இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என திருச்சி மாவட்ட விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
நோய்கள் அதிகரிப்பு (Increase in diseases)
அண்மைகாலமாக நோய்கள் அதிகரிப்பதற்கு, நம் பழக்கவழக்கங்களும், அதிகளவில் ரசயானத்தினால் விளைவிக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவதுமே காரணம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதனால், நம் அனைவரின் கவனமும் இயற்கை விவசாயம் பக்கம் திரும்பி உள்ளது.
அதிக லாபம் (More profit)
அதனால், அங்கக வேளாண்மையில் அதாவது இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்ட காய்கறிகள் வெங்காயம், கீரை வகைகள் சந்தை விலையில் அதிக லாபம் தரக்கூடியவையாக உள்ளன.
நாம் நோயின்றி வாழவும் எதிர்காலச் சந்ததிகளைக் காக்கவும், நீடித்த நிலையான இயற்கை விவசாயத்துக்கு மாறுவது காலத்தின் கட்டாயம்.
மண் வளத்தைக் காத்திடவும், நீர்வாழ் உயிரினங்களின் பல்லுயிர்ப் பெருக்கத்தைக் காத்திடவும் அங்கக வேளாண்மைக்கு மாற வேண்டும். விவசாயிகள் சில நவீன வேளாண் தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தவிர்க்கலாம்.
பல திட்டங்கள் (Many projects)
இதைக் கருத்தில் கொண்டு மத்திய அரசும், தமிழக அரசும் இணைந்து அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. தோட்டக் கலைத் துறை மூலம் நடப்பாண்டில் இயற்கை வேளாண்மையை ஊக்கு விக்கும் வகையில் தோட்டக்கலைப் பயிர்களில் காய்கறிகள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை சான்று பெற ரூ.500 மானியம் வழங்கப்படுகிறது.
உதவித் தொகை (Subsidy)
மேலும் இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு சாகுபடி செய்யத் தேவையான மானிய உதவியும், ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.
கீரை வகைகள் சாகுபடி செய்ய ஹெக்டேருக்கு ரூ.2500ம், வெண்டை, தக்காளி மற்றும் கத்தரி சாகுபடிக்கு ரூ. 3750 வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில், திருச்சி மாவட்டத்துக்கு ரூ.15 லட்சம் ஒதுக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் இயற்கை முறையில் சாகுபடி செய்த விளைபொருள்களை விவசாயிகள் எளிதாக சந்தைப்படுத்தவும் அதிக லாபமும் ஈட்ட முடியும்.
அங்ககச் சான்று (Organic Certificate)
-
காய்கறிகளை இயற்கை முறையில் சாகுபடி செய்வதற்கான சான்றை தனி நபராகவோ, குழுவாகவோ பெறலாம்.
-
இந்தச் சான்றைப் பெற மாறுதல் காலம் கடைப்பிடிக்க வேண்டும்.
-
நம்முடைய வயலின் மண் மாதிரி ஆய்வு முடிவுகளை பொறுத்து மாறுதல் காலம் ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரை ஆகலாம்.
-
இந்த மூன்றாண்டுகளும் அங்கக வேளாண்மையில் சாகுபடி செய்ய வேண்டும்.
திருச்சி மாவட்டத்தில் இயற்கை முறையில் சாகுபடி செய்ய விருப்பமுள்ள விவசாயிகள் மானியம் பெற தங்கள் பகுதி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்திலோ அல்லது நுண்ணீர்ப் பாசன மேலாண்மை தகவல் அமைப்பு இணைய தளத்திலோ பதிவு செய்து கொள்ளலாம்.
ஆவணங்கள் (Documents)
விவசாயிகள் புகைப்படம், ஆதார் அட்டை, வங்கி கணக்குப் புத்தக முன்பக்க நகல், குடும்ப அட்டை, சிட்டா, அடங்கல் ஆகியவற்றைப் பதிவேற்றி பயன் பெறலாம்.
யாரை அணுகுவது? (Who to approach?)
மேலும், விவரங்களுக்கு திருச்சி மாவட்ட விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநரையோ அல்லது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநரையோ தொடர்பு கொள்ளலாம்.
மேலும் படிக்க...
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்த்தப்படுமா?
நல்லபாம்பு விஷத்தின் மதிப்பு தெரியுமா?
PM Kisan: 70 லட்சம் விவசாயிகளுக்கு இந்த ஆண்டு ரூ.18,000 - அமித்ஷா தகவல்!
Share your comments