும். நிலத்தில் உள்ள பயிர்சத்துக்கள் வீணாகாமல் தவிர்த்திடவும், களைகள் மூலம் மண், ஈரம் வீரயமாவதைத் தவிர்த்திடவும், பயிர்களுக்கு போதிய சூரிய ஒளி கிடைத்திடவும் மற்றும் பூச்சி நோய்கள் பரவாமல் தடுத்து அதிக விளைச்சல் பெறுவதற்கும் களை கட்டுப்பாடு மிகவும் அவசியமாகிறது. விதைத்த 45 நாட்களுக்குள் களைகளைக் கட்டுப்படுத்துவது அவசியம்.
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு
நிலக்கடலையைத் தாக்கும் பூச்சிகளில் வகைகளில் முக்கியமானவை,
-
சிகப்புக் கம்பளிப்புழு
-
படைப்புழு
-
தத்துப்பூச்சி
-
சுருள் பூச்சி
பொருளாதார சேதநிலை 10 சதவிகிதத்திற்கு அதிகமாக இருந்தால் கீழ்கண்டபடி பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அவசியம் இருந்தால் மட்டுமே பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க வேண்டும்.
சிகப்புக் கம்பளிப் புழு
அதிக தாக்குதல் உள்ள காலங்களில் தாக்கப்பட்ட வயல்களைச் சுற்றி 30 செ.மீ ஆழம் மற்றும் 25 செ.மீ. அகலத்தில் செங்குத்தாக குழிகள் அமைத்து புழுக்கள் பாதிக்கப்பட்ட வயல்களிலிருந்து பரவுவதைத் தடுக்கவும்.
சிகப்புக் கம்பளிப்புழுக்களை கட்டுப்படுத்த குவினால்பாஸ் 2.5 மி.லி. என்.பி.வி.நச்சுயிரி (300 புழுக்களை ஊறவைத்து பெறப்படும் நச்சுயிரிக்கரைசல்) மற்றும் 100 மி.லி. ஒட்டும் திரவம் அல்லது ட்ரைட்டான் சேர்த்து 150 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை நேரங்களில் தெளிக்கவும்.
படைப்புழு
படைப்புழுக்களைக் கட்டுப்படுத்த ஸ்பைனோசாடு 0.4 மி.லி. (அ) புரோப்பனோபாஸ் 2 மி.லி. தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்குத் தேவையான நச்சுணவு உருண்டைகளைத் தயார் செய்து பயன்படுத்தலாம்.
அரிசித்தவிடு 5 கிலோ, வெல்லம் 0.5 கிலோ மற்றும் கார்பரில்(50 சதம்) நனையும் தூள் 0.5 கிலோ ஆகிய இம்மூன்றையும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து (3 லிட்டர்) சிறுசிறு உருண்டைகளாக உருட்டவும். இந்த நச்சுணவு உருண்டைகளைத் தயார் செய்தவுடன், வயலைச்சுற்றிலும் வரப்பு ஓரங்களிலும், வயலில் தெரியும் வெடிப்பு மற்றும் பொந்துகளிலும் மாலை வேளைகளில் வைத்து புழுக்களைக் கவர்ந்து அழிக்கவும்.
என்.பி.வி. நச்சுயிரியை ஏக்கருக்கு 200 மி.லி. என்ற அளவில் வெல்லம்(1.0 கிலோ, ஏக்கர்) மற்றும் டீப்பாலுடன்(100 மி.லி. ஏக்கர்) சேர்த்து 150 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை நேரங்களில் தெளிக்க வேண்டும்.
தத்துப்பூச்சி
தட்டைப்பயிரை நிலக்கடலையுடன் 14 என்ற விகிதத்தில் ஊடுபயிர் செய்யவும்.
இவற்றைக்கட்டுப்படுத்த இமிடாகுளோபிரிட் 0.4 மி.லி. (அ) அசிபேட் 1 கிராம், லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
சுருள் பூச்சி
இரவு நேரங்களில் 8 மணி முதல் 11 மணி வரை வயல்களில் விளக்குப்பொறி வைத்து சுருள்பூச்சியின் அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கவும்.
இதைக்கட்டுப்படுத்த ஸ்பைனோசாடு 0.4 மி.லி. இமிடாகுளோபிரிட் 0.4 மி.லி. (அ) டைமெத்தோயேட் 2 மி.லி., லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
நிலக்கடலையைத் தாக்கும் நோய்கள்
நிலக்கடலையைத்தாக்கும் நோய்களில் முக்கியமானவை வேரழுகல், துரு மற்றும் இலைப்புள்ளி நோய்களாகும்
துரு மற்றும் இலைப்புள்ளி நோய்
ஒரு ஏக்கருக்கு கார்பன்டாசிம் 100 கிராம் + மேன்கோசெப் 400 கிராம் (அ) குளோரோதலோனில் 400 கிராம் தெளிக்கவும். தேவையெனில் பதினைந்து நாட்கள் கழித்தும் மீண்டும் ஒருமுறை தெளிக்கவும்.
வேரழுகல் நோய்
உயிரியல் முறை : ஒரு ஏக்கருக்கு சூடோமோனாஸ் ஃபுளூரசன்ஸ் 1.0 கிலோவுடன் 20 கிலோ நன்கு மக்கிய தொழு உரம் (அ) மணல் இடுதல்.
பூஞ்சாணக்கொல்லிகள் நோய் தென்படும் இடங்களில் கார்பென்டாசிம் 1 கிராம், லிட்டர் என்ற அளவில் தெளிக்கவும். புரோப்பனோசோல் 2 கிராம், கிலோ விதைக்கு என்ற அளவில் கலந்து விதைக்கும் முன் விதை நேர்த்தி செய்ய வேண்டியதும் அவசியம்.
மேலும் படிக்க..
கேன்சர் கில்லர் என்று சொல்லப்படும் முள் சீத்தா பழம்! அதன் நன்மைகள் தெரியுமா உங்களுக்கு!
காளான்களை பதப்படுத்தும் மற்றும் விற்பனை முறைகள்!
கொரோனா நெருக்கடியால் 80% வருவாய் இழப்பு - சிறு-குறு, நடுத்தர நிறுவனங்கள் தவிப்பு!
Share your comments