வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மானியக் கோரிக்கையினை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமசந்திரன் தாக்கல் செய்து வருகிறார். அதில் நில உடமைகளில் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படும் எனவும், நில ஆவணங்களை அறிய புதிய செயலி உருவாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நடப்பாண்டிற்கான பட்ஜெட்டினை நிதியமைச்சர் தாக்கல் செய்த நிலையில், துறை ரீதியாக மானியக் கோரிக்கையினை அமைச்சர்கள் தாக்கல் செய்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் 2023-2024 ஆம் ஆண்டிற்கான வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கையினை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். முன்னதாக இன்று சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கையில் குறிப்பிட்ட முக்கிய அறிவிப்புகள் பின்வருமாறு-
ரூ.12.50 கோடியில் பேரிடர் மேலாண்மை மற்றும் தொடர் கண்காணிப்பு அமைப்புகளை வலுப்படுத்தி புதிய TN-alert கைபேசி செயலி மற்றும் மேம்படுத்தப்பட்ட TN-smart செயலி உருவாக்கப்படும் என தெரிவித்தார். ரூ.16 கோடியில் இரண்டு பேரிடர் மீட்பு மையங்கள் அமைக்கப்படும். மயிலாடுதுறை மாவட்டம் திருமைலாடி மற்றும் முதலைமேடு கிராமங்கலில் வெள்ள, மழை காலங்களில் பாதுகாப்பாக பொதுமக்களை தங்க வைக்க இந்த பேரிடர் மீட்பு மையங்கள் அமைக்கப்படும் எனத்தெரிவித்துள்ளார்.
ரூ.7.31 கோடியில் டிஜிட்டல் ரிப்பீட்டர்கள்- தடையற்ற தொலைத் தொடர்பை உறுதிப்படுத்தும் வகையில் 31 மாவட்டங்களில் அனலாக் VFH ரிப்பீட்டர்கள், டிஜிட்டல் ரிப்பீட்டர்களாக மேம்படுத்தப்படும் என்றார். நில அளவை மற்றும் நில ஆவணங்கள் தொடர்பான இ-சேவைகள் குறித்த தகவல்களை அளிக்கும் பொருட்டு நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்கத்தில் தொலைபேசி அழைப்பு மையம் நிறுவப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
புல எண், உரிமையாளர் பெயர் இடம் சார்ந்த நில ஆவணங்களின் விவரங்களை அறிய புதிய செயலி உருவாக்கப்படும். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 23 கிராமங்களில் 15,000 குடும்பங்கள் பயனடையும் வகையில் ரயத்துவாரி மனைப்பட்டா வழங்கப்படுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஈரோடு, கரூர், தஞ்சாவூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள சுமார் 4,655 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படும்.
தமிழ்நாடு நிலச்சீர்த்திருத்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குடும்பம் என்ற வரையறையில் இருந்து திருமணமாகாத மகள்கள் மற்றும் பேத்திகள் என்ற சொற்கள் நீக்கப்பட்டு மைனர் பிள்ளைகள் மற்றும் மைனர் பேரன், பேத்திகள் எனத்திருத்தம் மேற்கொள்ளப்படும். குடிசைத் தொழிலில் ஈடுபட மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வீட்டுமனைகள் வழங்கப்படும்.
அனைத்து சான்றிதழ்கள், உரிமங்கள், ஆவணங்களை இணையவழியாகப் பெறும் வகையில் வருவாய் நிர்வாகம் முழுவதுமாக 100 சதவீத கணினிமயமாக்கப்படும் மேலும் கடலூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றின் இடதுக்கரை ரூ.14.50 கோடியில் ஆலைக்கற்கள் கொண்டு பலப்படுத்தப்படும் எனத்தெரிவித்துள்ளார் அமைச்சர்.
மேலும் காண்க:
கடுமையான மனநல நெருக்கடியில் இந்தியர்கள்- ICMR கொடுத்த எச்சரிக்கை
Share your comments