வருகின்ற ஜூலை 27ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரையிலான 3 நாட்களுக்கு திருச்சியில் மாநில வேளாண் கண்காட்சி என்ற வேளாண் சங்கமம் நடைபெற இருக்கிறது.
வேளாண் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்பொழுது மாநில வேளாண் கண்காட்சி திருச்சியிலும், உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனங்கள், வாழை மலர்களுக்கான கண்காட்சி சென்னையிலும், பலாவுக்கான கண்காட்சி பண்ருட்டியிலும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
கடந்த ஜூன் 8 மற்றும் 9 ஆகிய இரு தேதிகளில் சென்னையில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான வேளாண் துறை சார்ந்த கண்காட்சி நடைபெற்றது. அதேபோல் வேளாண் வணிகத் திருவிழாவும் மிக வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இதில் சுமார் ரூ.2.5 கோடி மதிப்பிலான மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வேளாண் கண்காட்சியின் தொடர்ச்சியாக, ஜூலை 27ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரையிலான 3 நாட்களுக்குத் திருச்சியில் மாநில வேளாண் கண்காட்சி என்ற வேளாண் சங்கமம் நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள் குறித்த கூட்டம் தலைமைச் செயலகத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்று நிறைவடைந்து இருக்கிறது.
அமைச்சர் தலைமையிலான இக்கூட்டத்தில், திருச்சி வேளாண் கண்காட்சியில் விதைகள், தென்னங்கன்றுகள், பழமரக்கன்றுகள் ஆகியவற்றை காட்சிப்படுத்துவதுடன், அவற்றை விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும் என்றும், அனைத்து வேளாண் இயந்திரங்களையும் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும் வேளாண் துறை சார்ந்த அதிகாரிகளை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
மேலும், விவசாயிகளுக்கான அரசின் அனைத்து திட்டங்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளும் வகையில் கண்காட்சி அமைத்திட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேன்று உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தங்களின் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை விற்பனை செய்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு உள்ளார்.
விவசாயிகளுக்கான புதிய தொழில்நுட்பங்கள், மின்னணு விற்பனை, வேளாண் காடுகள், தோட்டக்கலை தொழில்நுட்பம், நவீன வேளாண் இயந்திரங்கள், வேளாண் ஏற்றுமதி முதலான வேளாண்மை சார்ந்த தலைப்புகளில் கருத்தரங்களும் நடைபெற இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
திருச்சியில் ஒரு நாள் தேனீ வளர்ப்பு பயிற்சி|விவசாயிகள் பதிவு செய்யலாம்!
Share your comments