பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் சார்பாக நடத்தப்படும் 10-வது இண்டர் நேஷனல் என்ஜினியரிங் சோர்சிங் கண்காட்சி விழாவினை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
சென்னையில் நேற்று (16.03.2023) பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் சார்பாக 3 நாள் நிகழ்வாக நடத்தப்படும் 10-வது இண்டர் நேஷனல் என்ஜினியரிங் சோர்சிங் கண்காட்சி விழா நடைப்பெற்றது. இந்த கண்காட்சியில் தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய அளவில் உள்ள MSME நிறுவனங்களின் தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை பார்வையிடவும்,கொள்முதல் செய்யவும் வந்துள்ள ஆசிய நாடுகள், தென் அமெரிக்க நாடுகள், சார்க் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளை சார்ந்த தொழில் துறையினர் பங்கேற்றனர்.
இந்த விழாவினை துவக்கி வைத்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசிய விபரங்கள் பின்வருமாறு-
சங்க காலம் முதலே தமிழர்கள் உலகம் எங்கும் வாணிபம் செய்து வந்துள்ளனர். ஏற்றுமதியில் மிகப் பெரும் அனுபவம் கொண்ட தமிழ் நாட்டில் நடைபெறும் இந்த மாபெரும் கண்காட்சியினை தொடங்கி வைப்பதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் MSME நிறுவனங்கள் 3 இல் 1 பங்கு உற்பத்தி செய்கின்றன. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யும் பொருட்களில் 45 சதவீதம் MSME நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் ஆகும். கடந்த ஆண்டு இந்தியா 112 பில்லியன் அமெரிக்க டாலருக்கு பொறியியல் பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. இதில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 16 பில்லியன் டாலர் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 2- ஆம் இடம் வகிக்கும் தமிழ் நாடு, ஏற்றுமதியில் இந்தியாவிலேயே 3-வது பெரிய மாநிலமாக திகழ்கிறது. தமிழ் நாட்டில் வாகன உற்பத்தி, தோல் பொருட்கள்,ப் ஜவுளி, கணினி, தொலைத்தொடர்பு சாதனங்கள், தகவல் தொழில்நுட்பம், பயோ டெக்னாலஜி, நனோ டெக்னாலஜி என அனைத்து தொழில்களிலும் நமது MSME நிறுவனங்கள் சிறந்து விளங்குகின்றன. தொழில் வளர்ச்சின் முக்கியத்துவத்தை உணர்ந்த முதல்வர் கடந்த நிதி நிலை அறிக்கையில் தொழில் வளர்ச்சிக்காக ரூ.4 ஆயிரத்து 617 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல்வர் தமிழ் நாட்டை ஏற்றுமதியில் முதன்மை மாநிலமாக கொண்டு வர தமிழ்நாடு ஏற்றுமதி செயல் திட்டம்-2021 வெளியிட்டார்கள். இதனை செயல்படுத்தும் விதமாக தமிழ் நாட்டில் மாவட்ட மற்றும் கிராமப்புற அளவில் தயாரிக்கப்படும் பொருட்களை, உலகெங்கும் ஏற்றுமதி செய்ய 10 இடங்களில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் ஏற்றுமதி மையங்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், MSME நிறுவனங்களுக்கு ஏற்றுமதி குறித்த ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்க, கோயம்புத்தூர், திருச்சி, ஒசூர், மதுரை ஆகிய 4 இடங்களில் வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி தகவல் மையங்கள் அமைக்க, ரூ. 16 கோடியே 69 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த நோக்கத்தினை சிறந்த முறையில் செயல்படுத்திட MSME துறையின் FaMe-TN வாயிலாக மாவட்ட தொழில் மைய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு RBI, IFSCA, FIEO ஆகிய நிறுவனங்கள் மூலம் பல கட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சி பெற்ற அலுவலர்கள், ஏற்றுமதி மண்டலங்கள் மாவட்ட ஏற்றுமதி மேம்பாட்டு மையங்கள் வாயிலாக, MSME நிறுவனங்களை ஏற்றுமதிக்கு ஊக்குவிப்பதோடு, ஆலோசனைகளையும், உதவிகளையும் வழங்குவார்கள். MSME தொழில் நிறுவனங்களின் தயாரிப்புகளை உலகம் எங்கும் சந்தைப்படுத்த MSME கூட்டமைப்பின் பிரதிநிதிகளை ஏரோ ஸ்பேஸ் தொழிலுக்காக செக் குடியரசுக்கும், பாதுகாப்பு உபகரணங்களுக்காக இஸ்ரேல் நாட்டிற்கும், தமிழ்நாட்டின் தொழில்முனைவோர்கள், தொழில் கூட்டமைப்பினர் அரசு நிதியுதவியுடன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மேலும்,உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும், MSME நிறுவனங்களின் working capital நடை முறை மூலதன சிக்கலை தீர்ப்பதற்காக,Tamil Nadu TReDS எனும் புதுமையான திட்டம் தமிழ்நாடு முதல்வர் துவக்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் MSME நிறுவனங்கள் உள்நாட்டில் விற்பனை செய்த ரூ. 155 கோடிக்கும் அதிகமானவிலைப் பட்டியல்களுக்கு விற்பனை தொகை வழங்கப்பட்டுள்ளது, TN-TReDS தளத்தில் இணைந்துள்ள 14 வங்கிகள் தங்களுடைய கடன் இலக்கைரூ. 2 ஆயிரத்து 120 கோடி அளவிற்கு நிர்ணயித்துள்ளன.
