Fertilizer shortage for agriculture? Collector explanation!
தஞ்சையில் பசுமைத் தமிழகம் திட்டம் சார்பாக மரம் நட்டார்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மைசூரு தசரா விழாவைத் தொடங்கி வைத்தார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, கொப்பரை தேங்காய் கொள்முதலுக்குக் கால நீட்டிப்பு, இனி விவசாயத்திற்கு உரப் பற்றாக்குறை இருக்காது: ஆட்சியர் அறிவிப்பு, தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் ஆகிய வேளாண் தகவல்களை இப்பதிவு வழங்குகிறது.
தஞ்சையில் பசுமைத் தமிழகம் திட்டம் சார்பாக மரம் நட்டார்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!
சென்னையில் கடந்த வெள்ளியன்று பசுமை தமிழகம் திட்டத்தினைத் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து தமிழகத்தின் தஞ்சை பகுதியில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் மரம் நட்டு வைத்தார் தமிழகக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி. தமிழகத்தின் வனப்பரப்பை 33%-ஆக உயர்த்திட இந்த மரக்கன்று நடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்றே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மரம் நடுதல் தொடர்ந்து நடைபெற இருக்கிறது.
மைசூரு தசரா விழாவைத் தொடங்கி வைத்தார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு!
கர்நாடக மாநிலம் மைசூரு நகரில் ஆண்டுதோறும் விஜயதசமியை முன்னிட்டு 10 நாட்கள் அரசு சார்பில் தசரா 10 நாட்கள் அரசு சார்பில் தசரா விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டு உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவினை இன்று தொடங்கி வைத்தார் இந்தியக் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு. இது 412-வது தசரா விழாவாகும். கடந்த 2 ஆண்டாக கொரோனா பரவல் காரணமாக எளிமையாக கொண்டாடப்பட்டதால், இந்த ஆண்டு தசரா விழாவை வெகுவிமரிசையாக கொண்டாட மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்நிகழ்வில் கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் பசவராஜ் பொம்மை, பிரகலாத் ஜோஷி உள்பட 7 மத்திய அமைச்சர்கள், மாவட்ட பொறுப்பு மந்திரி எஸ்.டி.சோமசேகர், கலெக்டர் பகாதி கவுதம், மேயர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொப்பரை தேங்காய் கொள்முதலுக்குக் கால நீட்டிப்பு!
விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் கொப்பரை கொள்முதல் காலம் இந்த மாதம் 30ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்று தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவத்துள்ளார். மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையான கிலோ ஒன்று க்கு ரூ. 105.90 விலையில் அரவை கொப்பரை கொள்முதல் செய்யப்படுகிறது. கொப்பரை கொள்முதல் காலம் பிப்ரவரி 2ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை என நடைமுறையில் இருந்த நிலையில், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு இத்திட்டம் இந்த மாதம் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இனி விவசாயத்திற்கு உரப் பற்றாக்குறை இருக்காது: ஆட்சியர் அறிவிப்பு!
இராமநாதபுரம் மாவட்டத்தில் சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு வழங்க உரங்கள் தயார் நிலையில் இருப்பதாக ராமநாதபுர மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் நகர் பகுதியில் உள்ள மேலாண்மை துறையின் உரக்கிடங்கு, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தபோது இவ்வாறு கூறியுள்ளார். எனவே விவசாயிகளுக்கு எந்தவித உரத்தட்டுப்பாடு இன்றி நடப்பு சம்பா பருவ சாகுபடிக்கு தேவையான உரங்கள் வழங்க தயார் நிலையில் உள்ளன. விவசாயிகள் முழுமையாக பயன்படுத்தி வேளாண் பணிகளை ஆர்வமுடன் மேற்கொண்டு பயன்பெற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டின் காரணமாக தமிழகத்தில் 14 மாவட்டங்களிங் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 26-ஆம் நாளான நாளைத் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க
Share your comments