இதே போன்று, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த பொருட்களுக்கான தொகையினை குறித்த காலத்தில் பெறுவதற்கு ஏதுவாக FSCA ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பன்னாட்டு வர்த்தக நிதி சேவைகள் தளம் குறித்த விழிப்புணர்வும், ஆலோசனைகளும், MSME தொழில் நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளோம். இந்த முயற்சியை முன்னெடுக்கும் முதல் மாநிலமாகதமிழ் நாடு விளங்குகிறது. தமிழ் நாட்டிலுள்ள MSME நிறுவனங்களுக்கு பிணையில்லா கடன் எளிதில் கிடைக்கும் வகையில் தமிழ்நாடு முதல்வர் ரூ. 100 கோடி நிதியில் "தமிழ்நாடு கடன் உத்திரவாத திட்டம்" துவக்கி வைக்கப்பட்டது.
இந்தியாவிலேயே MSME நிறுவனங்களுக்கு 90% வரை கடன் உத்திரவாதம் வழங்கி வரும் ஒரே மாநிலம் தமிழ்நாடு தான் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். MSME நிறுவனங்கள் உரிமங்கள் பெற்று எளிதாக தொழில் தொடங்கும் வகையில் முதல்வர் துவங்கப்பட்ட Single Window Portal 2.ஓ மூலம் இதுவரை 12 ஆயிரத்து 113 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 10 ஆயிரத்து 947 தொழில் முனைவோருக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளில், 3 வகையான சுயவேலைவாய்ப்பு திட்டங்களின் கீழ்ரூ. 683 கோடி மானியத்துடன் ரூ.2 ஆயிரத்து 756 கோடி வங்கிக் கடன் உதவி வழங்கப்பட்டு 19 ஆயிரத்து 332 இளைஞர்கள் புதிய தொழில் முனைவோர்களாக உருவாக்கப்பட்டுள்ளனர் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொண்டார்.
MSME நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக, 8 ஆயிரத்து 150 நிறுவனங்களுக்கு ரூ.519 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. MSME தொழில்களின் வளர்ச்சிக்காக முதல்வர், 171.24 கோடி மதிப்பீட்டில், 254.95 ஏக்கர் பரப்பளவில் 5 புதிய தொழிற்பேட்டைகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. 537.72 ஏக்கர் பரப்பளவில் 8 புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்ல, திருமுடிவாக்கம், திண்டிவனத்தில், ஆகிய இடங்களில் Mega Clusters அமைக்க ரூ.198 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.15 மாவட்டங்களில், ரூ.50 கோடி மதிப்பீட்டில் 20 குறுங் குழுமங்கள் Micro Clusters செயல்படுத்திட முதல்வர் ஆணைகள் வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு தமிழ் நாட்டில் உள்ள MSME தொழில்களின் வளர்ச்சிக்காகவும், ஏற்றுமதிக்காகவும் மானியத்துடன் கடன் உதவி, ஊக்க மானியம் புதிய தொழில் பேட்டைகள், தொழில் மனை வாங்க கடன் உதவி, கடன் உத்தரவாதம் பொது உற்பத்தி மையங்கள், பொது வசதி மையங்கள், ஏற்றுமதி மண்டலங்கள் மாவட்ட ஏற்றுமதி மேம்பாட்டு மையங்கள் என பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து முதல்வர் அவர்களால் நிறைவேற்றப்படுகிறது.
முதல்வர் அவர்களின் 2030-ல் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கினை அடைய, MSME நிறுவனங்கள் உள்நாட்டு உற்பத்தியிலும்- ஏற்றுமதியிலும் முன்னேற வேண்டும் அதற்கு முதல்வர் அவர்களும் தமிழ்நாடு அரசும் என்றும் துணை நிற்கும் என உறுதி கூறினார்".
நிகழ்ச்சியில் EEPC தலைவர் அருண்குமார் கரோ-டியா, வர்த்தக மற்றும் கூடுதல் செயலர் சத்தியா சீனிவாசன் இ.ஆ.ப, தமிழ்நாடு அரசின் MSME துறை அரசு செயலர் அருண் ராய் இ.ஆ.ப, தொழில் வணிக கூடுதல் ஆணையர் கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப, EEPC முதன்மை துணை தலைவர் பங்கஜ்ஜாதா, EEPC துணை தலைவர் ஆகாஷ் ஷா, தொழில் அதிபர்கள், தொழில்முனைவோர்கள், ஏற்றமதியாளர்கள், ஒன்றிய மற்றும் மாநில அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் காண்க:
தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை- சாலையில் பாலைக்கொட்டி போராட்டம்! சிக்கலில் ஆவின் நிறுவனம்
ஏப்ரல் 1 முதல் ரேஷன் கடைகளில் இதை வாங்க மறக்காதீங்க.. மாவட்ட ஆட்சியர் தகவல்
Share your comments